கிருத்திகாவை அறிமுகம் செய்தது ஆர்வியின் தளம். ஜெயமோகனின் தளத்திலும் அந்த பெயர் பரிச்சியம். இந்த நாவலை பற்றி சிலாகித்து பேசியிருப்பதை கண்டே வாங்கினேன். முன்னுரையை முதலில் படித்து தொலைத்ததால் கொஞ்சம் பயமாக இருந்தது, இருந்தும் தொடர்ந்து படித்த பின்னரே தெரிந்தது இது ஒரு முக்கிய நாவல் என்று.
வாஸவேச்வரம், ஒரு மலையோர கிராமம். செழிப்பான பூமி. சுகவாசிகள். உற்சவம், உற்சாகம் என்று வாழ்பவர்கள். அவர்களை பற்றிய ஒரு சிறிய பார்வை. பிராமணர்கள் மட்டுமே பாத்திரங்கள். வாஸ்வேச்வரம், கிருத்திகா கண்ட பல கிராமங்களின் கலவை என்று கூறுகின்றார். ஒரு கற்பனை கிராமம். எந்த இடம் என்று கூட கூறவில்லை, தஞ்சாவூர் பக்கம் இருப்பதாக நினைத்து கொள்ளலாம். முன்னுரையில் 1930 கதை நடக்கும் காலம் என்கின்றார். அது எல்லாம் செல்லாது, கதையின் படி கிராமத்தில் வீட்டிற்கு வீடு குழாயில் தண்ணீர் வருகின்றது. அக்காலத்தில் எத்தனை கிராமங்களுக்கு அந்த வசதி கிடைத்திருந்தது. சிப்பாய், கச்சேரி, கம்யூனிசம் என்று பேசுவதை கண்டால் சுதந்திரமடைந்து பத்திருபது வருடங்களை சேர்த்து கொள்ளலாம்.