15 மார்ச் 2014

கொலையுதிர் காலம் - சுஜாதா

பரபரபரபரபரபர

மேற்கண்ட வரியை சுமார் அத்தியாத்திற்கு ஒன்று என்று படித்துக் கொள்ளவும். அத்தனை பரபரப்பு. நேற்று இரவுதான் வந்தது, பேய்க்கதை என்பதால் இரவில் படிக்காமல் பகலில் படித்தேன். இரண்டு மணி நேரத்தில் படித்து முடித்துவிடலாம். 

சுஜாதாவின் வழக்கமான கணேஷ் வசந்த் கதைகளில் எனக்கு தெரிந்து இதுதான் செம விறுவிறுப்பு. அமானுஷ்ய கதைகள் என்றாலே ஒரு பரபரப்பு இருக்கும். அதுவும் சுஜாதாவின் கதை என்றால் இன்னும் வேகம்.

லீனா வியாச குடும்பத்தின் வாரிசு. அவளது பதினெட்டாம் வயதில் குடும்ப சொத்துக்கள் அனைத்தும் அவளின் சித்தப்பா குமார வியாசரிடமிருந்து வர வேண்டும். அதை சரிபார்க்க லீனாவின் காதலனால் அனுப்பப்படும் கணேஷ் வசந்த் அங்கு விபரீத சூழலில் மாட்டிக்கொள்கின்றனர். லீனா மீது ஆவி இறங்கி ஒருவனை அடித்து ரத்தம் குடித்தது என்று குமார வியாசன் சொல்வதை ஆராய்வதில், அவர்கள் கண்ணிற்கும் அந்த ஆவி தரிசனம் கிடைக்கின்றது. மற்றொரு கொலை. 


அனைத்தையும் செய்வது பேய் என்று அனைவரும் நம்ப, கணேஷால் நம்ப முடியாமல் தேடுகின்றான். அறிவியல் வழியில் கணேஷும், அமானுஷ்ய வழியில் வசந்தும் போக, முடிவு, புத்தகத்தில் படித்துக் கொள்ளுங்கள்.

தலைப்பு என்னவோ கொலையுதிர் காலம், விழுவது இரண்டோ மூன்றோ கொலைகள். பத்து பதினைந்து விழுந்தால்தானே தலைப்பிற்கு பொருந்தும்.

தொடர்கதைக்கே தேவையான திடுக்கிடும் திருப்பங்கள்தான் பக்கத்தை திருப்பியவுடன் சப்பென்று போகின்றது. சாண்டில்யன் கதைகளில் வருவதுபோல கத்தி வந்து பாய்வது, கை வந்து விழுவது என்று போகின்றது. ஜெயமோகனின் நான்காம்கொலை நினைவிற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை

வசந்த் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். பல முழுமையான ஜோக்குகள் உள்ளன. குமுதம் என்பதால் தப்பித்துவிட்டது. 

நம்மால் முடிவையும், பேய் விவகாரங்களை யூகிக்க முடிந்தாலும், அதற்கு நேரம் தராமல் கதை பறக்கின்றது. குற்றவாளியை கண்டு பிடித்த பின்னால் வரும் இரண்டு அத்தியாயங்கள்தான் கொஞ்சம் மசமசவென்று பொங்கல் போல இருக்கின்றது. பேய் தோன்றுவதன் பின்னால் இருப்பதை கதையில் சில விஷயங்களால் சரி செய்துவிட்டார். ஆனால் முடிவு வரை பேய் உள்ளதா இல்லையா என்று கூறாமல் புத்திசாலித்தனமாக தவிர்த்துவிட்டார். இது போன்ற முடிவுகளைத்தான் பல நாட்களாக இந்திரா செளந்திரராஜன் தந்துவருகின்றார். எனக்கென்னவோ பேய் இருக்கு போலத்தான் தோன்றுகின்றது!!

கதையின் பலம் அதன் வேகமும் விறுவிறுப்பும் தான். தொடராக வரும் போது பலரை டென்ஷாக்கியிருக்கும். இரண்டாம் முறை படித்தாலும் போரடிக்காது, காரணம் கதை தன் அனைத்து முடிச்சுகளையும் அவிழ்ந்து முடிக்கவில்லை. வாசகர்களுக்கு கொஞ்சத்தை தந்துவிட்டது. அவரவர் வசதிக்கு ஏற்ப முடிவை வைத்துக் கொள்ளலாம். 

பயங்கர டெட் லைனில் எழுதியிருப்பாரோ என்னவோ? நடுவில் ஒரு அத்தியாத்தின் முடிவிற்கும் அடுத்த அத்தியாத்தின் ஆரம்பத்திற்கும் நடுவே கொஞ்சம் கதையை காணோம். தொடர்கதையில் இது எல்லாம் சகஜம் என்றாலும், புத்தகத்திலுமா? ஜீனோ கதையிலும் பெரிய ஓட்டை இதுபோல.

"நீங்கள் எதை நம்புகின்றீர்கள் அறிவியலையா, பேய் பிசாசுகளையா என்ற கேள்வி விடையளிக்கப்படாமலே இருக்கிறது என்று சிலர் குறைப்பட்டுக் கொண்டார்கள். அந்தக் கேள்விக்கு அடுத்த நூற்றாண்டிலும் அறுதியாக பதில் கிடைக்காது என்பதே என் கருத்து" முன்னுரையில் சுஜாதா. 

எக்காலத்திலும் கிடைக்காது என்பது என் கருத்து

உயிர்ம்மை பதிப்பகம் - விலை 250.

4 கருத்துகள்:

 1. தொடர்கதையாக வந்தபோதே படித்தது. அதையே பைண்ட் செய்தும் வைத்திருக்கிறேன். சிரிக்க வைத்த வசந்த் ஜோக்குகளில் "ஆ... கிள்றது... கிள்றது..." வும் ஒன்று! இவர் சொல்லியிருக்கும் அந்த ஹோலோக்ராம் முப்பரிமாண வடிவம் குறித்து அதற்குப் பல வருடங்கள் முன்பே தமிழ்வாணன் தனது 'கருகிய கடிதம்' கதையில் சொல்லியிருக்கிறார். ஜெயமோகன் ஒப்பீடு பொருந்தாது. கொலையுதிர்காலம் அதற்கு முன்னரே எழுதப் பட்டது. உண்மையிலேயே மிகவும் சுவாரஸ்யமான கதை. //குமுதம் என்பதால் தப்பித்து விட்டது// ஆம்.ஒரு முக்கியமான சொல்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழ்வாணன் கதையில் வருவது ஹோலோக்ராமா இல்லை ப்ரொஜெக்ட்டரா? ஒரு கதையில் சினிமா ப்ரொஜெக்ட்டரை வைத்து, பனிமூட்டத்தை திரையாக மாற்றி பேயை கொண்டு வருவார்கள். எப்போதோ பள்ளியில் படிக்கும் போது படித்தது.

   நீக்கு
 2. நான் பலமுறை படித்த மிகவும் விறுவிறுப்பான நாவல்

  பதிலளிநீக்கு
 3. உங்கள் வலைப்பூவில் followers widget சேருங்கள் சார்

  பதிலளிநீக்கு