விகடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விகடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 செப்டம்பர் 2013

பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா

விகடனில் வந்த தொடர்கதை. அந்த காலத்தில் பலரையும் கவர்ந்த கதை. ஆனந்த தாண்டவம் என்ற பெயரில் சினிமாவாகவும் வந்திருக்கின்றது.

மதுமிதா, ரகுபதி, ரத்னா, ராதா கிஷண். இவர்களை மையமாக வைத்து ஓடும் கதை. ரகுபதிக்கு நிச்சயம் செய்யப்பட்ட மதுமிதாவை புயல் போல கடத்திக்கொண்டு அமெரிக்கா போகும் ராதாகிஷண். அந்த தோல்வியினால் தூண்டப்பட்டு படிக்க அமெரிக்கா போகும் ரகுபதி, அங்கு அமெரிக்காவால் ஜீரணம் செய்யப்பட்ட மதுமிதாவை மீண்டும் சந்திக்கின்றான். மதுமிதாவால் அறிமுகம் செய்யப்பட்ட ரத்னாவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யும் போது, மதுமிதாவின் மறு பிரவேசம். கடைசியில் அமெரிக்கா மதுமிதாவை ஒரு பெட்டியில் அடக்கி இந்தியாவிற்கு அனுப்பி வைக்கின்றது.

கதை ஒரு சாதாரண கதை. அதை சொல்லும் விதத்தில்தான் கதையின் முழு வெற்றியும் அடங்கியுள்ளது. சுஜாதாவின் கதை சொல்லும் திறன் கதைக்குள் நம்மை இழுக்கின்றது. அழகான வர்ணனை, சின்ன ட்விஸ்டுகள், சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள், சுவாரஸ்யமான சம்பவங்கள் என்று அடுத்தடுத்து இழுத்து கொண்டு போய்விடுகின்றார். முதல்பாகத்தில் பாபநாச சிலுசிலுப்பில் இருக்கும் கதை, அடுத்த பகுதியில் அமெரிக்க வேகத்தில் பறக்கின்றது.

06 மார்ச் 2013

வாஷிங்டன்னில் திருமணம் - சாவி

வீட்டைக் கட்டி பார், கல்யாணம் செய்து பார் என்ற பழமொழி எக்காலத்திற்கும்  பொருந்தும் போல. இன்று இந்த இரண்டும் காண்டிராக்டர்களால் செவ்வனே நடத்தி முடிக்கப்படுகின்றது. இருந்தும் கல்யாண பையனுக்கு மனைவி மட்டும் அல்ல, கல்யாண காண்டிராக்டரும் அமைவது இறைவன் கொடுத்த வரம். 

காண்டிராக்டர் கையில் அனைத்தையும் கொடுத்துவிட்டாலும், உள்ளே ஒரு டென்ஷன் ஓடிக் கொண்டே இருக்கும். அதை யாரிடமும் தர முடியாது. அந்த கடவுளே வந்து கவலையை விடு நான் பார்த்து கொள்கின்றேன் என்றாலும், நமக்கு அவர் யாரவது ஆதிமூலமே என்று கூப்பிட்டு ஓடிவிட்டால் என்ன செய்வது என்ற பயம் இருக்கும். 

இன்றைய விஞ்ஞான வசதிகள் நிறைந்த காலத்திலேயே ஒரு திருமணத்தை நடத்தி வைப்பது இவ்வளவு சிரமம் என்றால், ஒரு ஐம்பது, அறுபது வருடம் முன்பு எப்படி இருக்கும். இங்கு நடக்கும் கல்யாணத்தை அமெரிக்காவில் செய்தால் என்னவாகும்? 

திருவையாறில் வெள்ளைக்காரர்களை பார்த்த சாவி, அதை கொஞ்சம் மாற்றி யோசித்ததன் விளைவு இக்கதை. விகடனில் தொடராக வந்து பெரிய வெற்றி பெற்றது. நாடகமாக கூட வந்துள்ளது என்று நினைக்கின்றேன்.

27 பிப்ரவரி 2013

துப்பறியும் சாம்பு - தேவன்

தேவனின் மிகவும் பிரபலமான கதாபாத்திரம் துப்பறியும் சாம்பு. விளாங்காய் தலையும், ஜாடிக் காதுகளும், வழுக்கை தலையும், வளைந்த மூக்கும் கொண்ட ஒரு முட்டாள் (அ) அசடு சாம்பு. ஒரு நாள் ஒரு ஜவ்வாது வாசனையால் சாம்புவின் வாழ்க்கை மாறுகின்றது. ஒன்றுமில்லை வேலை போகின்றது. வேலை போன சாம்பு, வேறு குழப்பத்தில் சிக்கி ஏதோ உளற, அது வேலை செய்கின்றது. சாம்பு துப்பறிபவனாகின்றான். கோபாலன் என்னும் போலிஸ் இன்ஸ்பெக்டர் கூட சேர, சாம்புவின் திறமை (!) ஊரெங்கும் பரவுகின்றது. தமிழ் நாட்டிலும் பம்பாயிலும் பிரக்யாதி பெற்ற சாம்பு, லண்டனிலும் சென்று தன் திறமையை காட்டுவதில் முடிகின்றது.

ஐம்பது கதைகள் மொத்தம். தொடர்ச்சியாக எழுதினாரா, இல்லை விட்டு விட்டு அவ்வப்போது எழுதினார என்று தகவலில்லை. கதைகளை பார்த்தால் தொடர்ச்சியாக எழுதியதுபோலத்தான் உள்ளது.

அனைத்து கதைகளும் ஒரு சில டெம்ப்ளேட்டுகளில் அடைத்துவிடலாம். ஒரு குற்றம், சாம்பு ஏதாவது அச்சு பிச்சு என செய்ய போக, குருட்டு அதிர்ஷ்டத்தில் குற்றவாளி மாட்டிகொள்வான். கோபாலன் கண்ணில் நீர் வழிய சாம்பு நீர் கெட்டிக்காரனய்யா என்று புகழ, சாம்பு மெளனமாக முழிப்பான இல்லை மூர்ச்சையாகி விடுவான். குற்றம் பெரும்பாலும் நகை திருட்டு / வைரக்கடத்தல் / பணதிருட்டு. கொலைகள் பக்கம் சாம்பு அதிகம் போவதில்லை. கொஞ்சம் பயந்தாங்கொள்ளி.

ஐம்பதும் ஒரே மாதிரி என்றாலும், அனைத்தையும் ரசிக்கும் படி எழுதியுள்ளார். குழந்தைகள் விரும்பும் கதைகள் என்றாலும், நாமும் ரசிக்கலாம். சிரிப்பின் அளவு அவரவர் மனநிலையை பொருத்தது. குழந்தைமனமுடையவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கலாம். மிக சீரியசான, ஐம்பது வார்த்தைகளால் ஆன வாக்கியங்கள் கொண்ட குண்டு குண்டு புத்தகங்களை படிப்பவர்களும், எழுத்துக்களை கலைத்து போட்ட கவிதைகளை படிப்பவர்களும், எப்போதும்  வர்க்க வேறுபாடுகளை பேசி பேசி, பேசி பேசி களைத்து போகும் நபர்களும் யோசித்து படிக்கவும்.