தூர்வை
தூர்வை என்ற வார்த்தையே இப்புத்தகத்தின் மூலமே கேள்விப்படுகின்றேன். தூர் என்றால் வேர் என்ற அர்த்தமுண்டு என்பது தெரியும் ஏதோ வேர் சம்பத்தப்பட்ட வார்த்தை என்று யூகித்தேன். சரிதான். அருகம்புல்லுக்கு அந்த பெயர். அருகம்புல்லின் வேர் ஆழமானதாகவும், படர்ந்தும் இருக்கும். எளிதில் முழுவதும் அழிக்க முடியாது. மறுபடியும் துளிர்க்கும்.
ஒரு காலகட்டத்தை பற்றிய பதிவே இந்த தூர்வை. கோபல்ல கிராமம் நாவலுக்கும் இதற்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இரண்டும் கரிசல்காட்டு வாழ்க்கையை பேசுகின்றது, கிராமத்து வாழ்க்கை. ஒரு குடும்பத்தை வைத்துக் கொண்டு அவர்கள் கதை வழியாக ஊரின் கதையை சொல்வது. இரண்டிலும் உள்ள முக்கிய அம்சம், கதை. எழுதும் கதைகள் வேறு, சொல்லும் கதைகள் வேறு. சொல்லும் கதைகள் சுருக்கமானவை, அதில் ஒரு சுவாரஸ்யம், சொல்பவனின் கற்பனையும் கலந்தது இருக்கும். காதுகள் வழியே சென்று நமக்கு கற்பனானுபவத்தை தரும்.
தூர்வை அது போன்று கதைகளின் கலவை. மினுத்தான் - மாடத்தி குடும்பத்தை வைத்து ஒரு உருளக்குடி கிராமத்து கதையை சுவையாக கூறுகின்றார். எழுதவில்லை. கூறுகின்றார். நாம் எழுத்து வடிவில் கேட்கின்றோம். அத்தியாயம் என்று எதுவும் கிடையாது. எவ்வித பகுப்பும் இல்லை. எங்கு எப்பகுதி ஆரம்பித்து முடிகின்றது என்பதெல்லாம் கிடையாது. அவர் பாட்டிற்கு சொல்லிக் கொண்டே செல்கின்றார். கேட்ட, கண்ட அனைத்தையும் கொட்டிவிட வேண்டும் என்ற எண்ணமோ என்னவோ. ஆனால் எங்கும் சுவாரஸ்யம் குன்றவில்லை.