சீரியஸ் புத்தகங்களாக் படித்து படித்து மண்டை காய்ந்து போயிருந்தது. ஜாலியான, விறுவிறுப்பான கதைகளை படிக்க வாய்ப்பில்லை. அது போன்ற கதைகளை ஒருதடவை அல்லது இரண்டு தடவை படிக்கலாம். பணம் கொடுத்து வாங்க மனமில்லை. என்ன செய்ய என்று யோசித்த போது கண்ணில் பட்டது கிண்டில் அன்லிமிட்ட. மாதம் 199 மட்டும், கிண்டில் அன்லிமிட்டட் வகையில் வரும் புத்தகங்கள் அனைத்தையும் இலவசமாக படிக்கலாம். நல்ல சான்ஸ். கிண்டில் வாங்க வேண்டும் என்றும் நீண்டநாள் ஆசை. இரண்டையும் சேர்த்ததில் ஏராளமான புத்தகங்கள் கையில். வகையாக மூன்று நாள் பொங்கல் விடுமுறை வேறு. படித்து தள்ளிவிட்டேன். உண்மையில் சொல்லப்போனால், சிறு வயதில் படித்த அந்த வேகம் மீண்டும் கிடைத்த குஷி. சும்மா சொல்லக்கூடாது கிண்டில் சூப்பர்தான். கண் வலி, கை வலி ஏதுமில்லை. புத்தகத்தில் படிப்பது போன்ற பிரமையும் தருகின்றது. என்ன சைஸ் தான் கொஞ்ச சிறியது.
முதலில் படிக்க நினைத்தது மசாலா கதைகள்தான். சிறுவயதில் விகடனில் தொடராகவந்த ரகசியாமாய் ஒரு ரகசியம். விகடனை வாரா வாரம் எதிர்பார்க்க வைத்த ஒரு தொடர். ஒரு கச்சிதமான மர்ம நாவல். அதில் ஆரம்பித்து இந்திரா செளந்திரராஜனின் பெரும்பாலான நாவலகளை படித்து முடித்தேன். மூன்று நாட்கள் போனது தெரியவில்லை.
க்ரைம் கதைகள் எழுதுவது ஒரு வகை.சில பல கொலைகள், அதற்கு சில காரணங்கள். பணம், புகழ், பதவி. இவை பெரும்பாலும் நவீன யுக கதைகள். அதில் கொஞ்சம் அமானுஷ்யத்தை சேர்த்தால், இவரின் கதைகள். ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிராபகர், சுபா இவர்களின் கதைகள் ஒரு வகை. இந்திரா செளந்திரராஜன் பாணி தனி பாணி. இவரை போன்று எழுதும் மற்ற எழுத்தாளர்கள் மிகக்குறைவு. கலாதர் என்று ஒருவரின் சில கதைகள் படித்திருக்கின்றேன், பிறகு தெலுங்கு எழுத்தாலர் எண்டமூரி வீரேந்திரநாத். இவர்களின் எழுத்து நமது பாரதத்திலிருக்கும் பல அமானுஷ்ய, பழைய விஷ்யங்களை நவீன குற்றங்களுடன் கலந்தளிப்பது. முடிவில் எது உண்மை என்பதை வாசகர் யூகத்திற்கே விட்டுவிட்டு போவது. உதாரணம் எண்டமூரி வீரேந்திரநாத்தின் துளசி. சைக்கியாட்ரிஸ்ட், மந்திரவாதி, டாக்டர் மூவருமே தன் வெற்றி என்பதாக கதை முடியும்.