தேவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11 ஆகஸ்ட் 2016

மிஸ்டர் வேதாந்தம் - தேவன்


தமிழின் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவரான தேவனின் நாவல்.

முன்பு தொடர்கதை எழுத ஒரு டெம்ளேட் இருந்திருக்க வேண்டும். நல்லவன் ஒருவன், அவனுக்கு அடுத்தடுத்து துயரம், துக்கம், வேதனை, அழுகை. அவனுக்கு உபத்திரம் செய்ய ஒரு கூட்டமே வேலை செய்ய வேண்டும். அதே சமயம் அவனுக்கு உதவி செய்யவும் சில மாயாவிகள் வர வேண்டும். கதை முடிவதற்கு ஒரு மாதம் வரை துக்கப்பட்டு, துன்பப்பட்டு தொடர்கதை முடியப்போகின்றது என்று தெரிந்தவுடன், துக்கம் எல்லாம் மாயமாய் மறைந்து, துன்பம் செய்த தூர்த்தர்கள் எல்லாம் திருந்தி அல்லது அதற்கான தண்டனை அடைந்து, நல்லவன் வென்றான் என்று முடியவேண்டும்.

தேவன் பல நல்ல கதைகள் எழுதியிருந்தாலும் இது ஒரு டெம்ப்ளேட் கதைதான். லக்ஷ்மி கடாட்சம் என்று ஒரு தொடர்கதை உண்டு. அதே போன்ற ஒரு கதை. வேதாந்தம் ஒரே அந்தியாத்தில் தகப்பனாரை இழந்து, கடனுக்கு சொத்தை இழந்து, வீட்டையும் இழந்து, பி.ஏவும் தோற்று நிற்கின்றான். அதன் பின் ட்யூஷன் வாத்தியாரி, எழுத்தாளருக்கு உதவியாகி, டுபாக்கூர் பத்திரிக்கைக்கு ஆசிரியராகி, இதற்கெல்லாம் நடுவில் கதைகளும் எழுதி, இறுதியில் பத்திரிக்கை உதவியாசிரியராகி, அத்தை மகளை திருமணம் செய்து கொள்கின்றான். நடுவில் அவனுக்கு துரோகம் செய்த உறவினர்களின் நிலையை கண்டு வருந்தி .................

இத்தனையும் மீறி எதற்கு படிக்க வேண்டும் என்கின்றீர்களா, ஒன்று எதையும் படிக்கலாம் என்ற எண்ணம், இரண்டு இதையும் படிக்க வைத்த தேவனின் எழுத்து சாதுர்யம். விறுவிறுப்பான நடை. எதிர்பார்த்த அல்லது தெரிந்த முடிவு என்றாலும், அதைப் சுவாரஸ்யமாக்கும் எழுத்து.

அங்கங்கு வரும் நகைச்சுவை. தேவன் உண்டாக்கும் பாத்திரங்கள் கொஞ்சம் தனித்துவமானவை. இதிலும் அதுமாதிரி பல பாத்திரங்கள்.

வாங்கி படியுங்கள். படுபயங்கர செறிவான, கடினமான, இலக்கியமான நாவல்கள் படித்தாலும், அவ்வப்போது அதிலிருந்து வேறுபட்டு கொஞ்சம் எளிதாக்கிக் கொள்ள இது போன்ற புத்தக்ங்களும் தேவை. குழந்தைகளுக்கு கொடுங்கள். வேகமாக படிக்கும் வழக்கத்தை இது போன்ற புத்தகங்கள் எளிதாக உண்டாக்கும்.

இங்கே கிடைக்கின்றது.

22 ஏப்ரல் 2015

ஜஸ்டிஸ் ஜகந்நாதன் - தேவன்

ஒரு நகைச்சுவை எழுத்தாளர் என்று மட்டும் பலரால் அறியப்படும் தேவன் பல வித்தியாசமான முயற்சிகளையும் செய்துள்ளார். ராஜத்தின் மனோரதம் என்னும் கதை முழுக்க முழுக்க ஒரு வீடு கட்டுவதை அடிப்படையாக கொண்டது. சி.ஐ.டி சந்துரு ஒரு இரண்டு நாளில் பல இடங்களில் நடக்கும் கதையை சொல்வது, துப்பறியும் சாம்பு அனைவருக்கும் தெரியும்.

ஜஸ்டிஸ் ஜகந்நாதன், முழுக்க முழுக்க ஒரு நீதிமன்ற விசாரணையை காட்டும் ஒரு நாவல். ஒரு கொலை வழக்கை பற்றிய கதை. ஒருவன் தன் மாமனாரை கொன்றுவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கூண்டில் நிற்கின்றான். அவன் கொலை செய்தான் என்று கூறும் சாட்சிகள், இல்ப்லை செய்திருக்க மாட்டான் என்று நிரூபிக்க வரும் சாட்சிகள், ஜுரிகள், நீதிபதி, வக்கீல்கள் இவர்களே பாத்திரங்கள். 

மொத்த கதையும் விசாரணைகள் மட்டும்தான். ஒவ்வொரு சாட்சியையும் அரசாங்கத்தரப்பு, எதிர்தரப்பு வக்கீல்களின் விசாரணை செய்வதை வைத்தே மொத்த கதையையும் நகர்த்திச் சென்றிருக்கின்றார். விருமாண்டிக்கு முன்னோடி. ஒரே சம்பவத்தின் பலவித வெர்ஷன்கள். கேள்வி - பதில் வாயிலாக மொத்த சம்பவங்களையும் காட்டி விடுகின்றார். குற்றவாளியா இல்லையா என்பதை கூட சொல்வதில்லை. 

27 பிப்ரவரி 2013

துப்பறியும் சாம்பு - தேவன்

தேவனின் மிகவும் பிரபலமான கதாபாத்திரம் துப்பறியும் சாம்பு. விளாங்காய் தலையும், ஜாடிக் காதுகளும், வழுக்கை தலையும், வளைந்த மூக்கும் கொண்ட ஒரு முட்டாள் (அ) அசடு சாம்பு. ஒரு நாள் ஒரு ஜவ்வாது வாசனையால் சாம்புவின் வாழ்க்கை மாறுகின்றது. ஒன்றுமில்லை வேலை போகின்றது. வேலை போன சாம்பு, வேறு குழப்பத்தில் சிக்கி ஏதோ உளற, அது வேலை செய்கின்றது. சாம்பு துப்பறிபவனாகின்றான். கோபாலன் என்னும் போலிஸ் இன்ஸ்பெக்டர் கூட சேர, சாம்புவின் திறமை (!) ஊரெங்கும் பரவுகின்றது. தமிழ் நாட்டிலும் பம்பாயிலும் பிரக்யாதி பெற்ற சாம்பு, லண்டனிலும் சென்று தன் திறமையை காட்டுவதில் முடிகின்றது.

ஐம்பது கதைகள் மொத்தம். தொடர்ச்சியாக எழுதினாரா, இல்லை விட்டு விட்டு அவ்வப்போது எழுதினார என்று தகவலில்லை. கதைகளை பார்த்தால் தொடர்ச்சியாக எழுதியதுபோலத்தான் உள்ளது.

அனைத்து கதைகளும் ஒரு சில டெம்ப்ளேட்டுகளில் அடைத்துவிடலாம். ஒரு குற்றம், சாம்பு ஏதாவது அச்சு பிச்சு என செய்ய போக, குருட்டு அதிர்ஷ்டத்தில் குற்றவாளி மாட்டிகொள்வான். கோபாலன் கண்ணில் நீர் வழிய சாம்பு நீர் கெட்டிக்காரனய்யா என்று புகழ, சாம்பு மெளனமாக முழிப்பான இல்லை மூர்ச்சையாகி விடுவான். குற்றம் பெரும்பாலும் நகை திருட்டு / வைரக்கடத்தல் / பணதிருட்டு. கொலைகள் பக்கம் சாம்பு அதிகம் போவதில்லை. கொஞ்சம் பயந்தாங்கொள்ளி.

ஐம்பதும் ஒரே மாதிரி என்றாலும், அனைத்தையும் ரசிக்கும் படி எழுதியுள்ளார். குழந்தைகள் விரும்பும் கதைகள் என்றாலும், நாமும் ரசிக்கலாம். சிரிப்பின் அளவு அவரவர் மனநிலையை பொருத்தது. குழந்தைமனமுடையவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கலாம். மிக சீரியசான, ஐம்பது வார்த்தைகளால் ஆன வாக்கியங்கள் கொண்ட குண்டு குண்டு புத்தகங்களை படிப்பவர்களும், எழுத்துக்களை கலைத்து போட்ட கவிதைகளை படிப்பவர்களும், எப்போதும்  வர்க்க வேறுபாடுகளை பேசி பேசி, பேசி பேசி களைத்து போகும் நபர்களும் யோசித்து படிக்கவும்.

02 நவம்பர் 2012

சி.ஐ.டி சந்துரு - தேவன்


 தேவனின் புத்தகங்களை ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் படிக்கலாம் என்று எண்ணினேன். புதிய புத்தகங்களுடன் இதுவும் ஒரு சைட் டிராக்காக ஓடட்டும் என்று. சி.ஐ.டி சந்துருவை படித்திருந்தாலும் அதை விட்டு விட்டு படித்ததில் அவ்வளவாக மனதில் ஒட்டவில்லை. எனவே ஒரே மூச்சில் படிக்கலாம் என்று நினைத்தேன் முடிக்க மூன்று நாளாகியது.


தேவனின் எழுத்து திறமை பற்றி சுதர்சனத்திலேயே கூறிவிட்டாலும் மீண்டும் ஒரு முறை. அவர் எழுத்து புதிதாக தமிழ் படிப்பவர்கள் படிக்க வேண்டிய எழுத்து. சிறு வயதினருக்கு ஒரு தலையணை போன்ற நவீன நாவலை தந்தால் அவர்கள் அதோடு புத்தகம் பக்கம் செல்லும் நினைப்பை மறந்துவிடுவர். தேவன், கல்கி எல்லாம் ஒரு நல்ல ஆரம்பம்.

சி.ஐ.டி சந்துரு தேவனின் மற்றுமொரு கதாபாத்திரம். சாம்புவிற்கு நேர் எதிரிடையான கதாபாத்திரம். சாம்பு குருட்டு அதிர்ஷ்டத்தால் கண்டுபிடிப்பதை, சந்துரு தன் மூளையால் கண்டுபிடிக்கின்றான். கதை விகடனில் தொடராக வந்துள்ளது. தொடர்கதைக்கு ஏற்ற திருப்பங்களுடன் பரபரவென இருக்கின்றது.

19 அக்டோபர் 2012

ஸ்ரீமான் சுதர்சனம் - தேவன்


நடுத்தரவர்க்கம் என்றும் ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருகின்றது. தன்னை விட மேலாக உள்ளவர்களைப் பார்த்து ஏங்குவதும், தன்னைவிட கீழே உள்ளவர்களைப் பார்த்து தன்னை திருப்திப் படுத்திக் கொள்வதுமாக அன்றும் இன்றும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கின்றது. தவறு செய்யப் பயப்படுவதும், அதே சமயம் தவறு செய்யத் தூண்டும் சூழ்நிலைகளுக்கு நடுவில் இருப்பதும், செய்த தவறை நினைத்து தவிப்பதும், ஆசைக்கும் நேர்மைக்கும் நடுவில் வாழும் ஒரு வாழ்க்கை.