ஆங்கிலத்தில் பல சுவாரஸ்யமான நாவல்களை எழுதியவர் டான் ப்ரெளன். பெரும்பாலும் சுவாரஸ்யமானவை, ஆனால் ஒரே சட்டகத்தில் அடங்கும் கதைகள். விடை தெரியாத சில அமானுஷ்ய விஷயங்கள், சில ரகசியங்கள், புதிர்கள், பழைய பாடல்கள், கட்டுமானங்கள் போன்றவற்றை வைத்து பின்னப்படும் கதைகள். புதிர்களை விடுவிக்க அந்த துறை சார்ந்த சிலர் உதவ, சுபம். கதை சொல்லலும் ஒரே முறையில். சினிமாக்களில் டைட்டிலுக்கும் முன்னால் வருவது போன்ற ஒரு காட்சித்துண்டு, அது பின்னால் எங்காவது ஒட்ட வைக்கப்படும். ஒன்றிரண்டு நாட்களில் நடந்து முடியும் கதை.
கதை நாயகன் ராபர்ட் லாங்க்டன் சுழலில் வந்து சிக்கி கொள்வார் . கூடவே அவருக்கு உதவ ஒரு பெண். வில்லன் கூட்டத்தில் ஒருவன் இவர்களுடனே எங்காவது சுற்றிக் கொண்டிருப்பான், அவனை ஒரு சில்ஹவுட்டில் காட்டுவார்கள். வில்லன் பெரும்பாலும் தலைமறைவாக,தொலைபேசியில் அல்லது ஒரு இருட்டில் முகமறியாமல் இருப்பான். நடுநடுவே புதிர் குழப்பமாக இருக்கும் போது ராபர்ட்டின் நினைவுகள் பின்னோக்கி செல்லும், ஏதாவது ஒரு நிகழ்வில் விடை கிட்டும். பரபரப்பான க்ளைமேக்ஸ், சினிமா பாணி. இதுதான் டான் ப்ரெளன் ஸ்டைல்.
ஜெயமோகன் ஒரு முறை "தமிழலும் பல டான் ப்ரெளன்கள் உருவாக வேண்டும்" என்று எழுதியிருந்தார். கதையின் ஆசிரியர் அதை சீரியசாக எடுத்துக் கொண்டுவிட்டார் பொல. அதே பாணி அப்படியே. ஆசிரியர் பல துறைகளில் பல விஷயங்களை படித்திருக்கின்றார். ஆராய்ச்சி துறையில் இருக்கின்றார் என்று அவரைப் பற்றிய தேடல்கள் சொல்கின்றது. அதனால் இயல்பாகவே விஞ்ஞான விஷயங்களில் பல விஷயங்கலை அறிந்துள்ளார், தமிழ்ப்பாடல்கள், பூகோளம், சரித்திரம், எண் கணிதம், வடிவ கணிதம் என்று அவர் அறிந்த பல விஷயங்களை வைத்து கதையை பின்னியிருக்கின்றார்.