30 ஆகஸ்ட் 2013

யயாதி - காண்டேகர்

அனைவருக்கும் ஒரு கட்டத்தில் வரும் பயம் முதுமையை பற்றியது. முதுமையின் பயம் நம் இளமையின் அழிவைக் கண்டு. பாரதம் படித்தவர்களுக்கு இளமை என்றவுடன் நினைவில் வருவது யயாதி. மகாபாரதத்தில் வரும் ஒரு சிறிய நிகழ்ச்சி யயாதியின் வாழ்க்கை. அது பாரதத்தின் ஒரு முக்கிய பகுதி. யயாதியின் மகன் புரு வழியாகத்தான் பாண்டவர்கள் / கெளரவர்களின் வம்சம் வளர்கின்றது.

அச்சிறிய பகுதியை இரண்டு பாகங்களாக விரியக் கூடிய பெரிய நாவலாக எழுத முடியும் என்பதே ஆச்சர்யம்தான். அதற்கு கண்டிப்பாக அசாத்ய கற்பனை வளம் வேண்டும். வி. எஸ். காண்டேகர் அதை சாதித்துள்ளார். ஒரு காலத்தில் பெரிய ஹீரோ எழுத்தாளர். படிப்பவர்கள் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் என்று கேள்விப் பட்டுள்ளேன். ஆனால் இப்புத்தகத்தில் அது போன்று ஏதுமில்லை.

தேவயானி அசுர குரு சுக்ராச்சாரியாரின் புதல்வி. தேவர்களின் குரு பிரகஸ்பதியின் மகன் கசன், சுக்ராச்சாரியாரிடமிருந்து சஞ்சீவீனி வித்தையை கற்றுக்கொள்ள வருகின்றான். சுக்ராச்சாரியார் அம்மந்திரத்தை கொண்டுதான் தேவர்களால் கொல்லப்படும் அசுரர்களை உயிர்ப்பித்து வருகின்றார். தேவயானி கசன் மீது அன்பு கொள்கின்றாள், கசனின் நோக்கத்தை அறிந்து அசுரர்கள் அவனை இரண்டு முறை கொல்ல, சுக்ராச்சாரியார் தன் மகளுக்காக அவனை உயிர்ப்பிக்கின்றார். கடைசியில் அவனை எரித்து சாம்பலை சுக்ராச்சாரியாருக்கு கள்ளில் கலந்து தருகின்றனர். சுக்ராச்சாரியாரின் வயிற்றில் இருந்த படி சஞ்சீவீனி வித்தையை கற்றுக் கொண்ட கசன், சுக்ராச்சாரியாரின் வயிற்றை கிளித்து வெளியே வந்து, சுக்ராச்சாரியாரை உயிர்ப்பிக்கின்றான். சுக்ராச்சாரியாரின் வயிற்றில் வாசம் செய்ததால் தேவயானி சகோதரி முறையாகின்றாள் என்று அவளின் அன்பை மறுத்து செல்கின்றான் கசன். இது ஒரு கதை

23 ஆகஸ்ட் 2013

அம்மா வந்தாள் - தி. ஜானகிராமன்

மோகமுள்ளை படித்துவிட்டு வைத்த போது இரவு 12. தண்ணீர் குடித்துவிட்டு வரும் போது கண்ணில் பட்டது அம்மா வந்தாள். படித்துவிட்டு படுக்கும் போது இரண்டு.

சின்ன நாவல். இரண்டு மணி நேரத்தில் படித்துவிடலாம். வெளிவந்த காலத்தில், படித்தவர்களுக்கு ஒரு மிகப் பெரிய அதிர்ச்சியை தந்திருக்கலாம். தி. ஜாவை விலக்கி வைக்கும் அளவிற்கு கொந்தளிப்பை ஏற்படுத்திய கதை. இன்றும் ஜீரணக்க கொஞ்சம் கடினமான கதைதான்.

இரண்டு பெண்களை பற்றிய கதை. இந்து, அலங்காரம். இவர்களுக்கு இடையில் அப்பு. அப்பு வேதபாடசாலையில் படித்து முடித்துவிட்டு கிளம்ப தயாராக இருக்கின்றான். இந்து வேதபாடசாலை நடத்திவரும் பவானியின் மருமகள். சிறுவயது முதல் அங்கு வளர்ந்து, கணவனை இழந்து மீண்டும் அங்கு வந்து இருக்கின்றாள். இந்துவிற்கு அப்புவின் மீது காதல். சிறுவயது முதல். அதை மறுக்கும் அப்பு அவளை தன் அம்மாவுடன் ஒப்பிடுகின்றான், இந்து அவனின் அம்மாவை பற்றி கூறி ("அவ யாரையோ நினைஞ்சிண்டு உங்கப்பாவ ஏமாத்திட்டு இருக்கா, நான் உன்ன தவிர யாரையுன் நினைச்சதில்டா பாவி"), அவளோடு என்னை ஒப்பிடாதே என்று கத்துகின்றாள். சென்னை செல்லும் அப்பு அவள் கூறுவது உண்மை என்று கண்டு கொள்கின்றான்.

20 ஆகஸ்ட் 2013

மோகமுள் - தி.ஜானகிராமன்

சிறுவயது முதல் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருந்தாலும், அது தீவிரமானது வேலை கிடைத்த பின்னர்தான். (புத்தகங்களை காசு குடுத்தும் வாங்கி படிக்கு வழி ஒன்று இருக்கின்றதல்லவா?) முதலில் ஆரம்பம் சுஜாதா. அதற்கு பின்னர் தி. ஜானகிராமன். தி. ஜானகிராமனின் முள்முடி சிறுகதை பள்ளியில் ஒரு துணைப்பாடம். அதைத் தவிர அவரைப் பற்றி தெரிந்த ஒரே விஷயம் மோகமுள்ளின் ஆசிரியர். 

மோகமுள் திரைப்படம் ஏற்கனவே பார்த்திருந்தேன். அது பிடித்தும் இருந்தது. மோகமுள்ளை படித்ததும், படம் நாவலின் அருகில் கூட வர முடியாது என்பது மிகத்தெளிவானது. வாங்கிய பின் அதை பல முறை படித்திருப்பேன். இன்றும் 
என்னால் அதை புதிது போல் ரசித்து படிக்க வைக்கின்றது. 

கதை, தன்னை விட பத்து வயது பெரிய பெண்ணின் மீது கொண்ட காதல். அந்த மோகம் முப்பது நாளில் போகாமல் முள்ளாக இருக்கின்றது. பாபுவை விட பத்து வயதில் பெரியவள் யமுனாவின் உடல் வனப்பும், அவளின் குணமும் பாபுவிடம் இரண்டு வித தோற்றம் கொண்டு நிற்கின்றது. அவளை தெய்வம் போல தொழும் பாபுவிற்கு அவள் அழகு அவனின் மோகத்தையும் தூண்டுகின்றது. மோகம், அனைவரையும் அர்ச்சகராக்காத வருத்தம் போல பாபுவின் நெஞ்சில் தைக்கின்றது.

12 ஆகஸ்ட் 2013

என் பேர் ஆண்டாள் - சுஜாதா தேசிகன்

தேசிகனின் புதிய புத்தகம். அவரது கட்டுரைகளின் தொகுப்பு. பெரும்பாலனவை அவரது தளத்தில் வெளிவந்தவை. ஏற்கனவே சிலவற்றை படித்திருந்தாலும், ஆன்லைனில் படிப்பதை விட புத்தகத்தில் படிப்பது எனக்கு பிடித்திருக்கின்றது. 

கட்டுரைகளை அவரே வகைப்படுத்தியுள்ளார்.அனுபவம், சுஜாதா, பொது, அறிவியல், பயணங்கள்.

முகவுரையில் கடுகு அவர்கள் கூறுவது போல யூசர் ஃப்ரெண்ட்லிதான் இப்புத்தகம். எளிமையாக சொல்வது எளிதல்ல, அதுவும் கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் இருக்க வேண்டும், அதோடு மிகவும் எளிமையாக போய் தினதந்தி ஸ்டைலில் போய்விடக் கூடாது. தேசிகன் இவையனைத்தையும் சமாளித்து எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் எழுதியுள்ளார்.

தலைப்பு கட்டுரை என் பெயர் ஆண்டாள். ஆண்டாள் அழகான தமிழ் பெயர். அப்பெயரின் சரித்திரம் சுவாரஸ்யமானது. அனைவருக்கும் தினமும் அனைவருக்கும் பற்பல அனுபவங்கள் கிடைக்கின்றன, அதை எழுத்தில் அப்படியே கொண்டுவருவது கடினம், அப்படியே வந்தாலும் அது சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பாதியிலேயே தூக்கம் வந்துவிடும். இவரின் கட்டுரையில் அந்த சுவாரஸ்யம் குறையாமல் இருக்கின்றது. அனுபவத்துடன் கொஞ்சம் கைச்சரக்கும் இருக்கும்தான். அதில் எது கைச்சரக்கு என்று கண்டுபிடிப்பது வாசகனுக்கான சவால்.