1991ம் ஆண்டு என்றவுடன் நினைவிற்கு வருவது ராஜீவ் காந்தியின் படுகொலை. இந்திய சரித்திரத்தை மாற்றியமைத்த சில சம்பவங்களில் அதுவும் ஒன்று. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியின் விளிம்பில் இருந்தது. ராஜீவ்காந்தி படு கொலைக்கு முன்னால் நடந்த வாக்குபதிவுகளில் காங்கிரஸ் பெற்ற ஓட்டுக்கள் குறைவே. ராஜீவின் அனுதாப அலை காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பலத்தை சேர்த்துவிடவில்லை. ஒரு மைனாரிட்டி அரசாகத்தான் அமரமுடிந்தது. அந்த அரசிற்கு முன்னாலும் பின்னாலும் பல அரசுகள் முழு ஆதரவின்றி நடந்திருக்கின்றன. எதுவும் தன் ஆட்சிகாலத்தை முழுவதும் முடித்ததில்லை. ஆட்சியில் இருந்த போதும் ஏதும் செய்ய முடியாமல் ஆட்சியை காப்பாற்றி கொள்வதை மட்டுமே செய்ய முடிந்தது.
நிலையான ஆட்சியை விட மிகப்பெரிய இக்கட்டாக இருந்தது அன்றை இந்தியாவின் பொருளாதர நிலை. முந்தைய வி.பி.சிங், ராஜீவ் காந்தி போன்றவர்களின் ஆட்சியின் திறன், இந்திய பொருளாதாரத்தை பாதாளத்தில் தள்ளியிருந்தது. புதிய கடனுதவி ஏதும் கிடைக்காமல், அந்நியச் செலாவணி குறைந்த நிலையில், வெளிநாட்டு இந்தியர்களும் தங்கள் முதலீடுகளை திரும்ப பெற ஆரம்பித்திருந்தனர். காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம் என்று உள்நாட்டு கலவரங்கள் வேறு. இவையனைத்தையும் திறம்பட கையாண்டு, நாட்டை மீட்டவர் இன்று பலராலும் மறக்கப்பட்ட, சொந்த கட்சியினராலேயே திட்ட்மிட்டு மறக்கடிக்கப்பட்ட ஒரு தலைவர், பி.வி.நரசிம்மராவ்.