பி.ஏ.கிருஷ்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பி.ஏ.கிருஷ்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 நவம்பர் 2013

புலிநகக் கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன்

ஓரு குடும்பத்தின் ஐந்து தலைமுறையை சேர்ந்தவர்களை பற்றிய கதை. படிக்கும் போது முதலில் நினைவில் வந்தது அசோகமித்திரனின் யுந்தங்களுக்கிடையில் நாவலும், பாலகுமாரனின் அப்பம் வடை தயிர்சாதமும். பாலகுமாரனின் நாவல் ஒரு குடும்பத்தின் / சமூகத்தின் வெற்றியை பற்றியது, அசோகமித்திரனின் நாவல் முழுக்க முழுக்க குடும்பத்தின் மாறுதல்கள், அதன் விளைவுகள். இக்கதை குடும்பத்தில் அரசியல், சமூகத்தின் தாக்கத்தை பற்றி பேசும் நாவல். ஒரு குடும்பக்கதையாக ஆரம்பித்து ஒரு அரசியல் கதையாக முடிகின்றது. 

பொன்னா என்னும் ஒரு பாட்டியின் இறுதி நாட்களில் ஆரம்பிக்கும் கதை, முன்னும் பின்னும் போகின்றது. பொன்னாதான் மையம். பொன்னாவின் தாத்தாவின் கதையில் ஆரம்பித்து, பொன்னாவின் எள்ளு பேத்தி பிறக்கும் வரை போகின்றது. மிகப்பெரிய நாவலாக போயிருக்க கூடிய அபாயம் இருந்தும், சுருக்கமாக தாவி தாவி செல்கின்றது.

கதை நேர்கோடாக செல்வதில்லை. முன்னும் பின்னும் நடக்கின்றது. பொன்னாவின் தாத்தா ஒரு ஜோசியர், அப்பா ஒரு சமையல்க்காரர், கணவன் ஒரு சாப்பாட்டு ராமன். குடும்பத்தின் ஒரு சாபக்கேடு, அகால, துரித மரணம். பொன்னாவின் பிள்ளைகள் நம்மாழ்வார், பட்சிராஜன், ஆண்டாள். நம்மாழ்வாரின் மனைவி ஒரு குழந்தையை பெற்று இறக்க, ஆழ்வார் எங்கோ போகின்றார். ஆண்டாளின் கணவன் கலியாணம் ஆன வேகத்தில் இறக்கின்றான். ஆண்டாளுக்கு துணை மதுரகவி; நம்மாழ்வாரின் மகன். அவனும் அகாலத்தில் இறக்க, அவனின் மகன் நம்பி, பட்சியின் மகன் திருமலையால் வளர்க்கப்படுகின்றான். நம்பி, திருமலையின் பிள்ளைகள் கண்ணன், ராதா, நம்பியின் மனைவி ரோசா, மகள் இந்து, கண்ணனின் காதலி உமா இவர்கள் கதையில் வரும் இறுதி தலைமுறையினர். நம்பி இறப்பதுடன் கதை முடிகின்றது.

09 நவம்பர் 2013

கலங்கிய நதி - பி. ஏ. கிருஷ்ணன்

கலங்கிய நதி. பி. ஏ கிருஷ்ணனின் இரண்டாவது 'தமிழ்' நாவல். ஆங்கிலத்தில் மட்டி ரிவர் என்ற பெயரில் எழுதப்பட்டு, அவரே மீண்டும் தமிழில் எழுதிய கதை. அஸ்ஸாம் மாநிலத்தில் கடத்தப்பட்ட ஒருவனை மீட்க செல்லும் ஒருவனின் கதை . சினிமா மாதிரி காட்டிற்குள் தலையில் டார்ச் லைட் அடித்துக் கொண்டு சென்று அல்ல. இங்கு கடத்தல் என்பது ஒரு சின்ன முடிச்சு. அதை சுற்றி ஏகப்பட்ட முடிச்சுகள். அனைத்திற்கும் மேலே இப்புத்தகம் பேசுவது அதிகாரத்தை பற்றி, நமது அரசியலை பற்றி, அரசாங்கத்தை பற்றி, அதிகாரிகளை பற்றி.

முதலில் கவர்ந்தது கதை சொல்லும் முறை. கதையின் நாயகனான ரமேஷ் சந்திரன் ஒரு நாவல் எழுதுகின்றான், அதை அவன் நண்பர்களுக்கு படிக்க அனுப்புகின்றான். அவர்களின் பதில், அவன் மனைவியின் பதில். இப்புத்தகமே ஏதோ ஒரு உண்மை சம்பவத்தி அடிப்படையில் எழுதப்பட்டதோ என்னவோ? ரமேஷ் சந்திரன் கடத்தலை பற்றி எழுதுகின்றான். உண்மை சம்வத்தை கொஞ்சம் மாற்றி அவன் எழுதுகின்றான். உண்மையில் நடந்தது என்ன என்பதை அவன் மனைவி, நாவலை பற்றி பேசும் போது கூறுகின்றாள். சந்திரன் உண்மை என்று நம்பியதை அப்படியே எழுத, அதன் பின்னால் இருந்த உண்மையான உண்மையை மனைவி கூறுகின்றாள். குழப்பமாக இருப்பது போல தோன்றினாலும், படிக்கும் போது ஒன்றும் தோன்றவில்லை.

கடத்தல்தான் மைய இழை போல தோன்றினாலும், அதைச் சுற்றி பல கதைகள். அஸ்ஸாமில் நடக்கும் தீவிரவாதம், கம்யூனிசம், அஸ்ஸாம் பூர்வீக குடிகளுக்கும் பங்களாதேஷ் முஸ்லீம்களுக்குமான பிரச்சினை, காந்தி, சந்திரனின் சொந்த வாழ்க்கை, அரசாங்க திட்டங்களில் நடக்கும் முறைகேடுகள் என பல விஷயங்களை தொட்டு செல்கின்றது. சந்திரன் கம்யூனிசத்தால் ஈர்க்கப்பட்டு மெதுவாக காந்தியை வந்தடைகின்றான். அதுதான் கதையின் உச்சம்.