திருப்பதி என்றால் நினைவிற்கு வருவது லட்டு என்றால் தப்பில்லை. அதற்கு பின்னால் தான் அங்குள்ள பெருமாள். அனைவரும் திருப்பதி திருப்பதி என்றாலும் திருப்பதி என்பது மலையின் கீழ் உள்ள ஊர். வேங்கடநாதன் குடி கொண்டுள்ள இடம் திருமலை. அத்திருமலையின் வரலாறுதான் இப்புத்தகம்.
ரிலையன்ஸ் டைம் அவுட்டில் தமிழ் புத்தகங்களும் கொஞ்சமே கொஞ்சம் உண்டு. பல சமையல் புத்தகங்கள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, யார் ..... என்பதற்கு நடுவில் ஒரு ஓரமாக கிடந்தது இப்புத்தகம். பக்திகதைகளை புத்தகமாக வாங்கியதில்லை. இது வரலாறு என்று கூறுகின்றதே என்ன என்று பார்க்கலாம் என்று வாங்கினேன். வீண் போகவில்லை. திருமலை பற்றிய பல புதிய செய்திகளை கூறுகின்றது.
இன்று மிகப்பெரிய பணக்கார கடவுள் (இந்த வரியே கொஞ்சம் அபத்தமாக உள்ளது, இருந்தும் வேறு வழியில்லை). தினம் தோறும் உற்சவம், லட்சக்கணக்கான பக்தர்கள், கோடிக்கணக்கான காணிக்கைகள் என்று காட்சியளிக்கும் திருமலை ஒரு காலத்தில் வெறும் வனாந்திரம். காட்டு மிருகங்கள் சுற்றி திரிந்த அடர்ந்த பிரதேசம். இரண்டு நாழி அரிசியும், இரண்டு நந்தா விளக்குகளுடனும், தனியாக நின்று கொண்டிருந்திருக்கின்றார்.
இன்று திருப்பதி ஆந்திராவில் இருந்தாலும் அவர் முழுக்க முழுக்க தமிழ்நாட்டை சேர்ந்தவர். (நல்ல வேளை அங்கு போனார், இங்கிருந்தால் நமது கடவுள் நம்பிகையற்ற அறங்காவலர்கள் கையில் தந்து அவரை மொட்டையடித்திருப்பார்கள்). அங்கிருப்பது பெருமாளே அல்ல, முருகன்; சிவன்; இன்னும் பல கதைகளை கேட்டிருக்கின்றேன். இப்புத்தகமும் அதையே சொல்கின்றது. மூலத்திருமேனியில் சங்கு சக்கரம் கிடையாது. இடையில் வாளும் உள்ளது. அவருக்கு பெயரும் வேங்கடத்துறைவர். இன்று திருமலை அருகில் உள்ள பெரிய ஊர் திருப்பதி, அன்று சந்திரகிரி.