டீவியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்த போது அதில் யாரோ திருநெல்வேலித் தமிழை பேசிக் கொண்டிருந்தனர். நானும் விளையாட்டாக அதே போல் என் பெண்ணுடன் பேசி விளையாடிக் கொண்டிருந்தேன். அந்த தமிழ் கொஞ்ச நேரத்தில் என் மனைவிக்கு தலைவலியை உண்டாக்குகின்றது என்று தெரிந்தவுடன் இன்னும் பலமாக ஆரம்பித்து பேசிக் கொண்டிருந்தேன். ஒரிஜினல் திருநெல்வேலிக்காரர்கள் கேட்டிருந்தால் உதை கிடைப்பது நிச்சியம். அப்படியே இப்புத்தகம் நினைவிற்கு வந்தது, எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.
தாயார் சன்னதி என்ற தலைப்பை பார்த்த உடன் ஸ்ரீரங்கத்தை பற்றிய கதை என்றுதான் நினைத்தேன். அட்டைப்படமும் அதே போல் இருந்தது. ஒரு கோபுரம் ஒரு யானை, எனக்கு ஸ்ரீரங்கம் நினைவே வந்தது. வாங்கியபின் ஒரு சிறிய ஏமாற்றம்.
ஆனால் அது முழு ஏமாற்றமல்ல. ஸ்ரீரங்கக்கதையல்ல தின்னவேலி கதை. திருநெல்வேலி என்றால் நினைவிற்கு வருவது அல்வா, அதே போல் அந்த தமிழ். இப்புத்தகத்தை படிக்கும் போது அந்த அல்வாவையும் அந்த தமிழையும் ருசித்து மகிழ்ந்த ஒரு திருப்தி கிடைக்கின்றது.
பாலுமகேந்திராவின் சிஷ்யர் சுகா. அவரின் தளத்தில் (அ) சொல்வனம் இணைய இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. புதிதான சரக்கை தன் கடையில் உடனே சூடாக போடும் விகடன் மூங்கில் மூச்சு என்ற பெயரில் தொடர்ந்தது. இப்போது வேறு பெயரில் வேறு யாரோ ஒருவரால் வருகின்றது. ஒரிஜினல் போல் அது இல்லை. கொஞ்சம் போரடிக்க ஆரம்பித்துவிட்டது.
தாயார் சன்னதி என்பது சுகா எழுதிய ஒரு கட்டுரையின் தலைப்பு. அவரது தாயாரை மருத்துவமனையில் சேர்ந்திருந்த போது அவர் கண்ட மற்ற தாயார்களை பற்றிய ஒரு கட்டுரை. மிகவும் நெகிழ்ச்சியான கட்டுரை.