சிலிக்கான் ஷெல்பில் ஆர்.வி இந்த நாவலை பற்றி நல்லவிதமாக எழுதியிருந்தார். கிண்டில் அன்லிமிட்டடில் கிடைத்தது. எனக்கு அவ்வளவு சிறப்பாக தோன்றவில்லை. ஆதவனின் கதாநாயகன், பாலகுமாரன் நாவலில் வந்து குதித்தது போல இருந்தது. ஆதவன் கதைகளில் நாயகர்கள் எப்போதும் அனைத்தையும் பிளந்து ஆராய்ந்து கொண்டு இருப்பார்கள். எல்லாரையும் விட நாம் ஒரு படி மேல் என்பது போல. அது போன்ற ஒரு நாயகன், பாலகுமாரன் கதைகளில் வரும் பெண்கள் கலந்த நாவல்.
இது முப்பது வருடங்களுக்கு முந்தய காலகட்டத்தை பற்றி பேசுகின்றது. ஆர்வியே அந்த நாயகனுடன் தன்னை பொருத்தி பார்க்க முடிவதாக கூறியிருந்தார். கனவுகளுடன் திரியும் விஸ்வம், அனைத்தையும் ஓரம் கட்டிவிட்டு பிழைப்பை பார்க்க போவதுதான் நாவல். முகவரி படத்திற்கான இன்ஸ்ப்ரேஷன் என்று படித்தேன்.
முப்பது வருடங்களுக்கு முன்பான ஒரு காலகட்டத்தை காட்சிப்படுத்வதில் வெற்றிதான். அதுவே இன்று இந்த நாவலை கொஞ்சம் பழையதாக்கி விட்டது. நாவலை என்பதை விட, அந்த சூழலை பழையதாக்கி விட்டது. மொத்தமாக படிக்கும் போது எனக்கு ஓரளவு நல்ல முயற்சி அவ்வளவுதான். இதற்கு மேல் எழுத ஒன்றும் தோன்றவில்லை.