சோ.தர்மன் எழுதிய மற்றொரு நாவல். தூர்வைக்கு பின் வெளிவந்தது. அப்படியே தூர்வைக்கு நேர் எதிரான ஒரு நாவல். தூர்வை ஒரு ஆனந்தமான வாழ்க்கையிலிருந்து மெதுவாக சரியும் ஒரு கதை. இது போராட்டத்திலேயா வாழ்ந்து முன்னேறி மெதுவாக சரியும் ஒரு கதை. இரண்டையும் ஒப்பிட வேண்டிய அவசியமில்லை என்றாலும், இரண்டுமே அக்கால தலித் மக்களின் வாழ்க்கையின் பகுதிகளை காட்டுகின்றது என்ற வகையில் ஒப்பிடவே தோன்றுகின்றது.
நாவலின் மொழி இதில் வேறுவிதமாக அமைந்துவிட்டது. இரவில் மட்டும் விழித்திருக்கும் ஒரு ஆற்றல் மிகுந்த பறவை, பகலிலேயெல்லாம் குட்டி குட்டி பறவைகளாலும் துன்புறுத்தப்படும் கூகை இங்கு தாழ்த்தப்பட்ட மக்களின் குறியீடாக வருகின்றது என்று அனுமானித்துக் கொள்ளலாம்.
இதில் அனைத்து ஜாதிகளின் பெயர்களும் தெளிவாக கூறப்படுகின்றன. அவர்களுக்கிடையிலான வித்தியாசங்கள், உழக்கில் கிழக்கு மேற்கு என்பது போன்று அவர்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் வந்து போகின்றன. சீனிக்கிழவனை மையமாக கொண்டு கதை போகின்றது. கூலிக்காரர்களாகவும், ஜமீன் நிலங்களிலும், மற்ற உயர் சாதி நிலங்களிலும் ஓசிக்கும் வாரச்சோற்றுக்கும் வேலை செய்யும் மக்களிடம், ஒரு பிராமணர் தன் நிலத்தை ஓப்படைத்து செல்கின்றார். அதை வைத்து முன்னேறும் அவர்கள், வேறு வகையில் மீண்டும் அதே பெரிய மனிதர்களிடம் மாட்டிக் கொள்வதுடன் கதை முடிகின்றது.