குளிக்க போகலாமா, இல்லை வெயில் வந்த பிறகு குளிக்கலாமா என்று யோசித்து கொண்டிருந்தார் நமச்சிவாயம். எப்படியும் நல்ல வெயில் வர பதினொன்று மணியாகும், அதுவரை எப்படி சாப்பிடாமல் இருப்பது, குளிக்காமல் சாப்பிட மனசு ஒப்பவில்லை. சாப்பிடாவிட்டால் காலை மாத்திரைகள் போட முடியாது, மாத்திரை போடாவிட்டால் கொஞ்சம் கட்டிற்குள் இருக்கும் சர்க்கரை எப்படி ஆகுமோ. ஒரு முடிவுக்கு வந்தவராக எழுந்து சென்று சோபாவில் அமர்ந்தார்.
"சகுந்தலா, எனக்கு டிபன் கொடுத்துடு, சாப்பிட்டு மாத்திரைய போட்டுக்கிறேன்"
மாத்திரை டப்பாவை எடுத்து, சாப்பாட்டிற்கு முன் பின் என்று பிரித்து வைத்துக் கொண்டார். சகுந்தலா கொடுத்த தண்ணீரில் சில மாத்திரைகளை விழுங்கினார். இட்லியில் கை வைக்கும் போது "விநாயகனே வினை தீர்ப்பவனே" என்று சீர்காழியின் கம்பீர குரல் எழுந்தது. பதறி அடித்து எழுந்தவர், தண்ணீரை தட்டி, தட்டை உருட்டி கைபேசியை எடுத்து பார்த்தார். அவரது அண்ணன் மகன் குமார்.