சில பல வருடங்கள் முன்பு நான் விகடன் ஆன்லைன் வாசகன்.(இப்போது அந்த குப்பையை ஓசியில் படிப்பதுடன் சரி). அப்போது பிரபலமான ஒரு தொடர் வரலாற்று நாயகர்கள். அதில் அம்பேத்கரை பற்றி எழுதிவந்தார்கள். முதல் பத்தியிலேயே, ஆரியர் வருகை, ஆரியர்கள் வந்து இங்குள்ளவர்களை ஏமாற்றினார்கள் என்று அளந்து விடப்பட்டிருந்தது. பின்னூட்ட பெட்டியில், அந்த புளுகை எதிர்த்து எழுதியிருந்தேன்.
உடனே அடுத்தடுத்து பல வாசகர்கள் சண்டைக்கு வந்துவிட்டார்கள். விவாதம் என்று முழுவதும் கூற முடியாது. அப்போது அலுவலகத்திலும் எனக்கு வேலை அவ்வளவாக இல்லை. எனவே, இச்சண்டையை முழு நேர தொழிலாக கொண்டேன். அந்த சண்டைக்கு பாயிண்ட் தேடவே இதை வாங்கினேன். -இதிலிருந்து மகாபாரதம், இந்துமகா சமுத்திரம் என்று அவரது மற்ற புத்தகங்களும் அலமாரிக்கு வந்தன. எதற்கு சோ? என்றால், சண்டை போட வக்கீலின் துணை வேண்டுமல்லவா.
அனைவருக்கும் ஒரு முன் முடிவு இருந்தது. அதை மாற்றிக் கொள்ள தயாராக இல்லை. அடுத்தவர் கூறுவதை கேட்பதை விட, அதில் குற்றம் காண்பது மட்டுமே வேலையாக இருந்தது. விளக்கம் சொன்ன கேள்வியையே மாற்றி மாற்றி கேட்டு, மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்தது. ஒரு கட்டத்தில் சலிப்பு வந்துவிட்டது. இதனால் ஒரு பயனுமில்லை என்ற ஞானமும் வந்தது. இதற்கு பதில் நாய் வாலை நிமிர்த்தலாம் என்ற உண்மையும் தெரிந்தது.