28 அக்டோபர் 2013

செம்பருத்தி - தி. ஜானகிராமன்

செம்பருத்தி மோகமுள்ளிற்கு கீழே அன்பே ஆரமுதா வகையறாவிற்கு மேலே.சட்டநாதன் குடும்பத்தின் மூன்றாவது பிள்ளை. அவனது ஆசிரியர் மகளான குஞ்சம்மாளை காதலிக்கின்றான். பழைய சினிமா பாணியில் அவள் அவனது இரண்டாவது அண்ணனுக்கு மணமுடிக்கப் படுகின்றாள். சட்டநாதன் சின்ன அண்ணனுடன் கடையில் இருக்கின்றான். பெரிய அண்ணன் வெளியூரில் வசதியாக இருக்க, சின்ன அண்ணன் இறந்து போகின்றான். சட்டநாதனுக்கு சின்ன அண்ணன் பார்த்து வைத்திருந்த பெண் புவனாவுடன் திருமணம் நடக்கின்றது. கடையையும் நடத்த ஆரம்பிக்கின்றான். தன் குடும்பம், சின்ன அண்ணன் குடும்பம் என இரண்டு குடும்பங்களையும், பின்னர் பெரிய அண்ணன் குடும்பம் என மூன்று குடும்பங்களையும் சட்ட நாதன் பல பக்கங்களுக்கு காப்பாற்றுகின்றான். ஹாவ்வ்வ்

வழக்கமான தி. ஜா ப்ராண்ட் பெண்கள். காதலும் காமமும் கலந்த பெண்கள். ஜெயமோகன் எழுதியிருந்தது, "அம்மா வந்தாளின் இந்து தான் குஞ்சம்மாள், அலங்காரத்தம்மாள்தான் பெரிய அண்ணி, ஒரு சிறிய காட்சியில் தோன்றி மறையும் பெண் (அப்புவிற்கு அவனது அப்பா பார்த்து வைத்திருக்கும் பெண்) புவனா". சரிதான். குஞ்சம்மாள் கணவனை இழந்த பின்னும், சட்டநாதனின் காதலை மறவாமல் அவனை பார்த்துக் கொண்டிருப்பது மட்டும் போதும் என்று அங்கேயே இருக்கின்றாள். புவனாதான் செம்பருத்தி, தலைப்பின் நாயகி.

23 அக்டோபர் 2013

மரப்பசு - தி. ஜானகிராமன்

மரப்பசு. தலைப்பை பார்த்தவுடன் என்ன மாதிரியான கதை என்று யூகிக்க முடியாமல் தி. ஜானகிராமன் என்ற பெயரை பார்த்து வாங்கியது. மோகமுள்ளை பற்றி கேள்விபட்டு அதை தேடி அது இல்லாததால் இதை வாங்க நேர்ந்தது. அதோடு சற்று விலை குறைவாகவும் இருந்தது. இது நான் படித்த தி.ஜாவின் முதல் புத்தகம். வழக்கமான தி. ஜாவின் தஞ்சாவூர் பிண்ணணியில் ஆரம்பிக்கும் கதை எங்கெங்கோ போகின்றது.

அம்மிணி - கோபாலி. அம்மிணி ஒரு கல்லூரியில் படிக்கும் பெண், கோபாலி ஒரு பெரிய பாடகர். கோபாலியிடம் ஒரு தேங்காய் மூடி கச்சேரிக்காக வரும் அம்மிணியை கோபாலி மடக்கி போடுகின்றார். இது வரை ஏதோ ஒரு வகையில் கோப்பாக சென்ற கதை பின் தறிகெட்டு பாய்கின்றது. பார்ப்பவர்களை எல்லாம் தொட்டு பேச விரும்பும் அம்மிணி, அவளின் வெளிநாட்டு பயணம், அங்கு விளையாடும் விபச்சார விளையாட்டு, சந்திக்கும் ஒரு போர்வீரன், கோபாலியின் உறவினன், வேலைக்காரி. என்ன சொல்ல விரும்புகின்றார் என்பதே குழப்பம்தான். கடைசியில் தலை வெள்ளையாய் போய் அமர்கின்றாள். 

17 அக்டோபர் 2013

ஜெயமோகன் குறுநாவல்கள்

ஜெயமோகனின் குறுநாவல்களின் தொகுப்பு. அவரின் மொத்த குறுநாவல்கள் அனைத்தும் உள்ளதா, இல்லை தேர்ந்தெடுத்த கதைகளா என்று தெரியவில்லை. விதவிதமான கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான களத்தில் எழுதப்பட்டுள்ளது. ஒரு சில கதைகள் குறுநாவல் என்பதை விட பெரிய சிறுகதைகள் என்று கூறலாம்.

ஜெயமோகனின் பெரிய பலமான தளம் தொன்மம் சார்ந்த கதைகள். அவரின் மற்ற கதைகளை விட அந்த மாதிரியான கதைகளே மிகவும் பிடித்தமாக உள்ளது.


கிளிக்காலம்

கிளிக்காலம், இரண்டுங்கட்டான் என்று கூறப்படும் வயதிலுள்ள சிறுவர்களை(?)ப் பற்றிய கதை. கதைநாயகன் பெயர் ஜெயன் (!). சிறுவர்கள் என்ற இடத்திலிருந்து பெரியவர்கள் என்ற இடத்திற்கு நகரும் கதை. அந்த பருவத்தினருக்கு இருக்கும் விபரீத சந்தேகங்கள், பெண்களை பற்றிய மயக்கங்கள் எல்லாம் இயல்பான உரையாடல்களில் வெளிப்படுகின்றது. மிகவும் கவரவில்லை.

பூமியின் முத்திரைகள்

பாதி கதையிலேயே தூக்கம் வருகின்றது. பயங்கர போரான கதையாக படுகின்றது எனக்கு. கதை உள்ளேயே போக மறுக்கின்றது. யாருக்காவது மிகவும் பிடித்திருக்கலாம்.  அவர்களுக்கு வாழ்த்துக்கள். கிறிஸ்துவ பிண்ணனியில் அமைந்த கதை.

15 அக்டோபர் 2013

கனவு தொழிற்சாலை - சுஜாதா

சமீபத்தில் சாரு நிவேதிதா அவரது தளத்தில் அசோகமித்திரனை போட்டு சாத்தியிருந்தார். காரணம் அ.மி ஜெயமோகனை பெரிய எழுத்தாளர் என்று கூறிவிட்டார். அந்த பாட்டை மட்டும் பாடி விட்டிருந்தால் பரவாயில்லை, அதோடு மற்றவர்கள் எல்லாம் சும்மா என்று அனுபல்லவியையும் பாடிவிட்டார். சாரு நிவேதிதாவின் தாக்குதலில் அவர் அசோகமித்திரனின் கரைந்த நிழல்களையும், சுஜாதாவின் கனவு தொழிற்சாலையையும் ஒப்பிட்டிருந்தார், இரண்டும் ஒரே மாதிரி என்று, இது கனவு தொழிற்சாலையை மீண்டும் எடுத்துப் படிக்க தூண்டியது.

கரைந்த நிழல்களையும், கனவு தொழிற்சாலையையும் ஒப்பிடவே முடியாது. இரண்டும் சினிமா சம்பந்தப்பட்ட கதை என்றாலும், கரைந்த நிழல்களின் உலகம் தனி, கனவு தொழிற்சாலையின் இடம் தனி. கரைந்த நிழல்கள் சில படிகள் மேலேதான் அமர்ந்திருக்கின்றது.

கனவுதொழிற்சாலை, சினிமாவின் பெரும்பாலான தளங்களை தொட்டு செல்கின்றது. அருண், அருமைராசன், மனோன்மனி என்று மூன்று ட்ராக். அருண் வெற்றி பெற்ற சினிமா நடிகன், வெற்றியை தக்கவைக்க போராடும் நடிகன். அருமைராசன் சினிமாவில் நுழைய போராடி, பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்து ஜெயிப்பவன், மனோன்மணி போராடி கடையில் பொசுங்கி போகின்றாள்.