நண்பர் ஸ்ரீராம் காலச்சக்கரம் நரசிம்மா என்னும் எழுத்தாளரைப் பற்றி முன்னர் குறிப்பிடிருந்தார். இந்திரா செளந்திரராஜன் பாணி எழுத்தாளர் என்று நினைத்தேன். உறவினர் வீட்டில் அவர் எழுதிய புத்தகம் ஒன்று கிடைத்தது. வானதி பதிப்பகம் வெளியிட்டிருந்தது. நரசிம்மா, பிரபல சினிமா இயக்குனர் சித்ராலயா கோபுவின் புதல்வர், இவரின் தாயரும் அறியப்பட்ட நாவலாசிரியர். கமலா சடகோபன்.
முன்னுரையிலேயே சாண்டில்யன் வாசகர்கள் தலையில் நறுக்கென்று கொட்டி விடுகின்றார். பின்னர் வரும் பக்கங்களில் கல்கி வாசகர்களை கொட்டு கொட்டு என்று தலை வீங்கும் அளவிற்கு கொட்டி விடுகின்றார். சரித்திர கதைகளுக்கு தமிழில் முன்னுதாரணம் என்றால் கல்கியும், சாண்டில்யனும். இவர்கள் பாணியிலேயே பெரும்பாலான கதைகள் எழுதப்பட்டன. விதிவிலக்குகள் சில டணாய்க்கன் கோட்டை, வீரபாண்டியன் மனைவி, ரத்தம் ஒரே நிறம், வானம் வசப்படும், மானுடம் வெல்லும், காவல்கோட்டம் போன்றவை. இந்த நாவல்கள் அண்மை கால சரித்திர குறிப்புகளை வைத்து பின்னப்பட்டவை.
ஆனால் சாண்டில்யன், கல்கி எழுதியது சோழ, பாண்டிய சரித்திரம். அந்த காலத்தில் கிடைத்த ஆதாரங்களையும், அக்காலத்து ஆய்வு முடிவுகளையும் வைத்து எழுதினார்கள். இன்று ஐம்பது வருடங்களில் பல புதிய ஆதாரங்கள் கிடைத்திருக்கலாம். இருந்தாலும் அக்கால சரித்திரத்தை எழுதுவது கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும் என்ன செய்யலாம்
ஸ்பாய்லர் அலர்ட். பல திடுக்கிடும் திருப்பங்கள், அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள், யூகிக்கவே முடியாத பல முடிச்சுகளை பற்றி எழுதப்பட்டுள்ளது. அடுத்து வரும் பகுதி நடை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அடிக்கடி இது மாதிரி எழுதுவார், அந்த பாதிப்பில் எழுதியது. நாவலும் அதுமாதிரிதானே பொன்னியின் செல்வனின் பாதிப்பில் எழுதியது. அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள்.