வழக்கம் போல தலைப்பிற்கும் நாவலுக்கும் என்ன தொடர்பு என்று என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. கதையின் நாயகன் அலைவதற்கு தொடர்பானது என்றால், சதுரங்கத்தின் குதிரைகள் அப்படியல்ல. மிகவும் சக்தி வாய்ந்தவை, மிகவும் ஆபத்தானவை. என்னவோ ஒன்று.
நாஞ்சில் நாடனின் மற்றொரு பம்பாய் கதை. மீண்டும் பலவித மனிதர்கள் அறிமுகம் செய்கின்றார். தனியனாக வாழும் நாரயணனின் கதை.
நாகர்கோவில் தாண்டிய ஒரு கிராமத்திலிருந்து, பிழைக்க பம்பாய் சென்ற ஒருவனின் அனுபவத் தொகுப்பு. அவனின் பம்பாய் வாழ்க்கை, கிராம வாழ்க்கை, பயண அனுபவங்கள் அனைத்தையும் சேர்த்து பின்னிய ஒரு நாவல்.
நாஞ்சில் நாடனின் வழக்கமான கதை சொல்லும் பாணி, மேலோட்டமாக படிக்கும் போது ஒரு சாதரண கதை என்றாலும், உள்ளே நமக்கு சின்ன சின்ன அனுபவங்களை ஒளித்து வைத்துள்ளார். தனியாக ஏதோ ஊரில் சென்று வேலை செய்த பலருக்கு நெருக்கமாக தோன்றும்.
நாவலில் எனக்கு பிடித்தமாக இருந்தது, நாராயணின் பயண அனுபவங்கள். என்னுடைய அலுவலக நண்பருடன் ஒரு முறை திருப்பதி சென்றோம், ஜாலியாக குளித்து விட்டு வந்தபின் துண்டுகளை காயப்போட இடம் தேடிய போது அவர் தன் பையிலிருந்து ஒரு கயிறை எடுத்து கொடுத்தார். அவர் கொண்டு வந்திருந்த பொருட்கள், டார்ச், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, கயிறு, நக வெட்டி, சிறியகத்தி, தலைவலி காய்ச்சல் மாத்திரைகள், பேண்டேய்ட், கவர்கள். அவர் இதற்கு முன்னால் வேலை செய்த அலுவலகத்தில் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டியிருக்கும், அப்படி சென்று பழகியதன் விளைவு. பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில், முன்பதிவு டிக்கெட் இல்லாத ட்ரெயினில் ஏறி, ஊர் பேர் தெரியாத ஏதோ ஒரு நிலையத்தில் இறங்கி செல்ல வேண்டியிருக்கும். அவரின் அந்த அனுபவங்களை, இதில் மீண்டும் நெருக்கமாக காண முடிந்தது.
நாஞ்சில் நாடன் நாவலில், உணவு இல்லாமலா, பாவ், வடா பாவ், டால் ஃபிரை, புல்கா, உருளை கிழங்கு வடை, கடலை மாவு பண்டம் என்று விதவிதமான உணவு, ஒரு கல்யாண பந்தியும் உண்டு.
அவரின் தலைசிறந்த நாவல், படித்தே தீர வேண்டும் என்ற லிஸ்டில் வராது, ஆனால் கிடைத்தால் தவறவிடாமல் படிக்க வேண்டிய நாவல்.