08 ஜூன் 2013

யுத்தங்களுக்கிடையில் - அசோகமித்திரன்

"கண்டதையும் கேட்டதையும் அனுபவித்ததையும் வரிசை மாறிக் கூறுவதுதானே கதை" என்று முன்னுரையில் கூறுகின்றார்.

 "இது வெற்றிக் கதையுமல்ல தோல்விக் கதையுமல்ல. பிழைத்திருத்தல் - அதுவும் கூடியவரை நியாயத்தையும் கண்ணியத்தையும் கைவிடாமல் பிழைத்திருத்தல். இவர்களை வீரர்களாகவும் கூறலாம்; சந்தர்ப்பவாதிகளாகவும் கூறலாம்" கதையை பற்றிய அவரது அறிமுகம்.

ஒரு குடும்பத்தின் கதை. கதை நடக்கும் காலம் இரண்டு உலக யுந்தங்களுக்கு நடுவில் நடக்கின்றது. ஒரு பள்ளி ஆசிரியருக்கு பிறந்த ஏகப்பட்ட குழந்தைகளில் மிஞ்சியவர்களின் கதை. 

ஒற்றனில் வரும் ஒரு கதையில், பல கதாபாத்திரங்கள், அவர்களின் உறவுகள் பற்றி வரைபடம் வரைந்து நாவல் எழுதுவது பற்றி எழுதியிருப்பார். அதே போல் எழுதியிருப்பார் போல், அத்தனை பாத்திரங்கள், அத்தனை உறவு முறைகள். இக்கதையில் வராத ஒரு உறவினர் மானசரோவரில் வருகின்றார். 

வழக்கமான ஆரம்பம் முடிவு என்ற அமைப்பு இல்லாத கதை. வாழ்க்கையின் ஒரு பகுதி. நான் லீனியர் கதை. அந்த ஆசிரியரின் பல குழந்தைகளில் மிச்சம் இருக்கும் மூன்று ஆண்கள், மூன்று பெண்களை பற்றி முன் பின்னாக சொல்லி வருகின்றார். 

முதலாம் உலக யுத்த முடிவில் ஒருவனுக்கு வேலை கிடைத்து ஊரை விட்டு போகின்றான், அவனுடன் சேர்த்து அவனது தம்பிகளுக்கும் வேலை தேடி தருகின்றார்ன். ரயில்வே. அசோகமித்திரன் அப்பா ஹைதராபாத்தில் ரயில்வேயில் வேலை செய்திருப்பாரோ. பல கதைகளில் நிஜாம் அரசும், ரயில்வேயும் வருகின்றது.


கதை ஆண்களை பற்றியே பேசினாலும், அடிநாதமாக இருப்பது பெண்கள்தான். பதினாறு குழந்தைகளை பெற்ற பெண், தன்னை விட இரண்டு மூன்று வயது அதிகமான கணவனை அடைந்த பெண், இருபது வயதில் கணவனை இழந்த பெண். 


//யார் இருந்தால் என்ன, யார் மறைந்தால் என்ன, பெண்கள் சுகப்படுவதில்லை//

முன்னுரையில் கூறுவது போல கதை மாந்தர்கள் அனைவரும் சாதரணர்கள். சாதரணர்கள் வீரன் கிடையாது, கோழையும் கிடையாது. வாழ்க்கையை முடிந்த வரை வாழ பார்க்கின்றார்கள். சிறிது சமரசத்துடன். பெண்கள் அவர்கள் இழுத்த இழுப்பிற்கு ஓடுகின்றனர்.

ஐம்பது வருடங்களுக்கு முந்தைய சமூகத்தை நமக்கு காட்டுகின்றார். யுந்த களேபரங்கள். ரயில்வேயின் பெருமை. 

சின்ன நாவல்தான். ஏகப்பட்ட கிளைகள். யார் யாருக்கு என்ன உறவு என்று மனதில் வரிசைப்படுத்திக் கொள்ளும் முன் கதை முடிந்துவிடுகின்றது. அசோகமித்திரனின் கூறாமல் கூறிச் செல்வதைப் பற்றி தனியாக சொல்லத்தேவையில்லை. அவரது வழக்கமான நகைச்சுவை இதில் அவ்வளவாக இல்லை. சர்வசாதரணமாக ஒரு வரியில் பெரிய திருப்பத்தை கூறிவிட்டு அடுத்த பகுதிக்கு போய்விடுகின்றார். சின்ன சின்ன வரிகள். ஆனால் சொல்ல வந்ததை கச்சிதமாக கூறிவிடுகின்றது. முதல் முறை படிக்கும் போது கொஞ்சம் குழப்பும். இரண்டாம் முறை படிக்கும் போது சுவாரஸ்யமாக இருக்கின்றது.

ஒரு வரியில் சொன்னால், நமது பாட்டிகள், தாத்தாக்களின் கதை.