திருவனந்தபுரத்தை மையமாக வைத்து நீல.பத்மநாபன் எழுதிய கதை.
அனந்தன் நாயரின் இரண்டு தினங்கள்தான் நாவல். பத்மநாபன் பள்ளிகொண்டுள்ள கோவிலில் ஆரம்பிக்கும் கதை, அனந்தன் நாயரின் வீட்டில் முடிகின்றது. அனந்தன் நாயரின் ஐம்பதாவது பிறந்தநாள் காலையில் ஆரம்பிக்கும் கதை அவரின் மரணத்தில் முடிகின்றது. அடுத்த இரண்டு நாட்களும் அவரது நினைவில் சுழன்றடிக்கும் அவரது வாழ்க்கை சூறாவளிதான் கதை. மிகச்சாதரண கதையாக போயிருக்க வேண்டிய கதை, அந்த நகருடன் கொண்ட பிணைப்பினால் ஒரு நல்ல கதையாக உருவெடுத்துள்ளது.
அனந்தன் நாயரின் மனைவி கார்த்தியாயனி, இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு வேறொருவருடன் ஓடிவிடுகின்றாள். அவளின் நினைவை ஒதுக்க முடியாமல் "மருந்தை குடிக்கும் போது குரங்கை நினைக்ககூடாது" கதையாய் அவளை மறக்க முயற்சி செய்கின்றார்.
ஒரு மனிதனுக்கு தான் செய்வது என்பது என்றும் தவறாக தோன்றாது, தோன்றுவது வெகு அபூர்வம். அதோடு அவன் செய்யும் செயல் மற்றவரிடம் வேறுபட்டால், மற்றவர்களை விட ஒரு படி மேலானாதாக தோன்றினால் கேட்கவே வேண்டாம். அனந்தன் நாயருக்கு அவரின் மனைவி அவரை விட்டு ஓடிய பிறகு தனியாக வாழ்ந்து அவரின் மக்களை வளர்த்தது ஒரு பெருமையாகவும், அதன் காரணமாகவே அவருக்கு நடக்கு எதிர்மறை நிகழ்ச்சிகள் அனைத்தும் நியாயமற்றவையாகவும் தோன்றுகின்றது.