புராண இதிகாசங்களை வரலாற்று பார்வையுடன் மீண்டும் எழுதுவதை பல மொழிகளில் பலர் செய்து இருக்கின்றனர். உதாரணமாக ஜெயமோகனின் வெண்முரசு, பைரப்பாவின் பர்வா, எம்.டி வாசுதேவ நாயரின் இனி நான் உறங்கலாமா. இவை அனைத்தும் மகாபாரதத்தை அடிப்படையாக கொண்டவை. ராமாயணத்தை அப்படி யாரும் மாற்றி எழுதியதாக எனக்கு தெரியவில்லை. சமீபத்தில் அமிஷ் திரிபாதி ஒரு நாவல் தொடரை எழுத ஆரம்பித்துள்ளார், முதல் பகுதி வெளிவந்து விட்டது. இரண்டாம் பகுதி அடுத்த வாரம் வெளிவருகின்றது.
அசுரன் - அந்த வகையில் ராமாயணத்தை அடிப்படையக கொண்டு எழுதப்பட்டுள்ளது. மேலே கூறப்பட்ட நூல்களில் வேறு ஒரு அம்சம் உண்டு, இதிகாசங்களை ஒரு வரலாற்று பார்வையுடன் பார்ப்பது. இதிகாசங்களில் விடுபட்ட இடங்களை நிரப்புவது, சில இடங்களை விரித்து எழுதுவது என்று. அமிஷ், இதிகாச கதையை கொஞ்சம் வரலாறு, விஞ்ஞானம் என்று கலந்துகட்டி ஒரு மசாலா நாவலாக எழுதுகின்றார். அசுரன் இதில் எந்த வகையிலும் சேராமல், தனக்கு தோன்றியதுதான் வரலாறு என்ற பெயரில் எழுதப்பட்ட ஒரு பெரிய குப்பை.
ராமாயணங்களில் பல வித ராமாயணங்கள் உண்டு, வெளிநாடுகளில் கூட ராமாயணங்கள் உண்டு. ஜைன, புத்த மதங்கள் கூட தங்கள் மதத்தை பரப்ப தங்களுக்கென்று ராமாயணங்களை எழுதிக் கொண்டார்கள் என்று கூறுவார்கள். அதில் ஏதோ ஒரு ராமாயணத்தில் வரும் கதை, சீதை ராவணனின் மகள் என்பது. அதை அடிப்படையாக கொண்டு, அசுரர்களின் கதையை எழுதுகின்றே பேர்வழி என்று ராவணன் முதற்கொண்டு அனைவரையும் கேவலமாக சித்தரித்து ஒரு தண்டத்தை எழுதியிருக்கின்றார் ஆனந்த் நீலகண்டன்.