முதற்கனல் முடித்த பின்னால் அடுத்து கையில் எடுத்தது கொற்கை.
வாங்கி வைத்து பல மாதங்கள் ஆகிவிட்டது. இரண்டு முறை ஆரம்பித்து படிக்க முடியாமல் வைத்துவிட்டேன். இந்த முறை விடவில்லை, நீயா நானா என்று பார்க்கலாம் என்று அமர்ந்துவிட்டேன். முதலில் படிக்க முடியாமைக்கு காரணம் ஆழி சூழ் உலகை படித்த கையோடு இதை எடுத்ததுதான். அதே நினைவில் இதை படிக்க முற்பட்டது, கதைக்கு உள்ளே நுழைய விடாமல் அடித்துவிட்டது.
ஆழி சூழ் உலகு, பரதவர்களின் கதை. இதுவும் அதேதான் ஆனால் வேறு வகை. பரதவர்கள் மீன் பிடித்தொழிலுடன், தோணித்தொழிலும் உள்ளார்கள். அவர்களின் வாழ்க்கையோடு, கொற்கையின் சரித்திரத்தை சொல்லுவதே இக்கதை. சுமார் 70 வருடக்கதை.
கதை யாரையும் மையமாக கொண்டு அமைந்ததல்ல. கொற்கை நகரை அச்சாக கொண்டது. கொற்கை நகரின் மாற்றங்களே கதை. கொஞ்சம் தப்பினாலும் தூர்தர்ஷன் டாக்குமெண்டரி மாதிரி ஆகியிருக்கும். ஜோ.டி. குருஸின் திறமையால் சுவாரஸ்யமாகியுள்ளது. சில இடங்களில் தொய்வுண்டாகிறது, அலுப்பும் தட்டுகின்றது. நல்லவேளை அம்மாதிரியான பக்கங்கள் அதிகமில்லை.