வண்ணநிலவன் சமீபத்தில் கி.ரா மறைந்த போது ஏதோ எழுதி அனைவரிடமும் வாங்கி கட்டிக் கொண்டார். வண்ணநிலவனின் புனைவுகள் எதையும் படித்ததில்லை. வண்ணநிலவன் துர்வாசர் என்ற பெயரில் துக்ளக் இதழில் எழுதிவந்த அரசியல் கட்டுரைகளை மட்டுமே படித்திருக்கிறேன். துர்வாசரின் கட்டுரைகள் கொஞ்சம் கடுகடு ரகத்திலேயே இருக்கும், கோபம், கடுப்பு, வயதானவர்களுக்கு வரும் இயல்பான எரிச்சல் கலந்தது போலவே இருக்கும். அதுவே இவரின் புனைவுகளை படிக்க கொஞ்சம் தடையாக இருந்தது. இதோடு சேர்ந்து ஜெயமோகனும் இவரை மிகக்கடுமையாக விமர்சித்து இருந்தார். ஆனால் வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவலைப் பற்றியும், எஸ்தர் சிறுகதையை பற்றியும் பலர் சிறப்பாகவே கூறியிருந்தனர். எம்.எல் நாவலே நான் படிக்கும் வண்ணநிலவனின் முதல் நாவல்.
எம்.எல். மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட். கம்யூனிசம் என்பதே நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று என்பதை இன்று அனைவரும் உணர்ந்து இருப்பார்கள். அதிலும் ஆயுதப்போராட்டம் என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்பதும் மிகத்தெளிவாக புரிந்திருக்கும். கம்யூனிசத்தின் கோர முகத்தை பஞ்சம் படுகொலை பேரழிவு என்ற புத்தகத்தில் அரவிந்தன் நீலகண்டன் ஆதரங்களுடன் விவரித்திருக்கின்றார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் சில முகங்களை பற்றி ஜெயமோகன் பல கட்டுரைகளில் எழுதியிருக்கின்றார், அவரது பின்தொடரும் நிழலின் குரல், கட்சி தொண்டர்களின் பரிதாப நிலையைப் பற்றி பேசுகின்றது. ஒநாய் குலச்சின்னம், புலிநகக் கொன்றை போன்ற நாவல்களிலும் கம்யூனசத்தின் கோரமுகத்தை காணலாம்.