வயது வந்தவர்களுக்கு மட்டும் - கி.ராஜநாராயணன்
தலைப்பே சொல்லும் என்ன மாதிரியான புத்தகம் என்று. பின்னடித்து ரகசியமாய் தொங்கவிடும் புத்தகமல்ல.
மெலிதான காமம் கலந்த கதைகள் பல படித்திருப்போம், காமத்தை அடிப்படையாக கொண்டும் கொஞ்சம் பலான புத்தகங்களுக்கு நெருங்கி வரக்கூடிய புத்தகங்களும் உண்டு, படிப்பவர்களை அதிர்ச்சியாக்கவே வலிய புகுத்திய கதைகளும் உண்டு. இவை அந்த மாதிரியல்ல.
கிராமத்து பக்கங்களில் சில வசவுகள், சில பழமொழிகளை ஆராய்ந்தால் அதன் பின்னால் ஏதாவது ஒரு விவகாரமான கதை இருக்கும். விக்கிரமாதித்யன் கதைகளில் பல கதைகள் ஆண் பெண் உறவை அடிப்படையாக கொண்டவை. கிராமப்பக்கம் இருக்கும் இது போன்ற கதைகளை தொகுத்து புத்தகமாக்கியிருக்கின்றார் கி.ரா.
ஆண் - பெண் உறவை மையமாக கொண்ட குட்டி குட்டி கதைகள். பச்சையான வார்த்தைகள் இல்லாமல், குறிப்பு மொழியில் சொல்லப்படும் கதைகள். கெட்ட வார்த்தை கதைகள் என்று அழைக்கின்றார்.
பல கதைகள் பெண்களை மையப்படுத்தியே இருக்கின்றது. கணவனை விட்டு வேறு ஆண்களுடன் தொடர்பு கொள்ளும் பெண்கள், கல்யாணம் கட்டியும் ஒன்றும் தெரியாத ஆண்கள் என்று. இது மாதிரியான கதைகளின் உண்மையான மூல கதை சொல்லி ஆணா, பெண்ணா என்பது சுவாரஸ்யமான கேள்வி. பெரும்பாலான கதைகள் நகைச்சுவை கதைகள்தான். கொஞ்சம் விரிவாக்கப்பட்ட அடல்ட் ஜோக்.
சில கதைகளை படிக்கும் போதே அதன் வேறு திரிபுகளை நாம் கேள்விப் பட்டிருக்கலாம் அல்லது ஏதாவது புராணங்களில் இருந்த கதையை கொஞ்சம் மாற்றி பரப்பியிருக்கலாம்.இவை பெரும்பாலும் வாய் மொழியாகவே வளர்ந்த கதைகள், ஒருவரிடம் இருந்து இன்னொருவரிடம் போகும் போது மாறுதலடைந்து செல்லும். கி.ராவே தாத்தா, அவர் யாரோ ஒரு தாத்தாவிடம் கேட்ட கதைகள் என்கின்றார். நாட்படு தேறல் போல.
முன்னுரையில் ஏன் இந்த புத்தகத்தை தொகுத்தேன் என்று நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார். படிப்பவர்கள் பலரும் இதை வெளியில் சொல்ல மாட்டார்கள், ரகசியமாக வைத்து கொள்வார்கள் என்கின்றார். முன்பு இருக்கலாம். இது கேம் ஆஃப் த்ரோன்ஸ், நெட்ஃப்ளிக்ஸ் காலம். கிண்டிலில் தமிழ் புத்தகங்களை தேடினால், ஏராளமாக கண்ணில் படுகின்றது. அந்த குப்பைகளுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்றால், இதில் உள்ள ஒரிஜினாலிட்டி, பல ஆண்டுகாலம் புழங்கியதன் தரம்.