22 மே 2014

கள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து

வைரமுத்துவின் புத்தகங்களில் நான் முதலில் படித்தது இதுதான். வைகை அணைக் கட்டுமானத்தை வைத்து அப்பகுதி மக்களை பற்றி எழுதப்பட்டது. சொந்தக்கதை. 

பேயத்தேவர் என்னும் ஒரு வைரக்கிழவனாரின் கதை. அவர் மூலமாக அப்பகுதி மக்களின் வாழ்க்கை முறையை, பழக்க வழக்கங்களை எழுதியுள்ளார். சுமாரான கதைதான். ஓஹோ என்று புகழமுடியாவிட்டாலும், சுத்த திராபை என்றும் கூற முடியாது. 

பாத்திரங்கள் வெகு இயல்பு. வெள்ளந்தி கிராமத்து மனிதர்கள். கோபமோ, பாசமோ தன்னை திறந்து கொட்டும் மனிதர்கள். விவசாயியின் கஷ்டம். அதிகாரிகளின் இயந்திரத்தனம் எல்லாம் அங்கங்கு வந்து போகின்றது.

மாட்டிற்கு பிரசவம் பார்ப்பது, சாராயம் காய்ச்சுவது, கோழி குழம்பு வைப்பது, ஆடு திருடுவது, கிணறு வெட்டுவது என்று சின்ன சின்ன நுணுக்கங்கள்.  வட்டார வழக்கு, எங்கள் பகுதி வழக்கு. மதுரை தமிழில் இருந்து கொஞ்சமே கொஞ்சம் வேறு பட்டிருக்கும். அப்பகுதிகாரர்களுக்கு அது தெரிந்து விடும். அதை படிக்க மிக சந்தோஷம். அணை கட்ட ஆரம்பித்தவுடன் கதை பரபரவென்று போகின்றது. 

01 மே 2014

இரவுக்கு முன் வருவது மாலை - ஆதவன்

சென்ற வருட பெங்களூரு புத்தக கண்காட்சியில் ஆதவனின் என் பெயர் ராமசேஷன் புத்தகத்தை வாங்கினேன். அப்போது அங்கிருந்தவர் அவரது மற்ற நாவல்களை பரிந்துரை செய்தார். தயக்கமாக இருந்ததால் வாங்கவில்லை. ஆனால் அப்புத்தகம் நன்றாக இருந்தது. துணிந்து மற்ற புத்தகங்களும் வாங்கினேன்.

இரவுக்கு முன் வருவது மாலை ஆதவனின் குறுநாவல்களின் தொகுப்பு. "இந்த திறமையான இளைஞரின் குறுநாவல்களை ஏன் நீங்கள் புத்தகமாக வெளியிடக் கூடாது" என்று சுஜாதாவால் அனுப்பி வைக்கப்பட்டு முதல் பிரசுரம் வந்துள்ளது. மீண்டும் இப்போது கிழக்கு செம்பதிப்பாக வெளியிட்டுள்ளது.
    
எ.பெ.ரா நாவலின் மூலம் கிடைக்கும் ஆதவனின் பிம்பம் இதிலும் தொடர்கின்றது கொஞ்சம். ஆதவனின் எழுத்துக்கள் அனைத்து மனிதனின் உள்ளே புகுந்து பார்க்க விளைகின்றது. சாதரண மனிதனின் உள்ளே ஓடக்கூடிய எண்ணங்களை பிரித்து நம் கண்முன் வைக்கின்றது.