09 ஆகஸ்ட் 2016

பருவம் - எஸ்.எல்.பைரப்பா

மகாபாரதத்தின் தனித்தன்மையே, அதை நம்மால் பல்வேறு தளங்களில் வைத்து வாசிக்க முடியும் என்பதுதான். பல்வேறு முடிச்சுகள் கொண்ட ஒரு சுவாரஸ்யமான கதையாகவும் வாசிக்க முடியும், தர்ம - அதர்ம விவாதங்களை காட்டும் ஒரு தர்ம நூலாகவும் படிக்க முடியும், முழுக்க முழுக்க ஒரு அரசியல் நூலாக, அரசுகளுக்கிடையிலான விவகாரங்கள், அரசியல் சதிகள் என்று ஒரு அரசியல் நூலாகவும் படிக்க முடியும். அனைத்தையும் விட்டு விட்டு, வெறும் மனிதர்கள், அடிப்படை மனித உணர்ச்சிகள், உறவுகள், அது காட்டும் வித்தைகள் என்று வாசிக்கலாம். அக்கால குடிமுறைகளை கூறும் நூலாகவும் படிக்கலாம். 

மகாபாரதத்தை பலர் பல கோணங்களில் எழுதியிருக்கின்றார்கள். ராஜாஜியின் எளிய சுருக்கம், சோவின் மகாபாரதம் பேசுகின்றது, அதை ஒரு தர்ம - அதர்ம விவாத நூலாகவும், அரசியல் நூலாகவும் பார்க்கின்றது. வெண்முரசு மகாபாரதத்தை பல வித கோணங்களில் காட்டும் ஒரு நூல். பாரதியாரின் பாஞ்சாலி சபதம், வில்லி பாரதம், இரண்டாம் இடம், இனி நான் உறங்கலாமா,காண்டேகரின் யயாதி, இ.பாவின் கிருஷ்ணா கிருஷ்ணா என்று இன்னும் பல ஆக்கங்கள் உள்ளன. சுமார் 300 மகாபாரத ஆக்கங்கள் இருப்பதாக கூறுகின்றனர். நண்பர் ஆர்.வி பலவித மகாபாரதக்கதைகளை தொகுத்து இங்கு அளித்துள்ளார். (அவரே பல மகாபாரத சிறுகதைகளையும் எழுதியுள்ளார்) இவற்றில் முக்கியமான ஆக்கங்களில் ஒன்று பர்வா. ஜெயமோகனும் பலவித மகாபாரத வடிவங்களை பற்றி இங்கே கூறுகின்றார்

பைரப்பா ஒரு புகழ் பெற்ற கன்னட எழுத்தாளர். அவரைப்பற்றிய ஒரு சிறப்பான அறிமுகத்தை ஜெயமோகன் எழுதியிருக்கின்றார். ஆர்வியும் சிலிக்கான் ஷெல்பில் எழுதியிருக்கின்றார்.

எஸ்.எல்.பைரப்பா எழுதிய பர்வா நாவல், தமிழில் பருவம் என்ற பெயரில் சாகித்திய அகாடமி வெளியீடாக வந்திருக்கின்றது. பாவண்ணன் மொழி பெயர்த்துள்ளார்.  பருவம் - மகாபாரதத்தை முழுக்க முழுக்க ஒரு யதார்த்த பாணியில் காட்டுகின்றது. 

பருவம் பாரதக்கதையை பாரம்பர்ய வழக்கப்படி ஆதி பர்வம் முதல் ஆரம்பித்து சொல்லும் நூல் அல்ல. ஒவ்வொரு பாத்திரத்தின் நினைவு வழியாக கதையை நகர்த்துகின்றார். பாரதப் போரின் ஆரம்பகட்ட தயாரிப்பு நிலையில் நாவல் ஆரம்பிக்கின்றது. சல்லியனில் ஆரம்பித்து கதை பீமன், பாஞ்சாலி, அர்ஜ்ஜுனன், கர்ணன், பீஷ்மர், துரியோதனன் என்று பலரின் பார்வையில் நிகழ்கால நிகழ்ச்சிகளும், அவர்களின் நினைவுகளாக இறந்தகால நிகழ்ச்சிகளும் போகின்றன. சல்லியனுக்கு துரியோதனன் விடும் தூதில் கதை ஆரம்பிகின்றது.

கதையை ஆசிரியர் முழுக்க முழுக்க தரைக்கு இறக்கிவிட்டார். கதையை தரைக்கு இறக்கியதால், தேவர்களையும் தரைக்கு இறக்கிவிட்டார். தேவர்கள் என்பவர்கள் இமயத்தின் உச்சியிலிருக்கும் ஒரு இனத்தவர்கள் என்று கூறுகின்றார். நாகர்கள், ராட்சசர்கள், அசுரர்கள் அனைவரும் வேறு வேறு இனக்குழுக்கள் என்பது ஓரளவிற்கு புரிந்து கொள்ள முடிகின்றது. தேவ இனத்தவர்களின் தர்ம அதிகாரியின் மகன் தர்மன், சேனாதிபதியின் மகன் பீமன், இந்திரனின் மகன் அர்ஜ்ஜுனன், அவர்களின் மருத்துவர்களின் புதல்வர்கள் நகுல - சகாதேவன். விசித்திரவீரியன் ஒரு பலவானாக அதே சமயம் ஆண்மையற்றவனாக வருகின்றான். மாத்ரி ஒரு சாதரண மலைப்பெண்ணாக வருகின்றாள். 

ஆரியர்கள் என்னும் கருதுகோளின் அடிப்படைய்லேயே கதை நகர்கின்றது. ஆரிய குலம், ஆரிய தருமம், ஆரியப் பெண்கள்,ஆரிய ஆண்கள், ஆரிய பசு, ஆரிய குதிரை என்று ஒரே ஆரிய மயம். ஒரு இடத்தில் சொன்னால் பரவாயில்லை, பக்கத்து பக்கம் வருவது கொஞ்சம் சலிப்படைய செய்கின்றது. ஒவ்வொருவரும் ஆரியதர்மத்தையே காக்க நினைக்கின்றார்கள். சல்லியனுக்கு ஆரியதர்மமே முக்கியம். அதை நன்கு தெரிந்த பீஷ்மர் செல்லும் வழியே நம் வழி என்று போகின்றான். பாண்டவர்களின் பிறப்பிற்கு காரணமான தேவ இனத்தவர்கள் அவர்களின் தர்மமே தூய ஆரியதர்மம் என்று கூறுகின்றனர்.

புராண பாத்திரங்களை சாதரண மனிதர்களாக காட்டும் போது அவர்களது உணர்ச்சிகளை விவரிப்பது கடினமானது. அதை மிக அருமையாக காட்டியிருக்கின்றார். ஒவ்வொரு பாத்திரத்தின் ஆழ் மனதின் நனவோடையாக கதை செல்லும் போது, ஒவ்வொரு பாத்திரமும் பிரம்மாண்டமாக விரிகின்றது. அவர்கள் ஆழ்மன உணர்ச்சிகள், அவர்களின் பார்வையில் மற்றவர்கள் என்று  போவதால், எந்த பாத்திரமும் தட்டையானதாக தோன்றுவதில்லை. உதாரணத்திற்கு கிருஷ்ணன். கிருஷ்ணனை என்ன நினைத்தாலும் அவனை ஒரு சாதரண மனிதனாக காட்ட முடியாது. எங்கும் அவன் ஒரு தெய்வம் அல்லது அதற்கு நிகராக போற்றப்படும் ஒரு மனிதன். பைரப்பாவாலும் அவனை முழுக்க முழுக்க ஒரு சாதரண யாதவனாக காட்ட முடியவில்லை. இருந்தும் பலராமனின் மூலம் அவனை வாருகின்றார். மனைவில் சொல் கேட்பவன், சர்வாதிகாரி என்று பலராமனின் பேச்சில் கிருஷ்ணனை பற்றி சிலர் இப்படியும் நினைத்திருக்கலாம் என்று காட்டுகின்றார்.

பாரதம் படிக்கும் போதே எனக்கு தோன்றுவது, பாஞ்சாலி அதிகம் நெருக்கமாக இருப்பது பீமனிடம். அர்ஜ்ஜுனன் பிடித்தவனாக இருந்தாலும், அவள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுவது பீமனே, அவள் தன் குமுறல்களை கொட்டுவதும் பீமனிடமே. பாஞ்சாலியின் திருமணத்திற்கு பல புராண கதைகளை கட்டிவிட்டாலும், அது ஒரு அரசியல் நிகழ்வே என்பதில் மாற்றமில்லை. ஆனால் பாஞ்சாலிக்காக ஐந்து பேரும் அடித்துக் கொண்டனர் என்பது கொஞ்சம் அதீத கற்பனை போல உள்ளது. 

யாதவ குல கதைகள், அவர்களின் பிளவுகள் எல்லாம் சாத்யகி மூலம் வருகின்றது. சுபத்திரா திருமணமும் ஒரு அரசியல் நிகழ்வாகவே கருதப்பட வேண்டும். குருஷேத்திர யுத்ததில் யாதவர்களின் பிளவிற்கு அதுவும் ஒரு காரணமாகின்றது.

பெண்களின் உலகமும் விரிவாக வருகின்றது. குந்தியின் பூர்வ கதை. பாஞ்சாலியின் பார்வையில் குந்தி, சுபத்திரை. அவர்களுக்குள்ளான சிறு சிறு உரசல்கள். இவற்றிற்கெல்லாம் ஆதாரம் எங்கு என்று எல்லாம் நாம் குதிக்க முடியாது. இப்படியும் இருக்கலாம் என்று ஒருவர் கற்பனை செய்ய முடியும். 

போரே பாண்டவர்வகளின் பிறப்பை அடிப்படையாக கொண்டே நடப்பதாக காட்டியுள்ளார். நியோக முறையில் பிறந்தவர்களுக்கு என்ன உரிமை என்பதே துரியோதனின் தரப்பு. அதை வைத்தே சல்லியனை வெல்கின்றான், யாதவர்களை கவர்கின்றான்.

போர்க்கள நிகழ்ச்சிகள் சுருக்கமாக செல்கின்றது. பாரத போரைப் பற்றி படிக்கும் போது இத்தனை பேரும் உணவிற்கு என்ன செய்வார்கள், பல தினப்படி கடமைகளை எப்படி செய்வார்கள் என்ற யோசனை வரும். அதையெல்லாம் கொஞ்சம் காட்சிப்படுத்த முயற்சித்துள்ளார். பல லட்சம் பேர் சேர்ந்து போர் செய்யும் போது அவர்களுக்கான உணவு தேவை எப்படி இருக்கும், இயற்கை கடன்களை எப்படி கழிக்க முடியும், அதை எப்படி சுகாதாரமாக அழிக்க முடியும்? துரோணர், பீஷ்மர் என்று அனைவரும் சாதரண மனிதர்கள் தானே. 

கழிவுகளின் துர்நாற்றம் தாங்காமல் புலம்புகின்றனர். போர் வீரர்கள் போரிடும் இடம், அத்தனை பேரும் தங்குமிடம், அவர்களுக்கான முறையான உணவு வழங்கல் என்று பல நடைமுறை சாத்தியங்களை காட்டுகின்றார். கிருபர் சரியான உணவின்றி தவிக்கின்றார், துரோணர் குளிக்க கூட தண்ணீரின்றி திண்டாடுகின்றார். அரண்மனையில் இருக்கும் எண்ணையெல்லாம் போர்க்களத்திற்கு செல்ல, அரண்மனையில் திருதராஷ்டிரருக்கு விளக்கில்லை!!!. 

சின்ன சின்ன நுட்பமான விஷயங்கள் அங்கங்கு ஒரிரு வார்த்தைகளில், காட்சிகளில் வந்து மறைகின்றன. போர்க்களத்தின் முடிவில் பொருளையோ, மனிதர்களையோ தேடும் மனிதர்கள், தேர்த்தச்சர்களின் எரிச்சல், விவசாயிகளை படைவீரர்களாக்கி அவர்களின் வேலையையும் கெடுக்கும் மன்னர்கள், மனைவியின் ஊரில் இருக்க கூடாதென்று போருக்கு வரும் அர்ச்சுனனின் தேரோட்டி, போர்க்களத்தில் வீரர்கள் அல்லாது இருக்கும் மற்ற எண்ணற்ற வேலையாட்கள், அவர்களுக்கும் நேரும் ஆபத்து, வியாசரின் மகனின் மரணம், வரும் வழியில் பீஷ்மரின் கண்ணில் படும் கொல்லர்கள் என ஏகப்பட்ட விஷயங்கள். 

சில மகாபாரத விஷயங்களை மாற்றியிருக்கின்றார். அர்ஜ்ஜுனன் பீஷ்மரை சிகண்டியை முன்னிறுத்தி அவரை அம்பு படுக்கையில் சாய்த்தான். ஆனால் இதில் அவரே சிகண்டியுடன் சண்டையிட மறுத்து சென்று மரணமடைகின்றார். துரோணரும், தர்மரின் பொய்யினால் மரணமடையவில்லை. காந்தாரிக்கு பிறந்தவர்கள் மொத்தம் 16பேர்கள், மற்றவர்கள் அனைவரும் பணிப்பெண்களின் புதல்வர்கள். நடுவில் ஒரு பாத்திரம் பாண்டுவின் புதல்வன் என்று வருகின்றது. பாண்டுவிற்கும் ஏதோ ஒரு பணி பெண்ணிற்கும் பிறந்தவன். சாத்தியமான பார்வை. விதுரனும், யூயுத்சுவும் அப்படி பிறந்தவர்கள் தானே. சூதர்கள் விதுரனை சித்தப்பா என்று அழைப்பதும், கர்ணனை மகாராஜா என்று அழைப்பதும், மக்களுக்கும் அரசுக்கும் இருக்கும் இடைவெளியை மிகத்தெளிவாக காட்டுகின்றது. 

கர்ணனின் கதை தனியாக வருகின்றது. எங்கோ இது கர்ணனை பற்றிய நாவல் என்று படித்த நினைவு. அப்படி ஏதுமில்லை. கர்ணனின் பார்வையும் வருகின்றது.

வயது, பாரதத்தில் மிக குழப்பமான ஒரு விஷயம். டீவியில் பார்த்து பார்த்து நம் தலையில் அமர்ந்த ஒன்று. போர் நடக்கும் போது அனைவருக்கும் வயது சுமார் அறுபதுக்கு மேல். அனைவரில் மூத்தவன் கர்ணன். கர்ணன் படத்தில் ஒரு சிறு குழந்தை கர்ணனின் மகனாக வந்து சண்டையிடுவதை பார்க்கும் போது சிரிப்பு வந்தது, என்ன செய்ய. இதில் அனைவரும் வயதானவர்களாக, அதற்கே உண்டான உபாதைகளுடன் வருகின்றார்கள். ஜராசந்தன் கொல்லப்படும் போது அவனுக்கு நல்ல வயதாகியிருக்கும். ஆனால் நாம் படிக்கும் போது அது தோன்றாது. ஒரு பெரிய அரக்கனும் பீமனும் சண்டையிடுவது போலத்தான் நமக்குள் காட்சிப்படுத்தப்படும். பைரப்பா அவனை ஒரு கிழவனாகவே காட்டுகின்றார். பீமனும் ஒரு கிழவனும் சண்டையிடுவதுதான் நம் கண் முன் ஓடுகின்றது. வனவாசத்தில் இருக்கும் போது, ஜயத்ரதன் பாஞ்சாலி மீது ஆசைப்பட்டு தூக்கி செல்ல முயன்று, ஐக்குடுமி வைத்து அனுப்பப்பட்டான். யோசித்து பார்த்தால், அப்போது பாஞ்சாலியின் வயது நாற்பதிற்கு மேலிருக்கும். இனி மகாபாரதம் படிக்கும் போது நம் கற்பனை நாயகர்கள் மறைந்து, சில கிழவன் கிழவிகள் வந்து போகலாம்.

ஒரு சிலவற்றை வலுவாக புகுத்திவிட்டார் என்று தோன்றுகின்றது. திருதராஷ்டிரர் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உபாதை கொண்டவர், கர்ணன் சபையிலேயே அமர்ந்து தூங்கும் ஆசாமி, பலராமன் வரும் போதெல்லாம் பல் வலியுடன் வருகின்றான். பாத்திரங்கள் அனைத்தும் கொட்டாவி விடுகின்றன, வேர்த்து வழிகின்றது, பசித்து அலைகின்றனர்.

இறுதிப்பகுதிகள் வெகு நுட்பமானவை. பாண்டவர்களின் புதல்வர்களின் மரணம் அவர்களது தந்தைமார்களை அந்தளவிற்கு வருத்துவதில்லை என்பது போன்ற தோற்றம் எனக்கு எப்போதும் உண்டு. அபிமன்யூ மரணத்திற்கு பின் அர்ஜ்ஜுன்னும், கடோத்கஜன் மரணத்திற்கு பின் பீமனும் கொள்ளும் துயரமும் அவர்களுக்கு பாஞ்சாலி புத்திரர்கள் இறந்தவுடன் வருவதில்லை. பாரத்திலியே அவர்கள் பெயர்களுக்கு மேல் ஏதுமில்லாவதர்கள். அஸ்வத்தாமன் மீது கொள்ளும் வெறிக்கு பின்னால் ஒரு பழிவாங்கும் உணர்வே தெரிகின்றதன்றி, பாசம் இல்லை. அங்கும் பீமனே முதலில் பொங்கி புறப்படுகின்றான்.


போர் முடிந்த பின் பாரதம் காட்டுவது ஒரு வெறுமை. ஆனால் மூலத்தில் அது ஆட்சி முறை அது இது என்று போகின்றது. ஆனால் உண்மையில் என்ன நடந்திருக்கும். பல லட்சம் பிணங்கள், ஏகப்பட்ட ஊனமுற்றவர்கள், அனாதைகள். அவர்களின் கதி. தர்மன் ஆண்ட ராஜ்ஜியத்தில் மிஞ்சியவர் எவர்? யாதவர் குலமும் அழிந்து போனது. இவை அனைத்தையும் ஒரு சின்ன காட்சிகளாக காட்டி கடைசி ஐந்தாறு பக்கங்களில் பாரத போர் முடிவின் வெறுமையை காட்டிவிடுகின்றார். 

பாத்திரங்களின் நினைவு வழியாக செல்லும் கதை சொல்லும் முறையால் சில இடங்கள் பெரிதாக இருக்கின்றன. ஆனால் எங்கும் சுவாரஸ்யம் குறையவில்லை. இக்கதைக்காக பாரத தேசம் முழுவதும் அலைந்து திரிந்ததாக சொல்லியிருக்கின்றார். அந்த நில வர்ணனைகள் அதிகம் இல்லையென்றாலும், முடிந்த வரை காட்சி படுத்தியிருக்கின்றார். சில இடங்களில் வரும் கிண்டல் தொனியும் அபாரம்

மொழிபெயர்ப்பு தெளிவாக இருக்கின்றது. ஆனால சில இடங்கள் உதைக்கின்றன. அனைவரும் மற்றவரை ஒருமையில் அழைக்கின்றனர். தேரோட்டி அர்ஜ்ஜுனனை நீ வா என்கின்றான். பொருத்தமாக இல்லை.

இவ்வளவு எழுத்து பிழைகளோடு ஒரு நூலை நான் இதுவரை வாசித்ததில்லை. ஒவ்வொரு பக்கத்திற்கு ஐந்தாறு பிழைகள். ள், ன் பிரச்சினை. எழுத்துகள் இடமாறும் பிரச்சினை. அதைவிட கொடுமை பெயர்களே மாறி வருகின்றன. துருபதன் கம்பாசிடர் கைங்கர்யத்தில், துரோணரை கொல்ல சபதம் செய்ததற்கு பதில் துருபதனையே கொல்ல சபதம் செய்கின்றான். நல்ல வேளை தற்கொலை செய்து கொண்டுவிடவில்லை. பல இடங்களில் பத்தி பிரிக்கப்படாமல வரிகள் ஒன்றின் மீது ஒன்று சவாரி செய்து கொண்டு போகின்றது. நாவலின்  சுவாரஸ்யமே அனைத்தையும் மீறி படிக்கவைக்கின்றது.

மரபை உடைத்து மொத்த கதையையும் விபரீதமாக எழுதுவதுதான் முற்போக்கு என்ற நிலையில் அதற்கான வரலாற்று பார்வையை தந்தற்கு அவருக்கு நன்றிகள் பல. 

மகாபாரதப்பிரியர்கள் அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல். மறுபடியும் வாசிக்கும் போது இன்னும் பல விஷயங்கள் பிடிபடலாம், தவற விட்டவை கிடைக்கும். அவை பின்னால் ஒரு  நாள் வரும்.

பைரப்பாவின் ஒரு நேர்காணல் தினமலரில்

பருவா பற்றி மற்றுமொரு பார்வை, யமுனைசெல்வன் தளத்தில்

ஆன்லைனில் கிடைக்கின்றது. ஆனால் பிழையில்லா பதிப்பு (அப்படி ஒன்று இருந்தால்) வாங்குவது நலம். 

2 கருத்துகள்:

  1. மகாபாரதத்தின் கதைகள் எந்த வடிவில் இருந்தாலும் படிக்க ஆவல் வரும். நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்த்தால், எனக்கு ஏற்கெனவே இருக்கும் இந்நூலைப் படிக்கும் ஆவல் குறைந்துவிடும் போல! விலை கொடுத்து வாங்காமல் யாராவது கொடுத்தால் படிக்கலாம்!

    விலை மிக அதிகம்!

    பதிலளிநீக்கு
  2. நூல் மிக அருமையானது. பைரப்பாவின் எழுத்து மட்டுமே படிக்க வைக்கின்றது. எழுத்து பிழைகளை சகித்துக் கொண்டால் மிகச்சிற்ந்த அனுபவம். இது முதல் பதிப்பு என்று நினைக்கின்றேன்.அடுத்த பதிப்பு இன்னும் விலை கூட.ஆனால் பிழையில்லா பதிப்பா என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு