விமலாதித்த மாமல்லன் சமீபத்தில் நேரடியாக கிண்டிலில் வெளியிட்ட சில சிறுகதைகள், குறுநாவல்களின் தொகுப்பு. கிண்டிலை தனது தளமாக வைத்துக் கொண்டுள்ளார். பலர் கிண்டிலில் புத்தகம் வெளியிடுவதற்கு பெரும் உதவி செய்துள்ளார். கிண்டிலில் எப்படி புத்தகத்தை வெளியிடுவது என்பது பற்றி ஒரு புத்தகம் எழுதி கிண்டிலில் வெளியிட்டு உள்ளார். அவரது அச்சுப் புத்தகங்களை நேரடியாக அவரது சத்ரபதி பதிப்பகம் மூலம் வெளியிட்டு வருகின்றார். இதற்கு முன் அவர் வெளியிட்ட விமலாதித்த மாமல்லன் கதைகள் என்னும் சிறுகதை தொகுப்பை வாங்கியிருந்தேன். முழுவதும் படித்து முடிக்கும் முன், வீட்டில் தண்ணீர் புகுந்து பல புத்தகங்கள் நாசமாகி, பல புத்தகங்களை ஊரில் கொண்டு வைத்து அதன் பின் கொரானாவில் வீட்டை காலி செய்த கலவரத்தில் இந்த புத்தகம் எங்கோ ஒளிந்து கொண்டு விட்டது. போன மாதம்தான் மீண்டும் கையில் கிடைத்தது. படிக்க வேண்டிய லிஸ்ட்டில் இருக்கின்றது.
மாமல்லன் எழுதிய புனைவு என்னும் புதிர் புத்தகத்தைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். அந்த பதிவிற்கு பின்னால் ஒரு குட்டி கதை உள்ளது அது கடைசியில். ப்ளாக் ஆரம்பித்த காலத்தில் ஒழுங்காக இருந்த பதிவுகள், என்னையறியாமல் மாற தொடங்கின. எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் எல்லாம் அதிகமானது. காரணம் ஒரு பதிவை பல நாட்கள் எழுதுவது, அதனால் கோர்வையில்லாமல் போவது, சொன்னதையே திரும்ப வேறு வரிகளில் சொல்வது போன்றவை அதிமாக வர தொடங்கின. பெரும்பாலும் சரி செய்தாலும் தொடர்ந்தன. தற்போது வெகுவாக அது குறைந்துள்ளது என்று தோன்றுகின்றது. அதற்கு ஒரு முக்கிய காரணம் மாமல்லன். அவரது பதிவுகளில் பிழை இருந்து பார்த்த நினைவில்லை. கச்சிதமான மொழியில் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு.
தொகுப்பில் இருக்கும் இரண்டு கதைகளின் தலைப்பை இணைத்து தொகுப்பின் தலைப்பாக வைத்துள்ளார்.