நெய்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நெய்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

02 நவம்பர் 2015

ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முகம்மது மீரான்

ஊரில் எனது வீட்டின் எதிரில் பள்ளி வாசல், பள்ளிவாசலில் ஒலிக்கும் பாங்கு ஒலி கணீரென்று கேட்கும். வேறு வேலையில் இருக்கும் போது கூட அவ்வொலி நேரத்தை காட்டிவிடும். மாலை நேரங்களில் கூட்டமாக குழந்தைகளுடன் பெண்களை காணலாம், மந்திரிக்க வருவார்கள். 

கொஞ்சம் வளர்ந்தபின் முதலில் ஆச்சர்யத்தை அளித்தது, இறந்தவர்களின் உடல் உள்ளேயே புதைக்கப்படும் என்பது. இரண்டாவது கொஞ்சம் பயத்தையும், உடன் படித்தவர்களின் கதைகள். உள்ளே ஒரு ஜின் இருக்கின்றது, அதை கைகளை கட்டி உள்ளே அடைத்து வைத்திருக்கின்றார்கள். ஜின் என்பது ஒரு பேய் என்றளவிற்கு விபரம் தெரியும். மாமா ஒரு இஸ்லாமியரிடம் வேலை செய்ததால், இன்னும் கொஞ்ச விபரங்களும் தெரிந்து கொண்டேன். 

எனக்கு எப்போதும் அவர்களின் பக்தியும், நம்பிக்கையும், ஆச்சர்யமூட்டுபவை. மார்கழி மாதம் ஏதாவது ஒரு நாள் காலையில் கோவிலுக்கு போவதே, பெரிய கொடுமையாக தோன்றும் எனக்கு. ஆனால் சின்ன சின்ன சிறுவர்கள், காலை தொழுகைக்கு தினமும் போவது என்பது மிகவும் போற்றக்கூடியது. அவர்களின் கடவுள், மார்க்கம், கட்டளை மீதான நம்பிக்கை மதிப்பிற்குரியது. 



பலர் கூறுவது போல இஸ்லாமியர்கள் ஒன்று ஒரு தனிப்பட்ட சமூகமாக வாழ்வது போன்று எனக்கு தெரிந்ததில்லை. பலர் அப்படி கூற என்ன காரணம் என்று தெரியவில்லை, ஒரு வேளை நான் சரியாக கவனிக்கவில்லையோ என்ற எண்ணம் தோன்றுவதுண்டு. 

15 ஜூலை 2014

கொற்கை - ஜோ டி குரூஸ்

முதற்கனல் முடித்த பின்னால் அடுத்து கையில் எடுத்தது கொற்கை.

வாங்கி வைத்து பல மாதங்கள் ஆகிவிட்டது. இரண்டு முறை ஆரம்பித்து படிக்க முடியாமல் வைத்துவிட்டேன். இந்த முறை விடவில்லை, நீயா நானா என்று பார்க்கலாம் என்று அமர்ந்துவிட்டேன். முதலில் படிக்க முடியாமைக்கு காரணம் ஆழி சூழ் உலகை படித்த கையோடு இதை எடுத்ததுதான். அதே நினைவில் இதை படிக்க முற்பட்டது, கதைக்கு உள்ளே நுழைய விடாமல் அடித்துவிட்டது.

ஆழி சூழ் உலகு, பரதவர்களின் கதை. இதுவும் அதேதான் ஆனால் வேறு வகை. பரதவர்கள் மீன் பிடித்தொழிலுடன், தோணித்தொழிலும் உள்ளார்கள். அவர்களின் வாழ்க்கையோடு, கொற்கையின் சரித்திரத்தை சொல்லுவதே இக்கதை. சுமார் 70 வருடக்கதை. 

கதை யாரையும் மையமாக கொண்டு அமைந்ததல்ல. கொற்கை நகரை அச்சாக கொண்டது. கொற்கை நகரின் மாற்றங்களே கதை. கொஞ்சம் தப்பினாலும் தூர்தர்ஷன் டாக்குமெண்டரி மாதிரி ஆகியிருக்கும். ஜோ.டி. குருஸின் திறமையால் சுவாரஸ்யமாகியுள்ளது. சில இடங்களில் தொய்வுண்டாகிறது, அலுப்பும் தட்டுகின்றது. நல்லவேளை அம்மாதிரியான பக்கங்கள் அதிகமில்லை.

27 பிப்ரவரி 2014

ஆழி சூழ் உலகு - ஜோடி குரூஸ்

கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல், எப்போதோ பள்ளியில் படித்தது.

மீனவர்களுக்கும் கடலுக்கும் இடையிலான உறவை அழுத்தமாக சொல்லும் கதை எதையும் படித்ததில்லை. முதலில் கடற்கரை பற்றிய கதைகளே படித்ததில்லை. பா. ராகவனின் அலை உறங்கும் கடல், ராமேஸ்வரத்தை மையமாக கொண்ட கதை என்றாலும், அதில் மீனவர்களை பற்றி ஒன்றிரண்டு வார்த்தைகளே.

கடல் என்றால் அலுக்காத ஒரு காட்சி பொருள் என்றுதான் பல நாட்களாக என் எண்ணம், அதை மாற்றியது சுனாமி. அந்த அலைகளுக்கு பின்னால் ஒரு பெரிய சக்தி அமைதியாக உள்ளது என்பது தெரியவந்த பின் அதைக் காணும் போதெல்லாம் ஒரு சிறிய பயம் தோன்றும். சுனாமியின் போது துணிந்து இறங்கி பலரை காப்பாற்றியது மீனவர்கள், அதில் அதிகம் பாதிப்படைந்ததும் அவர்கள்தான். ஆனால் வெகுவிரைவில் அதிலிருந்து மீண்டு வந்துவிட்டனர்.

இடிந்தகரையில் பல ஆண்டுகளாக போராடிவரும் மீனவர்களை கண்டால் எனக்கு வியப்புதான். அவர்களின் தலைவர்களின் நோக்கம், அவர்களின் செயலில் எனக்கு சந்தேகம் இருந்தாலும், இப்பரதவர்களின் கட்டுப்பாடு ஆச்சர்யமளிக்கின்றது. அதுமாதிரியான கட்டுப்பாடு எப்படி வந்தது என்ற கேள்விக்கு விடை தருகின்றது இப்புத்தகம். வங்கக்கடலில் பரந்துள்ள மீனவர்களை சேர்த்துக் கட்டுவது கத்தோலிக்கம். சவேரியாரியால் மதம் மாற்றப்பட்டவர்கள். நன்றிக்காக மதம் மாறியவர்கள். உள்ளூர் மக்களுடன் ஏற்பட்ட போரில் தங்களுக்கு உதவி செய்த போர்ச்சுகீசியர்களுக்காக மதம் மாறினார்கள். . தங்களுக்கு போரில் உதவி செய்தவர்களுக்கு நன்றியாக  மதம் மாறினாலும் அவர்களின் தாய் மதத்தின் தொடர்ச்சியை விடாதவர்கள். பின்னாளில் சவேரியாரால் முழுவதும் மாறியவர்கள். அவர்களின் வாழ்க்கையை பற்றிய ஒரு புத்தகம். பதிவும் கொஞ்சம் பெரியது, பெரிய நாவலில்லையா!!!!