ப. சிங்காரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ப. சிங்காரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11 டிசம்பர் 2013

கடலுக்கு அப்பால் - ப. சிங்காரம்

கடலுக்கு அப்பால். ஒரு வகையில் புயலிலே ஒரு தோணியின் தொடர்ச்சி எனலாம், அதே சமயம் இரண்டும் வேறு வேறு கதைகள். ஒன்றை விட்டு இன்னொன்றை படிக்கலாம். கதையின் கால வரிசைப்படி புயலிலே ஒரு தோணி முதலில், எழுதப்பட்ட கால வரிசைப்படி முதலில் எழுதப்பட்டது கடலுக்கு அப்பால்,சில கதாபாத்திரங்கள் இரண்டிலும் வருகின்றன. அவ்வளவுதான். இரண்டு கதைகளையும் அவர் யோசித்து வைத்திருக்கலாம். புயலிலே ஒரு தோணியின் ஒரு லீட், கடலுக்கு அப்பாலில் இருக்கின்றது. இதில் வரும் செல்லையா, அதில் ஒரு காட்சியில் தோன்றி மறைகின்றான். 

கடலுக்கு அப்பால் வாழும் தமிழர்களின் கதை. செல்லையா வானா யீனால் மார்க்காவின் அடுத்தாள். ஐ.என்.ஏவில் லெப்டினெட்டாக இருக்கும் செல்லையாவிற்கு, வயிரமுத்துப் பிள்ளையின் மகள் மீது காதல். வான யீனா, சண்டைக்கு போய்ட்டு வந்த பயலால், வட்டித் தொழில் செய்ய முடியாது என்று மகளை வட்டி தொழிலுக்கென்று பிறந்த ஒருவனுக்கு கட்டி தருகின்றார். செல்லையா தன் வழியில் போகின்றான்.

செல்லையா ஒரு சாதரண அடுத்தாள், ஐ.என்.ஏவில் சேர்ந்ததும் அவன் ஒரு போர் வீரனாக மாறுகின்றான். நேதாஜி இறந்ததும், வேறு வழியின்றி முகாமில் இருந்து வெளியேறி வீரர்களை சட்டை மாற்றி விடுகின்றனர். பின் மீண்டும் நெற்றியில் பட்டையுடன் பழைய செல்லையாவாக மாறுகின்றான். பாண்டியனின் ஒரு எதிர் துருவம் செல்லையா எனலாம். பாண்டியன் தேடிக் கொண்டே இருக்கின்றான், எதிலும் அவன் தன்னை முழுக்க ஈடுபடுத்திக் கொள்வதில்லை. செல்லையா அனைத்தாலும் பாதிக்கப்படுவன், உணர்ச்சிகளால் தூண்டப்படுவன். பாண்டியன் தேடி தேடி அடுத்தடுத்து போகின்றான், செல்லையா வாழ்வின் யதார்த்தை எதிர்கொண்டு அமைதியாகின்றான். ஐ. என். ஏவில் இருந்தவரைதான் போர் வீரன், அதற்கு பின் அவன் ஒரு சாதரணன் என்பதை உணர்ந்து கொள்கின்றான். மரகதத்தின் மீதான காதல் தோற்றபின் செல்லையா உணர்வது அவனை, அவனின் காதல் தோல்வியல்ல அவனது ஆணவத்தின், அகங்காரத்தின் தோல்வி. அதை அறிவதுடன் கதை முடிகின்றது.

08 டிசம்பர் 2013

புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று எழுதிவைத்ததால் தேடினார்களோ இல்லை அப்படி தேடியதால் எழுதி வைத்தார்களோ தெரியவில்லை. பல நூறு ஆண்டுகளாக நமது மக்கள், பல நாடுகளுக்கு சென்று திரவியம் தேடி வந்துள்ளனர். அதில் முக்கிய இடங்கள் மலேசியா,பர்மா, சிங்கப்பூர், இந்தோனேஷியா. இரண்டாம் உலகப் போரில் அதிக பாதிப்பு அடைந்தவர்களும் இங்கிருந்தவர்கள். அப்படி இரண்டாம் உலகப்போர் காலத்து தமிழர்களின் வாழ்வினை காட்டுகின்ற ஒரு நாவல் புயலிலே ஒரு தோணி. ஒரு சாகசக் கதை என்று பலர் குறிப்பிடுகின்றார்கள். எனக்கு இதில் வரும் சாகசம் எல்லாம் போதாது. கொஞ்சம் சாகசம் உள்ள கதை என்று வைத்துக் கொள்ளலாம்.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில்தான் நேதாஜி இந்திய தேசியப் படையை அமைத்தார். ஐ.என்.ஏ ஜப்பானியர்களுடன் சேர்ந்து கொண்டு பிரிட்டாஷாரை எதிர்த்து போரிட்டது. நேதாஜியுடன் சேர்ந்தவர்களில் தமிழர்கள் அதிகம். வெளிநாட்டில் பிழைக்க சென்ற ஏராளமான தமிழர்கள், நேதாஜியுடன் சேர்ந்து கொண்டனர். அப்படி சேர்ந்த ஒரு தமிழனின் கதை.


பாண்டியன் தென்பாண்டி நாட்டை சேர்ந்தவன்.  அன்னெமெர் பாண்டியன் இந்தோனேஷியாவில் கெர்க் ஸ்ட்ரீட்டில் அறிமுகமாகி, அங்கிருந்து பினாங் சென்று வியாபாரம் செய்கின்றான். நேதாஜியின் ஐ.என்.ஏவில் சேரும் அவன், அங்கு ஒரு முகாமில் நடந்த சண்டையின் காரணமாக தண்டனை அடைந்து வெளியேற்றப்படுகின்றான். பின்னர் ஒரு முக்கிய பணியில் அமர்த்தப்பட்டு அதில் வெற்றி பெறுகின்றான். நேதாஜியின் திடீர் மரணம், ஐ.என்.ஏவில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. பெரும்பாலனவர்கள் பிரிந்து அவரவர் பழைய தொழிலை பார்க்க திரும்புகின்றனர். பாண்டியனால் அது முடியவில்லை. இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் சுதந்திர போரில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்றான்.