தமிழில் வந்த சரித்திர நாவல்களை பட்டியலிட்டால் எப்படியும் ஒரு 100 நாவலாவது தேறும். நான் முதலில் படித்த சரித்திரக்கதை என்னவென்று யோசித்தால்; பெரும்பாலானோர் கூறும் பதில்தான் "பொன்னியின் செல்வன்". ஏழாவது படிக்கும் போது நூலகத்தில் படித்தது. மீண்டும் அதை +2 படிக்கும் போது படித்தேன். கல்லூரி படிக்கும் போது சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு. வேலையில் சேர்ந்த பின் நிறைய சாண்டில்யன் கதைகள். என் நண்பனிடம் நிறைய சாண்டில்யன்கள் இருந்தன்.
கல்கியின் மூன்று கதைகளும் வேறுபட்டவை. முதல் கதையான பார்த்திபன் கனவு ஒரு பயிற்சி கதைபோலத்தான், சிவகாமியின் சபதம் - பொன்னியின் செல்வனும் இரு வேறுபட்ட வடிவங்கள்.சிவகாமியின் சபதம் ராமாயணச்சாயலும், பொன்னியின்செல்வன் மகாபாரதச்சாயலும் கொண்டது என்று என் அபிப்ராயம். சாண்டில்யனுக்கு ஒரு தனி பாணியே இருந்தது. கதாநாயகன் ஒரு சூப்பர் ஹீரோ. எல்லாம் தெரியும் அவனுக்கு, எல்லாம் ஜெயம், யாரவது உதவுவார்கள். ஜேம்ஸ்பாண்ட் மாதிரி பெண் (அ) பெண்கள் உதவி உண்டு. கண்டிப்பாக கதையில் கொஞ்சம் சரித்திரமும் உண்டு. முதல் இரண்டு கதைகள் சுவாரஸ்யமாக இருந்தாலும் பின்பு அந்த டெம்ளேட் பழகி விட்டது. கதையை சுலபமாக யூகிக்கமுடிந்தது. அங்கங்கு போரடித்தாலும் படிக்கலாம் என்றே தோன்றும்.