18 செப்டம்பர் 2014

அசோகமித்திரனின் பேட்டி - காலச்சுவடு

காலச்சுவட்டில் அசோகமித்திரனின் பேட்டி வெளியாகியுள்ளது

http://www.kalachuvadu.com/issue-177/page40.asp

அவரது எழுத்துக்கள் போலவே மிக எளிமையான பேட்டி.

அவரது வார்த்தைகளில் எங்கும் ஒரு எதிர்மறைத்தன்மை இல்லை. கஷ்டப்பட்டிருந்தாலும் (எழுத்தை தொழிலாக கொண்டவர் என்ன செய்திருக்க முடியும்) அதை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், அதை முழு மனதோடு ஏற்று கொண்ட இவரது வார்த்தைகள்.


கல்கியை பற்றி அவர்து கருத்துக்கள் ஒன்றே  போதும், அவர் தன்னை ஒரு பெரிய இலக்கியவாதி என்று சொல்ல விரும்பவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

அவரது நகைச்சுவை உணர்வுக்கு கடைசி பாரா. பேட்டி எடுத்தவர்களுக்கு எப்படி இருந்திருக்குமோ.

17 செப்டம்பர் 2014

பின் தொடரும் நிழலின் குரல் - ஜெயமோகன்

புகாரின். லெனின் குழுவிலிருந்த முக்கிய நபர். கம்யூனிச அரசை கட்டமைத்த ஒரு முக்கிய தலைவர். அதே கம்யூனிச அரசால் துரோகி என தண்டிக்கப்பட்டவர். ஆனால் அவர் குற்றமற்றவர் என்று முப்பது ஆண்டுகளுக்கு பின்னால் அறிவிக்கப்பட்டது. அக்கதையை ஒரு இழையாக வைத்து சுற்றி பல வித இழைகளல் பின்னப்பட்டது இக்கதை.

அரசியல் நாவல் என்றவுடன் தயங்கி தயங்கியே வாங்கினேன். அதுவும் ரஷ்ய நாட்டு தலைவரை பற்றிய கதை என்றவுடன் ஒரு மாதிரி செயற்கையாக இருக்குமோ என்ற எண்ணம் வேறு இருந்தது. (ஏதாவது மொழி பெயர்ப்பு புத்தகம் போல இருந்து வைத்தால் என்ன செய்வது என்ற எண்ணம்). ஜெயமோகன் என்னும் பெயரை நம்பி களத்தில் இறங்கினேன். நம்பினார் கெடுவதில்லை. கொஞ்சம் கூட தொய்வடையாமல், நடு இரவு தாண்டிய பின்னும் படிக்க வைத்த புத்தகம், இரவு இரண்டு மணி, மூன்று மணி வரை. எந்த புத்தகத்தையும் அடுத்தடுத்து படித்ததில்லை, இது என்னை மூன்று முறை தொடர்ச்சியாக படிக்க வைத்துவிட்டது. 

வெகுநாட்களுக்கு நாவல் என்றால் தொடர்கதை என்பதுதான் எண்ணம். கல்கி, சுஜாதா இவர்களின் புத்தகங்கள் அனைத்தும் தொடர்கதைகள் என்பதால் அந்த எண்ணம் அப்படியே இருந்தது. படித்த ஒன்றிரண்டு ஜெயகாந்தனின் நாவல்களும் தொடர்கதைகளாக வந்தவையே. அந்த எண்ணத்தை உடைத்தெறிந்தவர் அசோகமித்திரன். அவரின் பதினெட்டாம் அட்சக்கோடு, இப்படியும் நாவல் எழுத முடியுமா என்று வியப்பை தந்தது, அடுத்தடுத்து அவரது கரைந்த நிழல்கள், ஒற்றன், தண்ணீர் எல்லாம் ஒவ்வொன்று ஒவ்வொரு வகை. நாவலின் பல சாத்தியங்களை உணர வைத்தது. இது மற்று மொரு சாத்தியம். நாவல்களில் விவாதங்கள் வருவதுண்டு, ஜெயகாந்தன் கதைகளில், இந்திரா பார்த்தசாரதி கதைகளில். ஆனால் அவை அனைத்தும் என் பார்வையில் வறண்டு போனவை. அதில் எவ்வித உயிர்ப்பும் இல்லை, ஒரு பிரச்சாரம். இந்த நாவல், அனைத்து சாத்தியங்களையும் கையாண்டுள்ளது, சிறுகதை, நாடகம், அபத்த நாடகம், கடிதம், கவிதை, கட்டுரை. அதற்கான யுக்தி அபாரம். உதவிக்கு பல உண்மை பாத்திரங்கள் ஜெயமோகன், ராமசாமி (சுந்தர ராமசாமி?). பல பாத்திரங்கள் பல உண்மை மனிதர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம், யாருக்கு தெரியும். 

எச்சரிக்கை : சற்றே பெரிய கட்டுரை. பெரிய புத்தகமல்லவா?