குற்றப்பரம்பரைச் சட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். ப்ரிட்டீஷ் ஆட்சி காலத்தில் ஒரு சில ஜாதி மக்களை குற்றப்பரம்பரையினர் என்று வகைப்படுத்தி அவர்களுக்கு என ஒரு தனிச்சட்டத்தை கொண்டு வந்தனர். அந்த ஜாதி ஆண்கள் அனைவரின் கை ரேகைகளையும் பதிவு செய்து கொண்டு அவர்களை காவல் நிலையத்தில் இரவு முழுவதும் தங்க வைத்தனர்.
இதில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கள்ளர், சேர்வை, அம்பலகாரார் போன்ற ஜாதியினர்கள் என்று கூறப்படுகின்றது. வடஇந்தியாவிலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் களவுக்கு போனவர்கள், போகாதவர்கள் என்று அனைவரும் பாதிக்கப்பட்டனர். காவல் கோட்டம் நாவலில் ஒரு பகுதியும் இதை அடிப்படையாகக் கொண்டது.
வேல.ராமமூர்த்தி, இன்று திரைப்படங்கள் மூலம் இன்று பலருக்கு நன்கு தெரிந்தவர். பட்டத்து யானை என்ற படத்தில் அறிமுகமானார் என்று நினைக்கின்றேன். பெரும்பாலும் ஒரே மாதிரி நடிப்பதால் எந்தப் படம் என்ற குழப்பம் வேறு. பட்டத்து யானை திரைப்பட கதை இவருடையதா என்று தெரியவில்ல அதே பெயரில் இவர் ஒரு நாவலும் எழுதியுள்ளார். தனது தாய், தந்தை இருவரின் பெயரின் முதலெழுத்தையும் சேர்த்து வேல என்று வைத்துக் கொண்டுள்ளார். தன் சமூகத்தின் கதையை எழுதுவதை விட, இன்று அவர்கள் மீது தேவையில்லாது சுமத்தப்பட்ட ஒரு களங்கத்தை களைய வேண்டும் என்பதே அவரது எண்ணம் என்று தோன்றும்படியான முன்னுரை.