"கவிஞர் ஹரன் பிரசன்னா" எழுதியுள்ள புதிய நாவல் மாயப் பெரு நதி. சாதேவி, புகைப்படங்களின் கதை என்று இரண்டு சிறுகதை தொகுப்பு வெளியிட்டுள்ளார். இது அவரின் முதல் நாவல். சாதேவி தொகுப்பை பற்றிய குறிப்பில்,
//தமிழகத்தில் தமிழை தாய் மொழியாய் கொண்டவர்களை விட பிற மொழியை வீட்டில் பேசுபவர்கள் அதிகமாக இருப்பார்கள் என்று நினைக்கின்றேன். எனது ஊரிலேயே வீட்டில் தமிழ் பேசுபவர்கள் குறைவுதான். கன்னடமும், தெலுங்கும் பேசுபவகளே அதிகம். அந்த மொழியும் தமிழுடன் கலந்து மிகவும் திரபடைந்து போயிருக்கும். பிராமணத்தமிழ் என்பதாக ஒன்று உண்டு, ஆனால் அந்த தமிழ் இந்த பிற மொழி பிராமணர்களிடம் இயல்பாக வருவது கிடையாது. என்னுடைய தமிழைக்கேட்டு பலருக்கு ஐயருன்னு சொல்லிட்டு அந்த பாஷை பேச மாட்டேங்கிறியே என்பார்கள். அது வராது, அந்தந்த ஊரின் வட்டார வழக்குதான் வாயில் வரும். அதே போல பல பழக்க வழக்கங்கள், பண்டிகைகள் எல்லாம் தமிழகத்து பிராமணர்களிடமிருந்து வித்தியாசப்பட்டே இருக்கும். உதாரணம், ஆடி மாதத்தில் யாரும் திருமணம் வைத்துக் கொள்ள மாட்டார்கள், ஆனால் தெலுங்கு, கன்னட பிராமணர்களுக்கு அம்மாவாசை தாண்டியது என்றால் அடுத்த மாதம் பிறந்ததாக கணக்கு. இந்த கூட்டத்தைப் பற்றி எந்த எழுத்தாளரும் பதிவு செய்ததில்லை. பிரசன்னா அதை ஓரளவிற்கு தீர்த்து வைக்கின்றார், சில கதைகள் மூலமாக மட்டும். சும்மா இப்படியும் ஒரு கூட்டம் தமிழகத்தில் இருக்கின்றது என்று தெரிந்து வைத்துக் கொள்ளமட்டும் பயன்படும்.// என்று எழுதியிருந்தேன்.
இந்த நாவலில் அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கின்றார்.