தூர்வை, கூகை, சூல் ஆகிய நாவல்களை எழுதிய சோ.தர்மன் அவர்களின் அடுத்த நாவல் பதிமூனாவது மையவாடி. ஜெயமோகன் முன்னுரையுடன் வெளிவந்துள்ளது. முன்னுரை நாவலை எந்த கோணத்திலிருந்து படிக்கலாம் என்பதை மெலிதாக காட்டுகின்றது. எனக்கென்னவோ, வேறு ஒரு கோணத்தில் யாரும் படித்துவிட வேண்டாம் என்ற முன்னெச்சரிக்கை போலதான் தோன்றுகின்றது. தமிழ்ஹிந்து நாவலைப்பற்றி மிக எதிர்மறையான விமர்சனத்தை எழுதியிருந்தது. நாவலைப் பற்றியல்ல நாவலாசிரியரைப் பற்றி.சூல் நாவலுக்கு சாகித்திய அகடமி விருது கிடைத்ததும் இந்நாவலில் கிறிஸ்தவமத நிறுவனங்களைப் பற்றிய விமர்சனங்கள் வந்ததும், வழக்கம் போல அவருக்கு சங்கி பட்டம் கட்டிவிட்டார்கள். விட்டால் இனி கோவிலுக்கு செல்பவன், நெற்றியில் விபூதி வைப்பவன் என அனைவருக்கு இந்த பட்டம் கிடைக்கும். முட்டாள்கள்.
ஒரு சிறுவன் எப்படி ஒரு இளைஞனாக மாறுகின்றான் என்பதுதான் நாவல். கருத்தமுத்து உருளக்குடி கிராமத்திலிருந்து படிப்பதற்காக கிராமத்தை விட்டு வெளியே செல்கின்றான். பாடப்படிப்புடன் உலகத்தையும் கற்று கொள்கின்றான். சமூகம் அவனுக்கு கற்று கொடுக்கின்றது. அவனுக்கு வரும் குழப்பங்கள் அதிர்ச்சிகள் வழியாக அவன் மெதுவாக கற்று கொள்கின்றான். கல்வி, மதம், காமம், களவு, அன்பு எல்லாம் அவனுக்கு அனுபவங்களாக கிடைக்கின்றன. அதை அவன் எப்படி பயன்படுத்தி கொள்கின்றான்? எதைப் பெற்று கொள்கின்றான் என்பதுதான் நாவல்.
முன்னுரையில் ஜெயமோகன் கல்வியே ஒருவன் தன் தடைகளை விட்டு வெளியேறும் வழி என்பதே இந்நாவலின் அடிநாதம் என்பது போல சொல்கின்றார். ஓரளவுதான் அது சரி. கல்விதான் ஒருவனை எவ்வித தளைகளிலிருந்தும் அகற்றும். சமூக ஏற்றதாழ்வோ, பொருளாதார ஏற்றதாழ்வோ அனைத்தும் அறிவின் முன் அடங்கிதான் போக வேண்டும். அது இந்நாவலின் மிக மெலிதான ஒரு சரடு. ஆனால் தலைப்பை பின்தொடர்ந்தால் நமக்கு கிடைப்பது நாவலின் முக்கிய சரடான நிறுவனமயமாக்கப்பட்ட மதமும், அதனுள் இருக்கும் முரண்கள், பிரச்சனைகளும்.