நாகேஷ்.
நடிகர்கள் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் மனதில் பதிவது என்பது அவ்வளவு பெரிய விஷயமல்ல. பாட்ஷா, வேலு நாயக்கர், அலெக்ஸ் பாண்டியன், etc etc. ஹீரோக்களுக்கு இது சரி, எத்தனை நகைச்சுவை நடிகர்களின் பாத்திரப்பெயர் நமக்கு நினைவில் இருக்கின்றது. அவ்வளவாக நினைவில் இருக்காது. ஏனென்றால நாம் அங்கு பார்ப்பது நகைச்சுவை நடிகர்களைத்தான், பாத்திரங்களை அல்ல. அதற்கு பெயர் அவ்வளவாக அவசியமில்லாதது. விதிவிலக்கு வெகு சிலர் நாகேஷ், வடிவேலு.
நாகேஷ் என்றவுடன் நினைவில் வருவது படங்களல்ல, தருமியும், வைத்தியும், ஓஹோ ப்ரொடெக்ஷன் செல்லப்பாவும்தான்.
தில்லானா மோகனாம்பாள் படத்தை பார்த்துவிட்டுதான் புத்தகத்தை படித்தேன். படிக்கும் போது சிவாஜி, பத்மினி உருவங்கள் எல்லாம் மறைந்து, என் கற்பனை உருவமே கதை முழுக்க நிறைந்தது. ஆனால் வைத்தியை பற்றி படிக்கும் போது நாகேஷ்தான் என் கண்ணில் தெரிந்தார். இத்தனைக்கும் ஒரிஜினலுக்கும் சினிமாவிற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருந்தும் சினிமாவில் இல்லாத காட்சியில் கூட நாகேஷ்தான் தெரிந்தார். அந்தளவிற்கு அதற்கு உயிரை கொடுத்திருக்கின்றார்.