31 டிசம்பர் 2012

தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 6


முந்தைய பகுதிகள்


பகுதி 1
பகுதி 4

51. நடராஜக் கால்

       என் உறவினர் ஒருவர், நான் பி.எஸ்.ஸி கம்யூட்டர் சைன்ஸ் சேர்ந்த போது அவர் அவர் பெண்ணிற்கும் அதே சீட் தேடினார். கிடைக்காமல் பி.சி.ஏ சேர்த்து விட்டார்.  அதோடு நில்லாமல் எங்கள் வீட்டில் வந்து, பி.எஸ்.ஸி எல்லாம் வேஸ்ட், இப்ப எல்ல்ல்லாம் பி.சி.ஏ தான் என்று கொளுத்தி போட ஒரு வாரம் எரிந்தது. எல்லா ஊரிலும் இது போல வெட்டிப் பந்தா மாகானுபாவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு சகலமும் தெரியும், எல்லாம் தூசி. தாம் வாழும் வாழ்க்கை எப்படி இருந்தாலும் அது பெரிது, மற்றவர்களின் வாழ்க்கை எல்லாம் வெறும் வெற்றுவேட்டு. அப்படி பட்ட நடராஜரின் தாண்டவம். வெட்டியாக பூர்வீக சொத்தை உக்கார்ந்து அழிக்கும் நடராஜர், ஊரான் பெண்ணின் திருமணத்திற்கு உபதேசம் செய்கின்றார். அக்கால மிராசுதார்களின் வெட்டி பஞ்சாயத்தை சரியாக கிண்டலடித்துள்ளார்.

52. நடேசண்ணா

       தன்னை போல பிறரையும் நினை என்பதை வேறு விதமாக புரிந்து கொண்டுள்ள மக்கள் நிறைந்த உலகம். தன் மன அழுக்குகளை அடுத்தவர் மேல் ஏற்றி, தான் அவ்விடத்தில் இருந்தால் நாம் எப்படி நடப்போமோ அப்படித்தான் அவரும் நடப்பார் என்று நினைப்பவர்கள்தான் அதிகம். ஒரு பாடகருக்கும் அவரது ரசிகைக்கும் இடையிலான் உறவை கொச்சைப் படுத்தி ஊரே பேச, பாடகரின் பாடல் வெளியில் யாருக்கும் கேட்காமல், உள்ளே இறைவனுக்கு மட்டும் கேட்கும் படியாகின்றது. நல்ல கதை. விவரிப்பு, உள்ளாடும் மெல்லிய கேலி.

53. ஆயிரம் பிறைகளுக்கு அப்பால்

    டைப்ரைட்டர் சொல்லும் கதை. யாரையோ, எதையோ மையப்படுத்தி எழுதியது போல இப்பொது ஒன்றும் புரியவில்லை.

30 டிசம்பர் 2012

தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 5


முந்தைய பகுதிகள்


பகுதி 1

41. இவனும் அவனும் நானும்
            தி. ஜாவின் கதைகள் சில கொஞ்சம் வரம்பு மீறிய உறவுகளை, மன விகாரங்களைப் பற்றி நாசுக்காக தொட்டுச் செல்லும். பல இசையுடன் இழைந்து செல்லும். இவன் அவன் மனைவியைப் பற்றி மனதில் சேர்த்து வைத்திருக்கும் குப்பையை அவன் தன் இசையால் சுத்தப்படுத்துகின்றான். நான் என்னும் மனசாட்சி மீண்டும் குப்பை சேருமா? என கேட்டுக் கொண்டுள்ளது. பிடித்த கதையில் ஒன்று. அவன் பாடும் வர்ணனை நாமும் ஒரு தூய இசையை கேட்கும் அனுபவத்தை தருகின்றது. ஒரு அருமையான கதை.

           பல பழங்கால பெரியவர்கள் பேசுவதைக் கேட்டால் அப்படிப்பட்ட காலத்தில் நாம் இல்லையே என்று ஒரு ஏக்கம் உண்டாகும், சில சமயம் நமக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும். இப்போது நேர்மைக் குறைவு என்பது அப்போது மரியாதை, அந்தஸ்த்தாக இருந்திருக்கின்றது. ராஜா காலத்து காணிக்கை மரியாதை சில காலம் வரை அதிகாரிகளுக்கும் இருந்து வந்துள்ளது. இப்போது உள்ளது. அப்படிப்பட்ட ஒரு பெரியவர் கதை. தி. ஜாவின் தஞ்சாவூர் வர்ணனை ஒரு கிராமத்திற்கு அழைத்து செல்கின்றது. லஞ்சமாக பெற்ற பணத்தை பெருமையாக பேசும் அவர் நித்திய நியமை தருவது ஒரு அருவெருப்பைத்தான்.


          பிடித்த சிறுகதை. முத்து ஒரு சமையல்காரர். வயது அவரின் திறமையின் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றது. அவரது ஒரே மகன் அக்கண்ணா குட்டி, உருப்படாதது என்று ஆசிர்வதிக்கப்பட்டும், வெளியே எங்கோ வேலைக்கு சேர்ந்து அப்பாவிற்கும் பணம் அனுப்புகின்றான். அவனுக்கு சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய் தரும் புண்ணியவானைப் பார்க்க போகும் முத்து, அவ்வளவு பணம் தரக்காரணத்தைக் கண்டு அதிர்ச்சி அடைகின்றார். முடிவில் அவர் மனம் மெதுவாக மாறக் காரணம் பணமா? இல்லை உண்மையான அறிதலா?

28 டிசம்பர் 2012

சிங்கிள் ஸீட்

திருமணம் ஆனபின் நான் அடைந்த முக்கிய நன்மை பஸ்ஸில் சிங்கிள் ஸீட் புக் செய்ய வேண்டியதில்லை. எனக்கும் என் மனைவிக்கும் இரண்டு இருக்கைகள். அவள் பிரசவத்திற்கு போன பின் மறுபடியும் அப்பிரச்சினை.

சிங்கிள் சீட் முன்பதிவு செய்வதென்றால் எப்போதும் எனக்கு கொஞ்சம் பயம். பஸ்ஸில் ஏறி எல்லாம் செட் செய்துவிட்டு அமர்ந்தால், யாராவது ஒரு பெண்மணி / ஆண்மணி வந்து "சார், கொஞ்சம் மாறி உட்கார முடியுமா?" என்பார்கள். சிலர் அதிகாரமாக "சார் என் ஸீட் அங்க இருக்கு, நீங்க அங்க போய்டுங்க" என்பதுண்டு.

இது அடிக்கடி நிகழ்வதுண்டு. என்னைப் பார்த்தால் அவர்களுக்கு இவன் சொன்னபடி கேட்பான், மாற்றிக் கொண்டு போய்விடுவான் என்று எப்படித் தெரியும் என்று தெரியவில்லை. எப்போதும் நான் மாறி அமரும் சீட்டின் அடுத்து இருப்பவனிடம் கேட்பதில்லை. டிரெயினில் ஒரு தடவை ஏழு இடம் மாறி இருக்கின்றேன், ஏழாவது D1 ல் இருந்து D7. அதனாலேயே எப்போதும் அப்பர் பெர்த் வாங்கி ஏறி படுத்து விடுவது. எவனும் கேட்க மாட்டான். பஸ்ஸில் ஏற்கனவே யாரவது புக் செய்த இருக்கைக்கு அடுத்த இருக்கையை புக் செய்து விடுவேன். அதனால் கொஞ்ச காலம் நிம்மதியாக இருந்தேன்.

பேசும் பொம்மைகள் - சுஜாதா

கணேஷ் வசந்த் வரும் சைன்ஸ் ஃபிக்‌ஷன். டவுன்லோடிங் என்பதை அடிப்படையாக கொண்ட ஒரு நாவல். 90களில் குங்குமத்தில் தொடராக வந்துள்ளது. மனிதனின் மூளை என்றும் அனைவருக்கும் புதிர். விஞ்ஞானிகளின் பல ஆராய்ச்சிகளால் இன்னும் முழுவதும் புரிந்து கொள்ள முடியாத ஒரு பகுதி. மனம் என்பது ஒரு தனியான பகுதியா, மூளையின் ஒரு பகுதியா, வெறும் நினைவுகளா அதுவே இன்னும் குழப்பம்.

உலகின் மிக வேகமான கம்ப்யூட்டர் மனித மூளை. எப்போதோ சுமார் 15 வருடங்களுக்கு முன்பு பார்த்த ஒருவரை, அவரது சாயல் மாறியிருந்தும் சில நிமிடங்களில் கண்டு பிடிக்கும் ஒரு கம்ப்யூட்டர். அது வைத்திருக்கும் டேட்டாக்களை சேமிக்க எத்தனை டெரா பைட் தேவைப்படும். அதை அலசி ஆராய எத்தனை வேகமான ப்ராசசர்கள் தேவை. அப்படிபட்ட மூளையின் அமைப்பை கண்டு கொள்ள முடிந்தால் என்னாவாகும், அதுதான் கதை.

கதை மனிதனின் நினைவுகளை இயந்திரத்திற்கு மாற்றி மீண்டும் அதை மனிதனுக்கு மாற்றும் சாத்தியத்தை பேசுகின்றது. எப்படி அது சாத்தியம் என்பது எல்லாம் இங்கு தேவையில்லை. அது தெரிந்தால் ஏன் கதை எழுத வேண்டும், நோபல் பரிசு வாங்கப் போயிருக்கலாம்.

19 டிசம்பர் 2012

தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 4

முந்தைய பகுதிகள்


31. அர்த்தம்

          அனைவரின் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை போரடித்து விடும். திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் அண்ணன், புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பி. அண்ணன் ஒண்டி என்பதால் எதற்கு சரிபாதி தரவேண்டும் என்று நினைக்கும் தம்பிக்காக தன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை தேடும் அண்ணன். "சிவன் கோயிலில் விளக்கணைத்து கொண்டிருப்பவன்" இதற்கு என்ன அர்த்தம்?

32.  ராம ஜெயம்

         கெட்டவர்கள் மேலும் மேலும் கெட்டது செய்தால் யாரும் அதை பெரும் தவறாக நினைப்பதில்லை. அவன் அப்படித்தான் செய்வான் என்று நினைத்து விட்டு விட்டு போய்விடுவார்கள். நமது அரசியல்வாதிகள் செய்கின்ற ஊழல் மாதிரி. நல்லவர்கள் ஒரு தவறு செய்தாலும் ஏறி மிதித்துவிட்டு தான் அடுத்த வேலை பார்ப்பார்கள். அவர்களும் சரியாக தவறை செய்ய தெரியாமல் மாட்டியும் கொள்வார்கள் வாழ்வில் ஒரே ஒரு முறை ஒரு முறை அல்ப காரணத்திற்கு தவறு  செய்யும் ராகவாச்சாரி மாட்டியும் கொள்கின்றார். 

18 டிசம்பர் 2012

கல்கி சிறுகதைகள்

புதுமைபித்தன் சிறுகதைகளுடன் சேர்த்து சேகரித்தது இது. html பேஜிலிருந்து pdf ஆக மாற்றி வைத்துள்ளேன்

பெரும்பாலன சிறுகதைகள் அக்காலத்தை சேர்ந்தவை. என்றைக்குமான் சிறுகதைகள் குறைவு. சில இன்று பொருத்தமாக இல்லாமல் போகலாம். அனைத்து சிறுகதைகளிலும் கல்கியின் மெலிதான நகைச்சுவை அம்சம் இருக்கின்றது. பிரச்சார தொனி அதிகம்.


கல்கி சிறுகதைகள் பகுதி - 1
கல்கி சிறுகதைகள் பகுதி - 2
கல்கி சிறுகதைகள் பகுதி - 3
கல்கி சிறுகதைகள் பகுதி - 4
கல்கி சிறுகதைகள் பகுதி - 5
கல்கி சிறுகதைகள் பகுதி - 6
கல்கி சிறுகதைகள் பகுதி - 7

பெங்களூரு புத்தக கண்காட்சி 2012

வருடா வருடம் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடைபெறுகின்றது. அதற்கு செல்ல முடியாமல் தடுப்பது அது நடைபெறும் காலம். பொங்கல் சமயம். பொங்கல் விடுமுறையில் ஊருக்கு செல்லும் போது, இதற்கு தனியாக செல்ல முடியாது. நேற்று பத்ரி அவர்களின் தளத்தில் பெங்களூருவில் புத்தக கண்காட்சி நடைபெறுகின்றது என்று அறிவித்திருந்தார். நடக்கும் இடம் என் அலுவலகத்திற்கு மிக அருகில், பேலஸ் கிரவுண்டில்.

பேலஸ் கிரவுண்ட் என்பது பெரிய இடம், எந்த பகுதி என்பது சரியாக தெரியவில்லை. அவ்வழியாக செல்லும் அலுவலக நண்பருடன் வண்டியில் தொற்றிக் கொண்டேன். ரீட் புக்ஸ் என்று பெரிய பேனர். புத்தக கண்காட்சி நடப்பதே தெரியவில்லை. இருபது ரூபாய் கட்டணம்.

அதிக கூட்டமில்லை. திருப்பதி போன்று அனைத்துப் பக்கமும் தடுப்புகள் வைத்து, உள்ளே நுழைபவர்கள் அனைத்து கடைகளையும் தரிசனம் செய்த பின்பே வெளியே செல்ல முடியும் என்பதாக செய்து வைத்துள்ளனர். இது அறியாமல் வெட்டியாக போன வழியிலும், பின்புறமும் முன்புறமுமாக அரைமணி நேரம் சுற்றித் திரிந்தேன்.

12 டிசம்பர் 2012

தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 3

முந்தைய பகுதிகள்

பகுதி - 1
பகுதி - 2

21. திண்ணை வீரா !

         நாம் அடிக்கடி பார்க்கும் மனிதர்தான். வாயால் பேசியே காரியம் சாதிக்கும் ஒருவர். ஊரார் பஞ்சாயத்தை தீர்க்கும் பெரிய மனிதர். "எழுந்து வந்தேன்னா என்ன ஆகும் தெரியுமா" என்று மிரட்டியே அனைவரின் பஞ்சாயத்தை தீர்ப்பவரின் மிரட்டலின் முரண் கடைசியில். நடக்காத மிரட்டல் என்றாலும் அதற்கு கீழ்படியும் மக்கள். தி. ஜாவின் விவரிப்பும், வட்டார வழக்கும்  மிகவும் கவர்ந்துவிட்டது.

22. அடுத்த

          பிரசவத்திற்கு ஆம்புலேடத்திற்கு காத்திருக்கும் தம்பதியினரின் கதை. ஒரு குழந்தையை வளர்க்கவே அவனவன் திணறும் போது அக்காலத்தில் எப்படி இரட்டை இலக்க குழந்தைகளை வளர்த்தனரோ. செல்வம் உடையவருக்கும் மேலும் செல்வமும், இல்லாதவர்க்கு இல்லாமையே தொடர்வதும் குழந்தைச் செல்வத்திற்கும் பொருந்தும். எல்லாம் பகவான் செயல் (எஸ்.வி சேகர் குரலில் படித்துக் கொள்ளவும்)

11 டிசம்பர் 2012

தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 2

இதன் முந்தைய பகுதி

11. இசைப் பயிற்சி

            சிலருக்கு பழமை மீது கோபம் இருக்கும், பழைய பழக்க வழக்கங்களை மாற்ற வேண்டும் என்று நினைப்பார்கள். அதே சமயம் அவர்களின் சூழல், வளர்ப்பு, அக்கம்பக்கம் அவர்களை மா(ற்)ற விடாது. அப்படிப்பட்ட ஒருவர் மல்லி. ஒரு கிறிஸ்தவனுக்கு சங்கீதம் சொல்லித்தர ஆசைப்படும் அவர், அவரின் சுற்றத்தை தாண்ட முடியாமல், தோட்டத்தில் நாற்பதடி தூரத்தில் வைத்துக் கற்றுத்தருகின்றார். கடைசியில் அவர் உணரும் பயமும், தனிமையும் யதார்த்தம்

12. விளையாட்டு பொம்மை

           ஒரு கட்டத்திற்கு மேல் உடலுக்கு வயது ஏற ஏற முதியவர்கள் மனம் இளமையாகிக் கொண்டே வருகின்றது. சிங்கம் போன்ற ஒரு வக்கீல், வயதாகி ஒரு குழந்தை போல் அனைத்தையும் மறந்து, மூன்று வயது குழந்தை சொல் படி கேட்டு நடக்கின்றார். நல்ல கதை, அப்பெரியவருக்கும் மனைவிக்கும் உண்டான பாசம், காதல் உருக்கம். பல வருடம் வாழந்தவரை விட்டு பிரிவது என்பது சாதரணமல்ல.

தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 1

தி.ஜா ஒரு மிகச்சிறந்த நாவலாசிரியர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஒரு மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியரும் ஆவர் என்பதை காட்டுகின்றது, அவரின் சிறுகதை தொகுப்பு. இது அவரின் படைப்புகளின் முதல் தொகுதி. மொத்தம் 70 கதைகள் பகுதி பகுதியாக வரும்.

அவர் சிறுகதைகளையும் நாவல்களைப் படிக்கும் போது ஒரு அமைதியான நதி அருகில் அமர்ந்து கொண்டு வேடிக்கைப் பார்ப்பது போன்ற சித்திரம் உண்டாகின்றது. இதிலும் பெரும்பான்மையானவை தஞ்சாவூர் ஜில்லா கதைகள் போலத் தெரிகின்றது. அனைத்து கதைகளிலும் பலம் உரையாடல்.


            கங்கைக்கு தன் அக்காவிற்காக வரும் சின்னசாமி, அங்கு தன்னை ஏமாற்றிய அன்னதாதா துரையப்பாவை பார்க்கின்றார். கதை என்று பெரிதாக இல்லை, ஏமாற்றும் மனிதர்களையும், தன்னை ஏமாற்றியவனின் பாவத்தை சேர்த்து கங்கையில் கரைக்கும் மனிதர்களையும் பற்றியது.

04 டிசம்பர் 2012

ப்ரியா - சுஜாதா

ஒரு கணேஷ் வசந்த் கதை. வசந்த் பாவம் இதில் முதல் அத்தியாயத்துடன் கிளம்பிவிடுகின்றான். கதை நடக்குமிடம் லண்டன் என்பதால் எதற்கு வீண் செலவு என்று விட்டு விட்டு கணேஷ் மட்டும் போய்விட்டான்.

ப்ரியா ஒரு சினிமா நடிகை அவளின் கணவன் ஜனார்த்தனன் அவள் காதலனுடன் ஓடிவிடக் கூடாது என்று கண்காணிக்க கணேஷை ப்ரியாவுடன் லண்டன் அனுப்புகின்றான்.  ஜனார்த்தனன் லண்டன் வரும் போது ப்ரியா காணாமல் போகின்றாள். அவளை கடத்தி வைத்து பணம் பறிக்கும் முயற்சி நடக்கின்றது. இரு நாட்களில் ப்ரியா கொலை செய்யப்பட்டு கிடக்கின்றாள். யார் கொலை செய்தது என்பதை ஸ்காட்லாண்ட் யார்டுடன் சேர்ந்து கணேஷ் கண்டுபிடிப்பது மிச்சக் கதை.

26 நவம்பர் 2012

யாருக்கு முதல் பத்திரிக்கை?

எச்சரிக்கை

இது ஒரு சொந்த அனுபவம். அங்கங்கு என் கற்பனை ஊற்றை (????)  கொண்டு மறந்து போன இடைவெளியை நிரப்பியுள்ளேன். ஏதாவது ஒரு கல்யாணப் பத்திரிக்கையை பார்த்தால் என் மனதில் வந்து போகும் இச்சம்பவத்தை எழுதிப்பார்த்தால் என்ன என்று முயற்சி செய்து பார்த்தேன். சனி ஞாயிறு வீட்டில் தனியாக வெட்டியாக அமர்ந்து பொழுதைப் போக்கினால் வேறு என்ன தோன்றும்?

முயற்சி கொஞ்சம் மோசமாகவோ இல்லை மிக மோசமாகவோ இருக்கலாம். படித்துவிட்டு மன உளைச்சல் அடைபவர்கள் (66A எல்லாம் உதவாது இதற்கு), அடுத்த முறை இது போன்ற எச்சரிக்கையை படித்து விட்டு தப்பிக்கவும். சொற்குற்றம் இருந்தால் மன்னிக்க.

சொந்தக் கதை எழுதும் போது கண்டிப்பாக இது போன்ற எச்சரிக்கை இருக்கும். டோண்ட் ஒர்ரி. பயப்பட வேண்டாம் அடிக்கடி இது போல் நிகழாது.

24 நவம்பர் 2012

புதுமைப்பித்தன் சிறுகதைகள்

சில வருடங்களுக்கு முன்பு அலுவலகத்தில் வேலை வெட்டி ஏதுமில்லாத போது சேகரித்தது. சென்னை லைப்ரேரி தளத்தில் தனித்தனி பக்கங்களில் இருந்ததை அடிக்கடி கிளிக்கி கிளிக்கி படிக்க சோம்பல் பட்டுக் கொண்டு, ஒரே நாளில் காப்பி பேஸ்ட் செய்து வைத்துக் கொண்டேன்.

முழுவதும் படித்ததில்லை. படித்த சிலவும் எனக்கு அவ்வளவாக பிடித்ததாகவும் இல்லை. ஒன்றிரண்டு கதைகள் நன்றாக இருந்தன. ஒரு விதமான எள்ளல் தொனியுடனே கதைகள் இருப்பது போல் தோன்றியது.

எனக்கு கணிணி திரையில் படிப்பது அலுப்பூட்டுவதாக உள்ளது. எப்போதாவது பொழுது போகாவிட்டால் படிப்பதற்காக வைத்துள்ளேன்


புதுமைப்பித்தன் கதைகள் பகுதி 1
புதுமைப்பித்தன் கதைகள் பகுதி 2

புதுமைப்பித்தன் கதைகள் பகுதி 4
புதுமைப்பித்தன் கதைகள் பகுதி 5
புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு கதைகள் 

முகம்மது பின் துக்ளக் - சோ

சோ இவரை எந்த வகையில் சேர்ப்பது. எழுத்தளாரா, பத்திரிக்கையாளரா, நாடக ஆசிரியரா, சினிமா நடிகரா, நாடக நடிகரா, அரசியல்வாதியா, வழக்கறிஞரா, இயக்குனாரா? எல்லா துறைகளிலும் காலைவைத்துள்ளார். வெற்றியும் பெற்றுள்ளார். நடுநிலைமை என்றால் சோ என்று கூறப்படும். இப்போது அதிமுகவிற்கு பாஜக விற்கும் அதிகம் சப்போர்ட் செய்வது போல்தான் தோன்றுகின்றது.

தமிழ்நாட்டின் நாடக உலகில் சோ ஒரு முக்கிய மைல் கல். இன்று நாடகம் நடத்து கிரேஸி மோகன், மெளலி போன்றவர்களுக்கு இன்ஸ்பெரெஷன். சில வருடங்களுக்கு முன்பு அவர் மீண்டும் நாடகம் போட்ட போது அரங்கு நிறைந்தது. பெரும்பாலனவர்கள் இளைஞர்கள்.

அரசியல் கலந்த நாடகங்களை எம்.ஆர். ராதாவிற்கு பின் வெற்றிகரமாக நடத்தியவர் சோ. சோவின் நாடகங்களும் பலத்த கலவரங்களுக்கு நடுவில் நடந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டுள்ளேன். படம் வெளிவந்த போது கலட்டா நடந்துள்ளது.

22 நவம்பர் 2012

விழா மாலைப் போதில் - அசோகமித்திரன்

கிழக்கு வெளியிட்டுள்ள குறுநாவல் தொகுப்பு. மொத்தம் நான்கு குறுநாவல்கள்.

பெரும்பாலன புத்தகங்கள் எல்லாம் ஏற்கனவே அவசர கதியில் படித்தவை. இப்போது அனைத்தும் இரண்டாம் ரவுண்ட்.

1. இன்ஸ்பெக்டர் செண்பகராமன்
2. விழாமாலைப் போதில்
3. என்றும் இன்று
4. மணல்

இன்ஸ்பெக்டர் செண்பகராமன்

ஒரு சிறுவனுக்கும் ஒரு இன்ஸ்பெக்டருக்கும் இடையிலான நட்பை பற்றிய கதை. ஐந்தாவது பாரம் படிக்கும் ஒரு சந்திரசேகரன் கூடப் படிக்கும் சினேகிதன் காந்திமதி. காந்திமதியின் மாமா இன்ஸ்பெக்டர் செண்பகராமன். ஒரு நாள் காந்திமதியுடன் வீடு திரும்பும் சந்திரசேகரனை சந்திக்கும் செண்பகராமன், அவனைப் பிடித்து போக அவனுடன் நட்பாகின்றார்.

சினிமாவிற்கு சந்திரசேகரனின் குடும்பத்தை அழைத்து செல்கின்றார், அவன் உடல்நிலை சரியில்லாத போது மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றார். அதோடு அவனை வேறு ஒரு இடத்திற்கும் அழைத்து செல்கின்றார். அந்த இடத்தில் இருக்கும் பெண், செண்பகராமனின் மனைவிக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாகவளாக இல்லை.

ஒரு நாள் செண்பகராமன் இறந்து போகின்றார். செண்பகராமன் தொடர்பில் இருக்கும் பெண்ணை பார்க்க விரும்புகின்றார், அது நிறைவேறாமல் இறந்து போகின்றார். அந்த பெண்ணை கண்டு சந்துரு செண்பகராமன் குடுத்த பணத்தை தந்துவிட்டு விஷயத்தை சொல்கின்றான். கதை முடிந்தது.

இந்த சந்துருவும் 18ம் அட்சக்கோடு சந்துருவும் ஒரே ஆள் என்ற எண்ணம் தோன்றுகின்றது. அவனின் நாடக அனுபவம், லான்சர் பாரெக்ஸ் எல்லம் அதே போல் உள்ளது.  மிகச்சிறிய கதை, கொஞ்சம் பெரிய சிறுகதை என்றுதான் சொல்ல வேண்டும்.

18 நவம்பர் 2012

ஜீரோ டிகிரி - சாரு நிவேதிதா

சாரு நிவேதிதாவின் பத்திகளை விகடனில் படித்ததுண்டு. அவரின் தளத்திலும் படிப்பதுண்டு. அவரின் எழுத்து நடை, சொல்வதை மிக எளிமையாக சொல்வதும் எனக்கு பிடிக்கும். உள்ளடக்கம் சில சமயம் எரிச்சலாக இருக்கும், ஆனாலும் சுவாரஸ்யமான நடைக்கு சொந்தக்காரர். சில சிறுகதைகள் மிகச் சிறப்பாக இருக்கும்.

ஜீரோ டிகிரி புத்தகத்தை பலரும் ஆஹோ, ஓஹோ என்று பாராட்டுகின்றார்களே என்று வாங்கினேன். பல முறை படித்து விட்டேன். ஒரு எழவும் புரியவில்லை. இதைப் பாராட்டுபவர்கள் இதைப் பற்றி எழுதுவது அதைவிட குழப்பமாக உள்ளது. //முதலில் படித்தேன் புரியவில்லை சனிகிழமை மட்டும் புரியும், இருவது வயதில் புரியவில்லை, இருபத்திரண்டு வயதில் புரிகின்றது//. கடவுள், இசை, ஆன்மீகம் என அனைத்தையும் அதனுடன் சம்பந்தப்படுத்தி பேசுகின்றனர். அப்புத்கத்தின் ஒவ்வொரு அந்தியாயத்திற்கும் பிண்ணனி இசை அமைக்கின்றனர். இது ஏதோ பல்கலை கழகத்தில் பாடபுத்தகமாக உள்ளாதாம்!

நான் லீனியர் புத்தகம் என்பதால் நாமும் நான் லீனியராக படிக்க வேண்டும் போல என்று, கையில் கிடைத்த பக்கங்கள், கடைசி அந்தியாயத்திலிருந்து முதல் அந்தியாயம் வரை (நம்புங்கள், நிஜமாகவே செய்து பார்த்தேன்) படித்து பார்த்தாகி விட்டது. அப்படி ஏன் படிக்க வேண்டும் என்று கேட்பவர்களுக்கு; என் மூளைக்கு இதை புரிந்து கொள்ளும் சக்தி இல்லையா என்று எனக்கு சந்தேகம வந்து விட்டது. எனக்கான சவாலாக தோன்றியது. கடைசியில் தோல்வியை ஒத்துக் கொள்ள வேண்டிய நிலைதான் வந்துள்ளது.

மெமெண்டோ பாணியில் படிக்க வேண்டுமோ என்னவோ அது ஒன்றுதான் பாக்கி.

இப்புத்தகத்தை பற்றி "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்" என்னும் கதைதான். அனுபவித்தால்தான் புரியும் என்கின்றனர்.

ஒழுக்கமானவர்களுக்குதான் ராஜாவின் உடை கண்ணிற்கு தெரியும் என்பது போல ஆகிறதோ என்ற சந்தேகம். ஜெயமோகன் இதை தமிழின் முக்கிய முயற்சி என்கின்றார். அவரின் விஷ்ணுபுரம் கூட என்றாவது ஒரு நாள் முழுவதும் புரியும் என்ற நம்பிக்கை உள்ளது, ஆனால் இது .....

உண்மையில் இதை யாராவது விளக்க முடியுமா?


17 நவம்பர் 2012

சில புத்தகங்கள் - எச்சரிக்கைகள் 2

கல்கி அலைஓசை முன்னுரையில் ஒரு சம்வத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஒரு முறை ரயிலில் பிராயணம் செய்ய நேரிட்ட போது எனக்கும் அத்தகைய அவசியம் ஏற்பட்டது. "தூக்கம்தான் வருவதில்லை! ஏதேனும் ஒரு புத்தகமாவது படித்து வைக்கலாம்!" என்று எண்ணி, திருச்சி ரயில் சந்திப்பில் உள்ள புத்தகக் கடையில் ஒரு புத்தகம் வாங்க சென்றேன். .....
 
புத்தகத்தை பிரித்து படிக்கலானேன். படிக்க ஆரம்பித்ததுமே ஓர் ஐயம் தோன்றியது, ஒரு பாரா படித்ததும் சந்தேகம் அதிகமாயிற்று. ஒரு பக்கத்தை தொடங்கியதும் சந்தேகம் ஊர்ஜிதமாகியது. "அட சட்! இந்த புத்தகத்தை முன்னொருதடவை படித்து தொலைத்திருக்கிறோமே? இதையா மறுபடியும் விலை கொடுத்துவாங்கினோம்? ஐந்தேமுக்கால் ரூபாய் தண்டம்

 அது போன்ற ஒரு அனுபவம் எனக்கும் கிடைத்தது. என்ன அவருக்கு ஐந்தே முக்கால் ரூபாய் எனக்கு எழுபத்தைந்து ரூபாய்.

அசோகமித்திரனின் புத்தகங்களை கிழக்கில் ஆர்டர் செய்தேன். அதில் ஒரு புத்தகம் "இன்று". வந்தவுடன் ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தேன், முதலில் ஒரு சந்தேகம் வந்தது எங்கோ படித்த மாதிரி உள்ளதே என்று. முதல் பக்கம் தாண்டியவுடன் முழுவதும் தெரிந்து விட்டது அது ஏற்கனவே வேறு ஒரு குறுநாவல் தொகுப்பில் உள்ள கதை என்று. தலைப்பை மாற்றி உள்ளனர். "விழா மாலைப் போதில்" என்னும் குறுநாவல் தொகுப்பில் அதன் பெயர் "என்றும் இன்று". நொந்து கொண்டு அலமாரியில் பத்திரமாக வைத்தேன்.

இதை விட எரிச்சல் இரண்டும் கிழக்கு பதிப்பகம். "இன்று" 75, அதோடு சேர்த்த 4 நாவல்களின் தொகுப்பு 150. பதிப்பு வருடம் வேறு, "இன்று" 2006, தொகுப்பு 2009. நாவலின் பெயரை மாற்றாமலிருந்திருந்தால் தெரிந்திருக்கும்.

இப்பொது அனைத்து புத்தகங்களும் முழுத் தொகுப்பாக வருகின்றன. எனவே புத்தகம் வாங்கும் முன் தெளிவாக பார்த்து விட்டு வாங்கவும். ஆன்லைனில் புரட்டி பார்த்து வாங்கும் வசதி இல்லை, அவர்கள் சேர்க்கும் ஒன்றிரண்டு வரிகளை படித்து எந்த முடிவிற்கும் வர முடிவதில்லை.

பதிப்பகத்தாரும் என்ன செய்வார்கள் அனைத்து விவரங்களையும் ஆன்லைனில் அப்டேட் செய்ய முடியாது, அட்லீஸ்ட் அவர்கள் சொந்த பதிப்பகத்தில் வரும் புத்தகங்களை பார்த்து அப்டேட் செய்தால் புண்ணியம் கட்டிக் கொள்வார்கள். இது போன்ற நாவல் தொகுப்புகளில் பெயரை மாற்றாமலும், அது தனியாக வந்துள்தா என்று ஒரு சிறிய குறிப்பும் இருந்தால் என்னைப் போன்ற ஆன்லைன் சோம்பேறிகளுக்கு பேருதவியாக இருக்கும்.

முடிந்தவரை நன்றாக தெரிந்த புத்தகத்தை மட்டும் ஆன்லைனில் வாங்கவும். இல்லையென்றால் என் போல் "ஙே" என்று முழிக்க வேண்டியதுதான்.

அப்பம் வடை தயிர்சாதம் - பாலகுமாரன்

பாலகுமாரனின் எழுத்துக்களை முதலில் பார்த்தது கல்லூரியில், என்னுடன் படித்த ஒருவன் கையில். இரும்பு குதிரைகள். அவனுடன் கல்லூரியில் ஒரு கோஷ்டி கையில் பாட புத்தகங்களை விட பாலகுமாரன், ஜெயகாந்தன் புத்தகங்களை வைத்துக் கொண்டு திரியும். இதோடு ஓஷோ புத்தக்ங்கள் வேறு. அவர்களைப் படிப்பதாலே அவர்களின் இடத்தில் தான் இருப்பதாக நினைத்து கொண்டு, கொஞ்சம் ஓவராக பேசித்திரியும் அந்தக் கூட்டம்.

பாலகுமாரன் பலரிடம் பெரிய மாற்றத்தை உண்டாக்கி இருந்தாலும் இது போன்ற அறைகுறைகளையும் உண்டாக்கியிருக்கின்றார். கதையின் நடுவே அவர் பேசுவது போலவே பேசுவது, தேவையில்லாத நாடகத்தனம். மொத்தத்தில் எல்லாம் தெரிந்த ஏகாம்பர பெருங்காய டப்பாக்களை உண்டாக்கி இருந்தார் என்ற எண்ணம் எனக்கு வலுவானது.இது ஜெயகாந்தனுக்கும் பொருந்தும் அதனாலேயே எனக்கு கொஞ்சம் ஜெயகாந்தனை, பாலகுமாரனை படிக்க தயக்கமாக இருந்தது.

அதே சமயம் விகடனில் ஒரு புதிய தொடர் ஆரம்பித்தனர் "அப்பம் வடை தயிர்சாதம்"  என்னடா பாலகுமாரன் சமையல் குறிப்பு ஆரம்பித்து விட்டாரா என்று எண்ணிக் கொண்டுதான் படித்தேன். பின்னர் புத்தகமாக வாங்கினேன்.




09 நவம்பர் 2012

நில்லுங்கள் ராஜாவே - சுஜாதா

இரவு தூக்கம் வராமல் கைக்கு கிடைத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். அது "நில்லுங்கள் ராஜாவே". நல்ல விறுவிறுப்பான நாவல்.

ஒரு நாள் அலுவலகத்திற்கு போகும் போது உங்களுக்கு பதில் வேறு யாரோ உங்கள் பெயரில் உங்கள் இடத்தில் அமர்ந்து கொண்டு, யார் நீ என்றால் எப்படி இருக்கும்? ஒருவனின் ஐடென்ட்டி இன்னொருவனால் உபயோகப் படுத்தப் பட்டு, இரண்டு நான் கள் இருந்தால் என்ன ஆகும்.

ஜவகர்விட்டல் அலுவலகத்திலும், வீட்டிலும் அவன் அவனிலை என்று விரட்டப் படுகின்றான். குழந்தை, மனைவி, மச்சினிச்சி முதல் பக்கத்து வீட்டுக்காரன் வரை அடையாளம் தெரியவில்லை. காவல் துறையும் அவனை ஏற்க மறுக்கின்றது.

கடைசியில் தன் இடத்தில் உள்ளவனை கொலை செய்ய முயற்சி செய்து, போலிஸ் கஸ்டடியில் செல்கின்றான். அவனை பரிசோதித்த மருத்துவர், அவன் நார்மல் என்று அறிக்கை அளித்தாலும், சந்தேகப் பட்டு கணேஷிடம் அவன் கேஸை ஒப்படைக்கின்றார். ஜாமினில் கொண்டுவரப்படும் அவன் காணாமல் போக, கதை அதன் பின் ஒரே மூச்சில் பாய்கின்றது. 

டிபிகல் சுஜாதா டச். வசந்தின் குறும்பு "மச்சினிச்சி அடையாளம் ஏதாவது சொல்லுங்க", மருத்துவ விஷயங்கள், மூளையை வசப்படுத்துவது பற்றிய விஷய்ங்கள், சிஐஏ, கம்யூனிசம் என்று எங்கெங்கோ போகின்றது. கடைசியில் ஒரு சர்வதேச சதியை கண்டறிவதில் முடிவடைகின்றது.

கதையின் தலைப்பை முதலில் தந்து விட்டு கதையை யோசித்திருப்பார் போல, சும்மா அதை நடுவில் சேர்த்திருக்கின்றார். (ஒரு பெண் தன்னைத் தேடும் அவனைப் பார்த்து "நில்லுங்க ராஜா" என்கின்றாள், அவ்வளவுதான் கதைக்கும் தலைப்பிற்கும் தொடர்பு) தொடர்கதையை எந்த வேகத்தில் எழுதினாரோ, மருத்துவமனை ரிசப்ஷனிஸ்டுக்கு ஒரு பெயரை வைத்து, அடுத்த அந்தியாயத்திலேயே மீண்டும் வேறு ஒரு நாமகரணம் செய்து வைத்துள்ளார். 

அங்கங்கு கொஞ்சம் காதுல பூ என்றாலும் நல்ல விறுவிறுப்பான நாவல். இதைப் படிக்கும் போது எப்போதோ படித்த "மூன்று நிமிஷம் கணேஷ்" நினைவிற்கு வருகின்றது.ஒருவன் "நிமிஷா நிமிஷா நிமிஷா" என்று கூறிவிட்டு இறக்க, அது கணேஷையும் வசந்தையும் எங்கோ கொண்டு செல்லும். இரண்டிற்கும் அடிப்படை ஒன்றுதான் இதில் மருத்துவம், அதில் பொறியியல்.

உயிர்மையின் சுஜாதா குறுநாவல் தொகுப்பு பாகம் 4ல் உள்ளது.

07 நவம்பர் 2012

மானசரோவர் - அசோகமித்திரன்

அசோகமித்திரனைப் பற்றி நான் புதிதாக சொல்ல ஏதுமில்லை. இது அவரின் மற்றுமொரு சினிமா துறை பற்றிய நாவல். ஒரு எழுத்தாளனுக்கும், ஒரு சினிமா நடிகனுக்கும் உள்ள நட்பை பற்றிய கதை. கரைந்த நிழல்கள் போல் முழுவதும் சினிமா பின் சுற்றாமல் அந்த இருவரைச் சுற்றியே வருகின்றது.

கதையை எழுத்தாளனும் அவரது நண்பன் சினிமா நடிகனும் மாறி மாறி கூறிச்செல்கின்றார்கள். தமிழ் சினிமாவில் நடிக்கும் இந்தி நாயகன் சத்தியன் குமார், அவன் சினிமா தயாரிக்கும் நிறுவனத்தில் பணி புரியும் ஒரு  எழுத்தாளர் கோபாலைக் கண்டு அவரிடம் நட்பு கொள்கின்றான். அந்த நட்பால் கோபாலுக்கு  அந்த கம்பெனியில் ஒரு மதிப்பு ஏற்படுகின்றது. ஒரு நாள் கோபாலனின் மகன் இறந்து போகின்றான், மனைவியின் மனநிலையும் தவறுகின்றது. மகன் இறந்ததை விட அவன் இறப்பிற்கு காரணம் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றது. வீட்டை விட்டு கிளம்பி எங்கோ செல்கின்றார்.

சத்தியன் குமார் அவரைத் தேடி அலைகின்றான் இதனிடையில் கோபாலனுக்கு தெரிந்த ஒரு பெண்ணை கூட்டிக் கொண்டு சென்று தன் வீட்டில் வைத்துக் கொள்கின்றான். கடைசியில் ஒரு கிராமத்தில் ஒரு ஓடைக் கரையில் ஒரு சித்தருடன் இருக்கும் எழுத்தாளரை சந்திக்கின்றான். சித்தர் அவனின் மானசரோவரை அவனுக்கு அடையாளம் காட்டுகின்றார்.

06 நவம்பர் 2012

கிருஷ்ணா கிருஷ்ணா - இந்திரா பார்த்தசாரதி

 
"இந்நாவலில் உங்களுக்கு திரேதாயுகத்து கிருஷ்ணனும் தெரிவான்;21ம் நூற்றாண்டுக் கிருஷ்ணனும் தெரிவான். காலம் கடந்தவன் என்பதால் அல்ல; காலமாகவே நிற்பவன் என்பதால்" புத்தகத்தின் பின்னட்டையில்
 
இந்திய இதிகாச நாயகர்களுள் முக்கியமானவன் கிருஷ்ணன். பாகவதம், மகாபாரதம் போன்ற காவிய இதிகாசங்களின் முக்கிய பாத்திரம். அவற்றின் நாயகன் அவனல்ல, அவனில்லாமல் அக்காவியங்களில் ஒன்றுமில்லை. ராமாயணம், பாரதம் என்ற இரண்டு பெரும் இதிகாசங்களில் ராமாயணம் மக்களை சேர்ந்த அளவிற்கு பாரதம் போய்ச் சேரவில்லை என்பது என் எண்ணம்.

ராமாயணத்தைப் பற்றி எத்தனை விவாதம், எத்தனை மொழிபெயர்ப்பு, வித விதமான ராமாயணம். ஆனால் பாரதம்? தமிழில் கம்பராமாயணம் அனைவருக்கும் தெரியும், ஆனால் பாரதம் என்றால் சற்றே யோசித்தால் தான் வில்லிபுத்துரார் நினைவிற்கு வருகின்றார். அதைவிட்டால் பாரதியாரின் பாஞ்சாலி சபதம்.

பாரதம் மக்களிடம் முழுமையாக போய் சேராவிட்டாலும், அதன் கதைகள், கிளைக் கதைகள் மக்களிடம் உள்ளது. அதில் முக்கியமானது கிருஷ்ணனின் கதைகள்.

02 நவம்பர் 2012

சி.ஐ.டி சந்துரு - தேவன்


 தேவனின் புத்தகங்களை ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் படிக்கலாம் என்று எண்ணினேன். புதிய புத்தகங்களுடன் இதுவும் ஒரு சைட் டிராக்காக ஓடட்டும் என்று. சி.ஐ.டி சந்துருவை படித்திருந்தாலும் அதை விட்டு விட்டு படித்ததில் அவ்வளவாக மனதில் ஒட்டவில்லை. எனவே ஒரே மூச்சில் படிக்கலாம் என்று நினைத்தேன் முடிக்க மூன்று நாளாகியது.


தேவனின் எழுத்து திறமை பற்றி சுதர்சனத்திலேயே கூறிவிட்டாலும் மீண்டும் ஒரு முறை. அவர் எழுத்து புதிதாக தமிழ் படிப்பவர்கள் படிக்க வேண்டிய எழுத்து. சிறு வயதினருக்கு ஒரு தலையணை போன்ற நவீன நாவலை தந்தால் அவர்கள் அதோடு புத்தகம் பக்கம் செல்லும் நினைப்பை மறந்துவிடுவர். தேவன், கல்கி எல்லாம் ஒரு நல்ல ஆரம்பம்.

சி.ஐ.டி சந்துரு தேவனின் மற்றுமொரு கதாபாத்திரம். சாம்புவிற்கு நேர் எதிரிடையான கதாபாத்திரம். சாம்பு குருட்டு அதிர்ஷ்டத்தால் கண்டுபிடிப்பதை, சந்துரு தன் மூளையால் கண்டுபிடிக்கின்றான். கதை விகடனில் தொடராக வந்துள்ளது. தொடர்கதைக்கு ஏற்ற திருப்பங்களுடன் பரபரவென இருக்கின்றது.

01 நவம்பர் 2012

ஆகாயத்தாமரை - அசோகமித்திரன்

"உடனே அங்குமிங்கும் சுற்றிப் பார், அலைந்து பார், தேடிப் பார். இந்த வேலையை விட்டொழித்துவிட்டு உடனே வேறிடத்தில் சேர்ந்துக்கொள். சொல்லாதே, என்னிடம் சொல்லாதே."

"உன்னுடைய இன்றைய எஜமானனுக்கு உன்னைத் துரோகம் செய்ய வைப்பவனாக என்னை மாற்றாதே."

ஒரு இளைஞனுக்கு இரவில் முகமறியா ஒருவர் செய்யும் உபதேசத்தில் ஆரம்பிக்கின்றது.

ஆகாயத்தாமரை என்பது குளம் குட்டைகளை நாசப்படுத்தும் ஒரு தாவரம் என்றுதான் தெரியும். ஆனால் ஆகாயத்தாமரை என்பதை, ஆகாயத்தில் உள்ள தாமரை என்று இல்லாத ஒரு பொருளுக்கு உவமையாக்குகின்றார்.

30 அக்டோபர் 2012

வாடிவாசல் - சி. சு. செல்லப்பா

"மிருகத்தை ரோசப்படுத்தி, அதன் எல்லையை கண்டு விட்டு, அதை மனிதன் அடக்கி வசப்படுத்தி வெற்றி காட்ட துணிவதை சாதகமாக செய்திருகின்றார்கள். அந்தக் கோதாவுக்குள் ஒத்தைக்கு ஒத்தையாக இறங்கும் மனுஷனுக்கும் மாட்டுக்கும் நடக்கிறப் பலப் போட்டியில் இந்த இரண்டிலொரு முடிவு காணும் - அந்த வாடிவாசலில்"
 
அந்த முடிவை காண வரும் இரண்டு இளைஞர்களை மையமாக கொண்டது இக்கதை. ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீரவிளையாட்டு, வேடிக்கை பார்ப்பவர்களுக்கு விளையாட்டு. காளைகளுக்கு அது விளையாட்டல்ல, மாடு அணைபவர்களுக்கும் அது விளையாட்டல்ல.

26 அக்டோபர் 2012

கணையாழியின் கடைசி பக்கங்கள் - சுஜாதா

சுஜாதாவைப் பற்றி அறிமுகம் செய்ய முனைந்தால் அது என் அறியாமையைக் காட்டும். அனைவருக்கும் தெரிந்த பிடித்த எழுத்தாளர். அவரைக் குறை சொல்பவர்கள் கூட அவரை குறைத்து மதிப்பிடுவதில்லை. அவர் கணையாழியில் 33 வருடங்களாக எழுதி வந்த பத்திகளின் தொகுப்பு கணையாழின் கடைசிப் பக்கங்கள் என்று ஒரே தொகுப்பாக உயிர்மை வெளியுட்டுள்ளது.

சுஜாதா கணையாழியில் தொடர்ச்சியாக எழுதவில்லை, விட்டு விட்டு வேறு வேறு தலைப்புகளில் எழுதியுள்ளார். தேசிகன் இதை பெரும் சிரந்தை எடுத்து தொகுத்துள்ளார். அனைத்து கட்டுரைகளும் மாதவாரியாக தொகுத்துள்ளனர். படிக்கும் போது அந்த காலத்தைப் பற்றிய ஒரு சித்திரமும் கிடைக்கின்றது.உண்மையில் இதைச் செய்து முடிக்க அசாத்ய பொறுமை வேண்டும். தேசிகனிடம் வேண்டியளவு இருக்கின்றது.

19 அக்டோபர் 2012

ஸ்ரீமான் சுதர்சனம் - தேவன்


நடுத்தரவர்க்கம் என்றும் ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருகின்றது. தன்னை விட மேலாக உள்ளவர்களைப் பார்த்து ஏங்குவதும், தன்னைவிட கீழே உள்ளவர்களைப் பார்த்து தன்னை திருப்திப் படுத்திக் கொள்வதுமாக அன்றும் இன்றும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கின்றது. தவறு செய்யப் பயப்படுவதும், அதே சமயம் தவறு செய்யத் தூண்டும் சூழ்நிலைகளுக்கு நடுவில் இருப்பதும், செய்த தவறை நினைத்து தவிப்பதும், ஆசைக்கும் நேர்மைக்கும் நடுவில் வாழும் ஒரு வாழ்க்கை.

16 அக்டோபர் 2012

சில புத்தகங்கள் - எச்சரிக்கைகள்

வழக்கமாக புத்தகங்களைப் படித்தால், நமக்கு தெரிந்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளத் தோன்றும். அவர்களும் அதை வாங்கிப் படிக்கட்டும் என்ற நல்ல எண்ணம். சில புத்தகங்களைப் படித்தால், மற்றவர்களுக்கு எச்சரிக்கத் தோன்றும்.
 

15 அக்டோபர் 2012

கரைந்த நிழல்கள்

"சினிமான்னா என்னாங்க  காரு சோறு இது இரண்டும் தானுங்களே. புரொடக்ஷன் நடக்கற வரைக்கும் அஞ்சு ரூபா பத்து ரூபா சாப்பாட்டுக்குக் குறைஞ்சு வேலைக்காரன் கூட சாப்பிடமாட்டான். பத்து பைசா பீடா வாங்க ஆறு மைல் எட்டு மைல் செளகார்பேட்டைக்கு இரண்டு கார் போகும்" என்று முடியும் இக்கதை சினிமாத்துறையினரின் கதையை இரண்டு வரியில் சொல்கின்றது.

08 அக்டோபர் 2012

ஜனகணமன - மாலன்

காந்தியைப் பற்றி மக்களின் பார்வை பலவித காரணங்களைப்  பொறுத்து மாறுகின்றது. சிலருக்கு மாபெரும் மனிதர், வழிகாட்டி, சிறந்த அரசியல்வாதி, நல்ல தலைவர், சுதந்திரம் பெற்றுத் தந்தவர், மக்களிடம் அஹிம்சையை பரப்பியவர், எளிமையானவர் என்று அவரைப் பற்றி போற்றுவோரும் உள்ளனர், அதே சமயம் அவர் இந்து மதவாதி, இந்துக்களுக்கு துரோகம் செய்தவர், இஸ்லாமியர்கள் மீது கரிசனம் காட்டியவர், தலித்துகளுக்கு எதிரானவர், தன் முடிவை மற்றவர்கள் மீது திணித்தவர், உண்ணாவிரதம் என்ற பெயரில் மற்றவர்களை மிரட்டியவர் என்று கூறுவோரும் உள்ளனர். பெரும்பாலான கருத்துக்கள் மற்றவர்களால் உருவாக்கப்பட்டு ஒருவர் மீது திணிக்கப்பட்டதாகத்தான் இருக்கும்.

இது போன்ற பல விமர்சனங்களே அவர் ஒரு பெரிய ஆள் என்பதற்கு போதுமான சாட்சி. காந்திமீது பலவித விமர்சனங்கள் இருந்தாலும் அவரை யாரும் ஒரு மோசமான மனிதர் என்று கூறியதில்லை. ஆனால் இன்றைய சிந்தந்தப்படி ஒருவரின் கருத்து பிடிக்காவிட்டால் அவரையே பிடிக்காமல் போகவேண்டுமே, அதனால் பல இளைஞர்களுக்கு அவர் மோசமானவர். 

02 அக்டோபர் 2012

ஒற்றன் - அசோகமித்திரன்

18வது அட்சக்கோடு படித்ததும் அசோகமித்ரனின் நூல்களை வாங்க ஆரம்பித்தேன். பெரும்பாலானவர்கள் ஒற்றனைப் பற்றி சிலாகித்து கூறியிருந்தனர். ஒற்றன் என்ற தலைப்பு எதோ உளவாளியைப் பற்றிய் கதை என்று தோன்றவைக்கின்றது. படித்தபின் தான் தெரிந்தது இது வேறு வகை, அமெரிக்கா சென்று "டகரஜான்" ஆன அசோகமித்திரனின் பயணக்கதை என்று. அவர் இதை புனைகதை என்கின்றார். சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் போல இதுவும் நிஜமும் கற்பனையும் கலந்த கலவையாகத்தான் இருக்கும்.

அசோகமித்திரன் ஒரு எழுத்தாளர் சந்திப்பிற்கு அயோவா சிட்டிக்கு சென்று 7 மாதங்கள் தங்கியிருந்த அனுபவங்களை கதையாக்கி தந்துள்ளார். இது நாவல் எனப்படுகின்றது, இந்த வடிவத்தில் நான் படித்த முதல் நாவல் என்பதால் இது எப்படி நாவலகும் என்ற குழப்பம் இன்னும் உள்ளது. ஒவ்வொரு அந்தியாயமும் அதனளவில் முழுமையானது. தனியாக எடுத்தால் ஒரு சிறுகதையாகும், முதலிரண்டு அந்தியாயங்களைத் தவிர மற்ற பகுதிகளை வரிசை மாற்றினாலும் வடிவம் கெடாது.

18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்

புத்தகம் படிக்கும் வழக்கம் சிறுவயது முதலிருந்தாலும், இணையத்தின் மூலமாகத்தான் பல நல்ல எழுத்தாளர்கள், புத்தகங்கள் அறிமுகமானர்கள். சிலிக்கான் ஷெல்ப், ஜெயமோகன் இவர்களின் தளத்தில் பல புத்தக விமர்சனம், அறிமுகம் கிடைக்கப்பெற்றேன். அதே போல் புத்தகம் வாங்குவதும் பெரிய சவாலாக இருந்து. பெங்களூரில் தமிழ் புத்தகத்தை எங்குவாங்குவது. ஹிக்கின்பாதம்ஸில் சமையல் கலைதான் கிடைக்கின்றது. அதற்கும் இணையம் தான் துணை. கிழக்குப்  பதிப்பகத்தின் செயல்பாடு மிகச்சிறந்தது.

அசோகமித்திரனின் பெயரைக் கேட்டிருந்தாலும் அவரின் புத்தகங்கள் எதையும் படித்ததில்லை, புத்தகங்களைப் பற்றியும் கேள்விபட்டதில்லை. அவரின் தி.ஜாவை பற்றிய பேட்டியை சொல்வனத்தில் படித்து கொஞ்சம் எரிச்சலாகக் கூட இருந்தது. அதோடு அவரின் கதைகள் சீரியஸாக இருக்குமோ என்ற எண்ணம் வேறு. 18வது அட்சக்கோடு பற்றி பலரும் பேசுவதைக் கேட்டுத்தான் வாங்கினேன். எப்புத்தகத்தையும் வேகமாக பல முறை படிப்பது என் வழக்கம். முதலில் புத்தகத்தை முடிக்க வேண்டும் என்ற வெறி. பின்னர் மெதுவாக பல முறை படிப்பதுண்டு.

25 செப்டம்பர் 2012

நான், கிருஷ்ண தேவராயன்

தமிழில் வந்த சரித்திர நாவல்களை பட்டியலிட்டால் எப்படியும் ஒரு 100 நாவலாவது தேறும். நான் முதலில் படித்த சரித்திரக்கதை என்னவென்று யோசித்தால்; பெரும்பாலானோர் கூறும் பதில்தான் "பொன்னியின் செல்வன்". ஏழாவது படிக்கும் போது நூலகத்தில் படித்தது. மீண்டும் அதை +2 படிக்கும் போது படித்தேன். கல்லூரி படிக்கும் போது சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு. வேலையில் சேர்ந்த பின் நிறைய சாண்டில்யன் கதைகள். என் நண்பனிடம் நிறைய சாண்டில்யன்கள் இருந்தன்.

கல்கியின் மூன்று கதைகளும் வேறுபட்டவை. முதல் கதையான பார்த்திபன் கனவு ஒரு பயிற்சி கதைபோலத்தான், சிவகாமியின் சபதம் - பொன்னியின் செல்வனும் இரு வேறுபட்ட வடிவங்கள்.சிவகாமியின் சபதம் ராமாயணச்சாயலும், பொன்னியின்செல்வன் மகாபாரதச்சாயலும் கொண்டது என்று என் அபிப்ராயம். சாண்டில்யனுக்கு ஒரு தனி பாணியே இருந்தது. கதாநாயகன் ஒரு சூப்பர் ஹீரோ. எல்லாம் தெரியும் அவனுக்கு, எல்லாம் ஜெயம், யாரவது உதவுவார்கள். ஜேம்ஸ்பாண்ட் மாதிரி பெண் (அ) பெண்கள் உதவி உண்டு. கண்டிப்பாக கதையில் கொஞ்சம் சரித்திரமும் உண்டு. முதல் இரண்டு கதைகள் சுவாரஸ்யமாக இருந்தாலும் பின்பு அந்த டெம்ளேட் பழகி விட்டது. கதையை சுலபமாக யூகிக்கமுடிந்தது. அங்கங்கு போரடித்தாலும் படிக்கலாம் என்றே தோன்றும்.

06 செப்டம்பர் 2012

முதல் வணக்கம்

கணிணி வைத்திருக்கும் அனைவரும் பதிவர்களாக மாறும் சாத்தியக்கூறு தெரிவதால், நாமும் அந்தக் கடலில் கலக்கலாமே என்ற ஒரு எண்ணத்தில் விளைந்தது. நான் படித்த புத்தகங்கள், தெரிந்து கொண்ட விஷயங்களை எழுதிவைப்போம், நாளை நமக்கே பயன்படும்.