கிழக்கு பதிப்பகம் சில வருடங்களுக்கு முன்பு ஏகப்பட்ட புத்தகங்கள் வெளியட்டது. நான் கூட எங்கே இன்னொரு மணிமேகலை பிரசுரமாகிவிடுமோ என்று கூட யோசித்தேன். அப்போதே விமர்சனங்களையும் சந்தித்தது. இணையத்திலிருக்கும் தகவல்கலை திரட்டி புத்தகமாக்குகின்றார்கள் என்று. காரணம், அவர்களின் புத்தக வரிசை அப்படி, பெரும்பாலான புத்தகங்களின் உள்ளடக்கம் நீங்கள் தேடினால் கிடைக்கும் அல்லது அதைப்பற்றி ஏகப்பட்ட புத்தகங்கள் வெளியாகியிருக்கும். ஆனால் அவையனைத்தையும் ஒன்று திரட்டி தேவையானதை மட்டும், சுவாரஸ்யமாக தருவதே நல்ல ஆசிரியரின் திறமை. அந்த வகையில் பாரா ஒரு நல்ல ஆசிரியர். ஆனால் அனைத்து புத்தகங்களும் ஒரு தலை பட்சமாகவே இருக்கும் . நமது புராண மரபையொட்டி பாட்டுடை தலைவனை விதந்தோதும் மரபை அவர் உடைப்பதில்லை. அல்கொய்தா பற்றி எழுதினாலும் சரி, மாவோயிஸ்ட் பற்றி எழுதினாலும் சரி.
மாவோயிஸ்ட் என்பது இடதுசாரி தீவிரவாத கள் இருக்கும் மொந்தையின் தற்போதைய பெயர்.
நக்ஸலைட் வரலாற்றை சுருக்கமாக சொல்லும் ஒரு புத்தகம். அதே சமயம் வாசக சுவாரஸ்ய புல்லறிப்பு சொறிதலுக்கென்று ஏகப்பட்ட சாகசங்களையும் கலந்து எழுதப்பட்ட ஒரு வீர(!!) வரலாறு. சீனப்புரட்சியை கண்டு நாக்கில் நீர் ஊற இங்கும் அதே புரட்சியை நடத்த கிளம்பியவர்களின் நோக்கம், மக்கள் விடுதலை. சில சமயம் அந்த விடுதலையை அவர்களை கொல்வதன் மூலமும் தரலாம் என்ற நிலைக்கு இன்றுறு வந்து நிற்பதன் காரணம், அதிகாரப்பசி. அதை பற்றி பேசாமல் புத்தகம் முழுவதும் அவர்களை ஒரு விடுதலை வீரர்களாக, ஒரு கதாநாயக பிம்பத்தை காட்டி செல்கின்றது.
சாரு மஜூம்தாரின் இயக்கம், மக்கள் யுந்தக்குழு போன்றவற்றின் தோற்றத்தின் காரணம் சரிதான். அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழும் கதாநாயகர்கள். ஆனால் கண்ணிவெடி வைப்பது, சிறைக்கைதிகளை விடுவிப்பது போன்றவை தீவிரவாதம் என்ற பெயரில்தான் அழைக்கப்படவேண்டும். ஆனால் புத்தகம் முழுவதும் அவர்கள் செய்வது அனைத்தும் ஒரு சாகச செயல் போல காட்டியிருப்பது எரிச்சலாக வருகின்றது. காவல்துறையினரின் அத்துமீறல் போன்றவற்றை அப்படியே நேரில் கண்டது போல எழுதும்போது, தீவிரவாகள் மக்களை மிரட்டி ஆள்வதை மட்டும் யாரோ எவரோ தூத்துக்குடி பக்கம் சொன்னாங்க என்பது போன்று எழுதுவதை ஏற்க முடியவில்லை.
ஆசிரியர் "அவர்களின் நியாத்தையும் கூறவேண்டும் " என்பதாக தீவிரவாதிகளைப் பற்றி எங்கோ எழுதியிருந்ததை படித்தேன். மிகச்சரி. அவர்களின் நியாயம் என்பது அவர்ள் ஆயுதம் ஏந்துவதற்கான காரணம் மட்டுமே. ஆயுதத்தை ஏந்திய பின் அவர்கள் செய்யும் தவறுகளை எல்லாம், அரசின் செயல்களுக்கு எதிர்வினை என்று புரிந்து கொள்வது அல்லது விளக்குவது சரியாகாது. அவர்கள் தொடுப்பது இந்திய அரசின் மீதான யுத்தம் என்றால் அவர்களை அழிப்பதற்கு இந்திய அரசு செய்வது எதையும் தவறு என்று கூறமுடியாத நிலைக்கு அவர்கள்தான் காரணம் என்பதையும் சொல்ல வேண்டும். பல கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாததன் காரணமே அவர்களை ஆயுதம் ஏந்த வைக்கின்றது என்ற உண்மையை சொல்லும் போது, அதே அரசு அமைதிக்காக அங்கு செய்ய முற்படும் வளர்ச்சிப் பணிகளை தடை செய்வதும் அவர்களே என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும். இப்போது அரசு அவர்கள் பகுதிகளில் செய்யும் அனைத்தையும் தடுப்பது அவர்கள்தான். வெளிநாட்டிலிருந்து உதவிகள் இல்லை என்று புத்தகம் கூறுகின்றது. மாவோயிஸ்ட்டுகளை வளர்ப்பதே சீனாதான் என்று அரசு சொல்வதையும் காற்றில் விட முடியாது.
அடக்குமுறைக்கு எதிராக எழுந்ததுடன் புரட்சி வேகம் எல்லாம் முடிந்துவிடுகின்றது. அதன் பின்னால் இருப்பது வெறும் வன்மம். அறத்தை விட்டுவிட்ட புரட்சி வெறும் தீவிரவாதம். அதை புரட்சி என்று விதந்தோதுவது மக்களுக்குத்தான் ஆபத்து.