பாலகுமாரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாலகுமாரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17 ஜூலை 2020

பாலகுமாரன் - சில நாவல்கள்

கிண்டில் அன்லிமிட்டடில் கங்கை கொண்ட சோழன் படிக்கலாம் என்று நினைத்தால், கடைசி பாகத்தை மட்டும் அன்லிமிட்டடில் வைக்கவில்லை. வியாபார உத்தி போல. லைப்ரேரியில் முடிவு பகுதியை கிழித்து வைக்கும் ஆசாமி யாரோ ஐடியா கொடுத்துள்ளார். சரி போகட்டும், உடையார் எப்படி என்றால், அதில் சில பகுதிகளை காணவேயில்லை. சரி கிடைத்த சில நாவல்களை படிக்கலாம் என்று படித்தேன்.

பந்தயப்புறா

பாலகுமாரனைப் படித்து தெளிந்தேன், குரு என்றெல்லாம் பலர் பேசுவதற்கு காரணம், இது போன்ற நாவல்கள்தான். 80களில் இருந்த சூழல் இன்று எந்தளவிற்கு மாறியுள்ளது என்று தெரியவில்லை. ஒரு பெண் தன் தடைகளை விட்டு விலகி பறக்க நினைப்பதும், பறப்பதும்தான் கதை. புதிதாக வேலைக்கு சேரும் ஒருவருக்கு கிடைக்கும் அனுபவங்கள், அங்குள்ளவர்களின் முறைப்புகள், தரப்படும் சில வெட்டி வேலைகள் எல்லாம் பலரை நாவலுடன் தன்னை இணைத்து கொள்ள செய்யும். நான் முதன் முதலில் வேலைக்கு சென்றதுதான் நினைவிற்கு வந்தது. எனக்கு என்ன வேலை தருவது என்று தெரியாமல், சில நூறு பக்க ரிப்போர்ட்களை டைப் செய்ய சொன்னார்கள். வெட்டியாக அதையும் செய்து கொண்டிருந்தேன். இதில் பாலகுமாரனின் மனைவி ஒரு பாத்திரமாக வருகின்றார், சுயவிமர்சனம் போல. இறுதியில் வரும் காதல் எல்லாம் சினிமாக்கு லாயக்கான கதை. இருந்தும் ஓரளவிற்கு நல்ல நாவல்.

16 மே 2018

பாலகுமாரன்

பாலகுமாரன் அறிமுகமான கதையை ஏற்கனவே சில பதிவுகளில் எழுதியிருந்தேன். 90களின் இறுதியிலும் கல்லூரி மாணவர்களிடம் ஹீரோவாகத்தான் இருந்திருக்கின்றார். வெகுஜன எழுத்து என்றாலும் அவர் எழுத்து பலரை மாற்றியிருக்கின்றது என்பதை பலர் பதிவுகளில் காணமுடிகின்றது. அவர் பல அரைவேக்காடுகளை உருவாக்கியிருக்கின்றார் என்பதிலும் எனக்கு எவ்வித சந்தேகமும் கிடையாது. ஆனால் அது அவர் பிரச்சினையில்லை. 

பாலகுமாரன் மீதான எனது ஒவ்வாமைக்கு காரணம் நான் படிக்க ஆரம்பித்தது அவரது பிற்கால எழுத்துக்களை. ஆன்மீக வகையறா, தலைகோதி, கன்னம் தடவி, நெட்டி முறித்து, முதுகை அழுத்தி கொடுத்து, உபதேசிக்கும் நாவல்களை எக்காலத்திலும் என்னால் படிக்க முடியாது. அப்பம் வடை தயிர்சாதம் ஓரளவு பிடித்திருந்தது. ஊர்விட்டு ஊர் சென்று வெற்றி பெரும் ஒரு பிராமண குடும்பக்கதை. படித்து முடித்து விட்டு வேலைதேடி வந்த எனக்கு அந்த நேரத்தில் உபதேசம் தேவையாகத்தான் இருந்தது. அவரது காதல் கதைகள் எல்லாம் ஒன்றும் படித்தில்லை என்பதில் கொஞ்சம் சந்தோஷம்தான். படித்து தொலைத்திருந்தால் என்னாவாகியிருக்குமோ என்று பலரின் அனுபவத்தை படிக்கும் போது தோன்றுகின்றது. 

அவரது எழுத்து இலக்கியமா இல்லையா என்று வழக்கம்போல எங்காவது யாராவது பேசிக்கொண்டிருக்கட்டும். அவரது எழுத்து பலரை படிப்பிற்குள் இழுத்திருக்கின்றது, பலரின் வாழ்க்கையை மாற்றியிருக்கின்றது, பலரை தன்னம்பிக்கை கொண்டு முன்னேறவைத்திருக்கின்றது. அவரது ஆன்மீக நாவல்கள் கூட ஏதாவது ஒருவகையில் பலருக்கு நன்மை செய்திருக்கும். அது போதுமானது. 

மெர்க்குரி பூக்கள், இரும்புகுதிரைகள், அப்பம் வடை தயிர்சாதம் போன்றவை நன்றாகத்தான் இருந்தது. தி.ஜாவுடன் ஒப்பிடுவது அதீதம். உடையார் லிஸ்ட்டில் இருக்கின்றது, கிண்டிலில் வந்தால் வாங்க உத்தேசம். 

ஜெயமோகன் அவரது பல கட்டுரைகளில் இவரும் விரைவில் வணிக அலமாரியில் சென்று அமர்வார், காலம் மறந்துவிடும் என்கின்றார்.  நடக்கலாம், ஆனால் அது எளிதில் நடக்காது. சமீபத்திலும் நடக்காது என்று தோன்றுகின்றது.

06 செப்டம்பர் 2016

இரும்பு குதிரைகள் - பாலகுமாரன்

கடந்த சில நாட்களுக்கு முன்னால் மதுரை, சென்னை செல்ல வேண்டியிருந்தது. தொடர்வண்டி நிலையத்திலிருந்த புத்தகக்கடையில் மேய்ந்ததில் ஒன்று தெரிந்தது. சென்ற வருடம் பார்த்ததற்கும் இந்த வருடம் பார்ப்பதற்கும் எவ்வித வித்தியாசமுமில்லை. அதே புத்தகங்கள். யாரும் வாங்குவதில்லையா என்ன? வழக்கம்போல பாலகுமாரனே அதிகம். சென்னையில் கொஞ்சம் பக்தி, கண்ணதாசன் போன்றவை. சரி, பாலகுமாரனையே வாங்குவோம் என்று இரும்பு குதிரைகளும், மெர்க்குரிப் பூக்களும் வாங்கினேன். 

பாலகுமாரனின் புத்தகங்களை முடிந்தவரை தவிர்ப்பது என் வழக்கம். காரணம், முன்பே ஏதோ ஒரு பதிவில் சொன்னதுதான். கல்லூரியில் சிலரின் கையில் இருந்த பாலகுமாரன் அவர்களை மாற்றியிருந்த விதம். சுத்த தொணதொணப்பு. எதைப்பற்றியும் ஒரு கருத்து இருப்பதாக நினைத்துக் கொண்டு அபத்தமாக பேசுவது, எதிராளியை பேச விடாமல் தனக்குத் தானே பேசிக் கொண்டிருப்பது. மற்றவர்களை விட நான் வித்தியாசமானவன் என்று அலட்டிக் கொள்வது என்று ஒரே போலித்தனம்.  சமீபத்தில் பார்த்த போது தெரிந்தது இன்னமும் திருந்தவில்லை. நான் எப்படி வேலை செய்ய வேண்டும், எங்கு வேலை செய்ய வேண்டும், எப்படி முதலீடு செய்யவேண்டும் என்று ஒரே அலட்டல். தாங்க முடியவில்லை. காரணம், எளிது. பாலகுமாரனையும், ஜெயகாந்தனையும் படித்து அதை போலி செய்ய முயற்சிக்கின்றார்கள். 

பாலகுமாரன் கதைகளில் எப்படியும் அவர் எங்காவது வந்து அமர்ந்து கொள்கின்றார். ("ஸீ, இதைச் சொல்றது பாலகுமாரன்தான். கேரக்டர் மூலமா அவர்தான் பேசறார்) அதற்கு பெயர் கட்டுரை. ஆனால் நான் படித்து பார்த்த நாவல்கள், பாலகுமாரன் "எழுத்து சித்தராக" பரிணாம வளர்ச்சி அடைந்த பின் எழுதியவை. இவ்விரண்டு நாவல்களும் அவரது நாவல்களில் ஓரளவு சுமாரானவை என்று கேள்விப் பட்டதால் துணிந்து வாங்கினேன். நல்லவேளை.

வருடத்திற்கு பத்து பதினைந்து தடவை சொந்த ஊருக்கு பஸ்ஸில் போவதுண்டு. பெரும்பாலும் சாந்திநகரில் ஏறினால், மடிவாலா வரும் முன்பே தூங்கிவிடுவேன். மறுபடியும் முழித்து பார்ப்பது தேனி வரும்போது. ஒரு முறை சென்னைக்கு செல்ல வேண்டியிருந்தது. காரில். தூக்கம் வரமுடியாத சூழல். அன்றுதான் நெடுஞ்சாலைகளை தெளிவாக பார்த்தேன். எத்தனை வண்டிகள். லாரிகள். பெரிய பெரிய கண்டெய்னர்கள். ஒவ்வொரு கனரக வண்டியிலும் எத்தனை விதமான பொருட்கள். காற்றாலை விசிறிகள், பெரிய பாய்லர்கள், இனம் தெரியாத பொருட்கள். ஒரு லாரியில் ஒரு பெரியகல். ஒரே ஒரு கல். ஒரு பெரிய கண்டெய்னர் அளவில். அங்கங்கு இளைப்பாறும் வண்டிகள். ஒரு புதிய உலகு இங்குள்ளது என்று காட்டியது. பின்னர் அலுவலக ரீதியாக மேலும் இதைப்பற்றி அறிய வாய்ப்பு கிடைத்தது. ஒரு பெரிய பொருளை ஓரிடத்திலிர்ந்து இன்னொரு இடத்திற்கு அனுப்புவது என்பது எத்தனை பெரிய வேலை என்பது தெரியவந்தவுடன் ஒரு மலைப்பு. நமக்கு தெரியாத பல உலகங்கள் உள்ளன. பல கோடி மதிப்பிலான பொருளை, ஒரு ட்ரைவர், க்ளீனரை நம்பி அனுப்பி வைப்பவனுக்கு எப்படியிருக்கும். அதுவும் சில பொருட்கள் செல்ல மாதக்கணக்கில் ஆகும். ஓட்டிச் செல்பவனுக்கான பொறுப்பு எத்தகையது. எங்கு சாப்பிடுவார்கள், மற்ற இயற்கை கடன்களை எப்படி தீர்ப்பார்கள், தூக்கம் எப்படி, அத்தனை நாள் குடும்பத்தை விட்டு செல்லும் அவர்களின் மனநிலை...

இந்த பெரிய உலகில் ஒரு சிறிய துளியை நமக்கு காட்டுகின்றது இப்புத்தகம். அந்தவகையில் இது ஒரு குறிப்பிடத்தகுந்த புத்தகம். 

தண்ணித்தொட்டி தெரு. லாரிகள் புழங்குமிடம். இரண்டு லாரிக்கம்பெனிகள். காந்திலால், ராவுத்தர். ராவுத்தரின் லாரிகள் இரண்டும் ஒரே நாளில் பிரச்சினையில் மாட்டுகின்றன. ஒன்று ஆளை அடித்து போட்டுவிட்டு வருகின்றது. இன்றொன்று கிணற்றை இடித்து தொற்றிக் கொண்டு நிற்கின்றது. காந்திலாலின் லாரி, இங்கிலீஷ் கம்பெனியின் லோடை ஏற்றி வரும் வழியில் காணவில்லை. அதைத்தேடி இங்கிலீஷ்க் கம்பெனி ஆள் விஸ்வநாதன் போகின்றான். இங்குதான் கதை ஆரம்பம். லாரிகள் அடிபடமுதல் காரணமாக, கீறல்விட்ட சக்கரத்தை தட்டி, ஒட்டி விற்பதில் ஆரம்பிக்கின்றது. காயலாங்கடையில் எடுத்த சக்கரம், லாரியில் மாட்டப்படுகின்றது. யாரோ ஒருவருடைய வியாபர தந்திரம், மற்றொருவருடைய வியாபாரத்தை சாய்க்கின்றது. 

சாதரணமாக நாம் பார்க்கும் ஒரு லாரியின் பின்னால் எத்தனை கைகள் உள்ளன. லாரியின் முதலாளி, வாடகைக்கு எடுத்து ஓட்டும் டிரைவர் அல்லது லாரிக் கம்பெனியின் டிரைவர். லாரிக்கு லோடு பிடித்து தரும் தரகர்கள், லோடை ஏற்றிவிட்டு பத்திரமாக சேர்ந்ததா என்று நகம் கடிக்கும் கைகள். லோடிற்கு மேல் லோடடிக்கும் டிரைவர்கள், க்ளீனர்கள். லாரியில் பணம் குடுத்து செல்லும் பிரயாணிகள். இவர்களை நம்பி பிழைக்கும் ரோட்டோரப் பெண்கள், அவர்களுக்கு ஆள் பிடிக்கும் பையன்கள். பெரிய வலை. அவையனைத்தையும் இதில் காட்டுகின்றார் பாலகுமாரன்.

டிரைவர்களுக்கும், க்ளீனர்களுக்குமான உறவுமுறை. எழுதப்படாத சட்டங்கள். குருதட்சிணை. வண்டியை ஓட்டுவது என்பது அந்த வண்டியை கையாள்வது மட்டுமல்லவே, மனிதர்களையும் சேர்த்து கையாள வேண்டியது. மற்ற வண்டிகளை ஒட்டும் ஓட்டுனர்கள், முதலாளிகள், அங்கங்கு இருக்கும் டோல் கேட், காவல்துறை எனப்பலவித சூட்சுமங்களை க்ளீனருக்கு, ட்ரைவர் கற்று தருகின்றான். அதற்கான தட்சிணை, கட்டைவிரலுக்கு பதிலாக சிறைவாசம். 

ஒரு நல்ல முதலாளி என்பவன் தான் வளர்வதுடன், தன் தொழிலாளர்களையும் சேர்த்து வளர்ப்பது. இப்போதும் அது போன்ற மனிதர்கள் இருப்பார்கள் என்று நம்புகின்றேன். ஜெயகாந்தனின் "லவ் பண்ணுங்கோ சார்" கதை என்று நினைக்கின்றேன், அதில் முதலாளி - தொழிலாளியை பற்றி அழகாக வரும். கோஷம் போடும் கூட்டம் வரும் முன்னமே, இங்கு பெரும்பாலனவர்கள் அப்படித்தான் இருந்திருக்கின்றனர். ராவுத்தர் பாத்திரம் அப்படிப்பட்ட ஒன்று. 

டீஸல், பெட்ரோல் கண்டெய்னர்களில் இருந்து அவை கொஞ்சம் திருடப்படும் என்பது தெரியும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறை. சென்னையில் இருந்த போது, எனக்கு தெரிந்த ஒரு ஆட்டோ ஓட்டுனர் கூறியது, டீஸல் கண்டெய்னகள், பங்கில் சரக்கை சேர்த்த பின்னும் கண்டெய்னரில் கொஞ்சம் இருக்கும். கண்டெய்னரின் உருளை வடிவத்தால் அடியில் கொஞ்சம் இருக்கும் அதை பம்ப் செய்ய முடியாது. வண்டியை ஸ்டார் செய்து, சடன் ப்ரேக் அடிக்கும் போது வண்டி குலுங்கும், அந்த குலுக்கலில் டீஸல் பைப் வழியாக வெளிய கொட்டும். அப்படியே மிச்சமிருக்கும் டீஸல் பெட்ரோல் எடுக்கப்படும். இப்புத்தகத்தில் வருவது இன்னும் சயன்டிஃபிக்கான முறை. 



லாரிக்கதைகளுடன் மனிதக்கதைகளையும் அழகாக கோர்த்துள்ளார். விஸ்வநாதன் அவரது நண்பர் சுப்ரமணிய ராஜுவின் கேரக்டர் என்று முன்னுரையில் மாலன் கூறுகின்றார். அவரும் ஒரு எழுத்தாளர். பாலகுமாரன் விஸ்வநாதன் பாத்திரத்தையும், காயத்ரி பாத்திரத்தையும் எழுதும் போது வந்து உட்கார்ந்து கொள்கின்றார். விஸ்வநாதன் கூட ஓகே, ஏதோ எழுத்துக்கும், வாழ்க்கைக்கும் நடுவில் போராடும் ஒரு சராசரி ஆசாமி. விஸ்வநாதனின் மனைவியாக வரும் தாரிணி பாத்திரம் யதார்த்தவாதி, கற்பனையில் பறக்கும் புருஷனை தலையில் தட்டி தரைக்கு கொண்டுவருகின்றாள். நான் ஒரு கவிஞன், எழுத்தாளன் எனவே எனக்கு மரியாதை அதிகம் என்று கூறுவதை கண்டிருக்கலாம். ஆனால் அனைத்தையும் விட, ஒரு நல்ல மனிதனாக வாழ்பவன், தன் வாழ்க்கையின் மூலமாக அவர்களை விட பல செய்திகளை சொல்லிவிட்டு போகின்றான். தாரிணி கூறுவது அதையே. அனைவரும் பாரதியாக முடியாது.  

பாலகுமாரன் ஏன் தவிர்க்கமுடியாத எழுத்தாளர் ஆனார் என்பதற்கும் விடை கிடைக்கின்றது. கதை மாந்தர்வாயிலாக இயல்பாக வரும் சின்ன சின்னவிஷயங்கள். அப்பம் வடை தயிர்சாதம் நாவலில் வரும் ஒரு சின்ன விஷயம் "பிழைக்க ஊரைவிட்டு வரக்கூடாது, வந்தால் அதைப்பற்றியே நினைத்துபுலம்பக்கூடாது" எனபது போன்றுவரும். இதன் முன்னும், பின்னும் வரும் விஷயங்கள், ஹோம்சிக் வந்து பெங்களூரில் புலம்பிக்கொண்டிருந்த என்னை கொஞ்சம் மாற்றியது. இப்புத்தகத்திலும் அது போன்று இயல்பாக வரும் விஷயங்களே கவர்கின்றது. கெளசல்யாவிற்கு முதலி சொல்லும் யோசனைகள், ராவுத்தர் பேசும் வார்த்தைகள் என்று. பலருக்கு இது போன்ற நேரடியான அறிவுரையும் தேவையாக இருக்கின்றது.

நாவலை கெடுப்பது என்பது நான் நினைப்பது காயத்ரி பாத்திரம் மட்டுமே.  

இம்மாதிரி பாத்திரங்கள்தான், நான் முதல் பத்தியில் சொன்ன ஆசாமிகளை உருவாக்குவது. ஓவர் இண்டெல்க்சுவலாக நினைத்துக் கொண்டு பேசுவது. எரிச்சல்தான் வருகின்றது. கல்யாணமாகாமல் குழந்தையை மட்டும் பெற்றுக் கொள்ள விரும்பும் பெண். அது ஒன்றும் பெரிய அதிர்ச்சி லெவல் இல்லை, ஆனால் பேசுவது அப்பா. தாங்க முடியவில்லை.

நாவலில் வரும் கவிதைகள், மற்றுமொரு ஸ்பீட் ப்ரேக்க்கர். ஏகப்பட்ட கவிதைகள். கவிதை விரும்பிகள் படித்து இன்புறுவார்களாக.

அவரரிந்த உலகில் ஒரு சிறு பகுதியை இதில் காட்டியுள்ளதாகவே நினைக்கின்றேன்.

இதுவரை படித்த பாலகுமாரனின் பல நாவல்களின் இதுதான் நல்ல நாவல் என்று நினைக்கின்றேன். இது போன்ற நாவல்கள் என்றால் படிக்கலாம்.

பாலகுமாரனின் தளம்

இரும்பு குதிரைகள் வாங்க

17 நவம்பர் 2012

அப்பம் வடை தயிர்சாதம் - பாலகுமாரன்

பாலகுமாரனின் எழுத்துக்களை முதலில் பார்த்தது கல்லூரியில், என்னுடன் படித்த ஒருவன் கையில். இரும்பு குதிரைகள். அவனுடன் கல்லூரியில் ஒரு கோஷ்டி கையில் பாட புத்தகங்களை விட பாலகுமாரன், ஜெயகாந்தன் புத்தகங்களை வைத்துக் கொண்டு திரியும். இதோடு ஓஷோ புத்தக்ங்கள் வேறு. அவர்களைப் படிப்பதாலே அவர்களின் இடத்தில் தான் இருப்பதாக நினைத்து கொண்டு, கொஞ்சம் ஓவராக பேசித்திரியும் அந்தக் கூட்டம்.

பாலகுமாரன் பலரிடம் பெரிய மாற்றத்தை உண்டாக்கி இருந்தாலும் இது போன்ற அறைகுறைகளையும் உண்டாக்கியிருக்கின்றார். கதையின் நடுவே அவர் பேசுவது போலவே பேசுவது, தேவையில்லாத நாடகத்தனம். மொத்தத்தில் எல்லாம் தெரிந்த ஏகாம்பர பெருங்காய டப்பாக்களை உண்டாக்கி இருந்தார் என்ற எண்ணம் எனக்கு வலுவானது.இது ஜெயகாந்தனுக்கும் பொருந்தும் அதனாலேயே எனக்கு கொஞ்சம் ஜெயகாந்தனை, பாலகுமாரனை படிக்க தயக்கமாக இருந்தது.

அதே சமயம் விகடனில் ஒரு புதிய தொடர் ஆரம்பித்தனர் "அப்பம் வடை தயிர்சாதம்"  என்னடா பாலகுமாரன் சமையல் குறிப்பு ஆரம்பித்து விட்டாரா என்று எண்ணிக் கொண்டுதான் படித்தேன். பின்னர் புத்தகமாக வாங்கினேன்.