24 ஏப்ரல் 2017

கள்ளி - வா மு கோமு

தலித் மக்களை பற்றிய் நாவல் என்று முன்னுரை கூறுகின்றது. சரிதான், தாழ்த்தப்பட்ட மக்களை பாத்திரங்களாக கொண்ட நாவல். அவர்களின் வாழ்வை பற்றி கூறியிருக்கின்றதா என்றால் ஓரளவிற்கு என்று கூறலாம். ஒவ்வொரு அந்தியாயமும் தனிக் கதை. சில பாத்திரங்கள் பல கதைகளில் எட்டிப்பார்க்கின்றார்கள். கொங்குப்பகுதி வட்டார வழக்கில் படிக்கும் முதல் நாவல். தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, சென்னை, நாஞ்சில் என்று பல வட்டார வழக்கை படித்தாலும் இது கொஞ்சம் கடினமாகவே இருக்கின்றது படிக்க. காரணம், பல வார்த்தைகள் முடியாமலே அந்தரத்தில் தொங்குவது போன்ற தொற்றம், மேலும் படிக்கும் போது சத்யராஜ், கோவை சரளா, மணிவண்ணன் போன்றவர்களின் குரல் கேட்பது போன்ற பிரமை வேறு. 

கிராமத்தில் தலித் மக்களுக்கு நடக்கும் நிகழ்வுகள் பற்றியே கதை. மேய்ச்சலில் விடுபட்ட ஆட்டை தேடிப் போகும் தந்தை மகன்,அவர்களின் உரையாடல் என்று அம்மக்களின் பின் புலத்தை காட்டுகின்றார். அதன் பின்னால் சில பல பகுதிகள் பரவாயில்லை என்று இருக்கின்றது. ஆனால் பிறகு வெறும் ஆண் பெண் உறவில் சென்று அமர்கின்றது. மொத்த நாவலும் அதை பற்றி பேசுவது போன்ற தோற்றத்தை காட்டுகின்றது.

21 ஏப்ரல் 2017

மொஸாட் - சொக்கன்


சொக்கன் தமிழ் இலக்கண சம்பந்தமாக பல புத்தகங்கள் எழுதியிருக்கின்றார். திருக்குறள் முதல் சங்க இலக்கியங்கள் வரை பயின்ற ஒரு நல்ல தமிழறிஞர் என்று சொல்லலாம். தமிழில் எழுதுவதே இன்று கடினமான நிலையில், பிழையின்றி எழுதுவோம் என்று பல நல்ல விஷயங்களை பரப்பி வருகின்றார். பெங்களூரில் அவரது அலுவலகத்தில் வாராவாரம் கம்பராமயாண வாசிப்பை நடத்தி, இப்போது சிலப்பதிகாரம் வாசித்து வருகின்றனர். அவர் எழுதிய ஒரு பரபரப்பான நூல் மொஸாட்.

மொஸாட்டை பற்றி சினிமா, வரலாறு அறிந்தவர்கள் கண்டிப்பாக கேள்விப்பட்டிருப்பார்கள். இஸ்ரேலியர்களின் உளவுத்துறை. நெருப்பிற்கு நடுவிலிருக்கும் கற்பூரக்கட்டி போன்ற நாடு இஸ்ரேல். சுற்றி இருப்பவர்கள் எந்த நேரமும் தாக்கும் அபாயம் கொண்ட நாடு. அதனாலேயே அவர்கள் அதிகம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கின்றது. அதனை பூர்த்தி செய்வது மொஸாட். அவர்களின் உளவுத்துறை. இஸ்ரேலியர்களை பாதுகாக்க உண்டாக்கப்பட்ட அமைப்பு. 

உளவுத்துறையின் வேலை, வரும்முன் தடுப்பது என்பதே பொதுவான நடைமுறை. மொஸாட் தேவைப்பட்டா இறங்கி அடிக்கவும் செய்யும். ம்யூனிச் ஒலிம்பிக்கில் இஸ்ரேலிய வீரர்களை தீவிரவாதிகள் சுட்டு கொன்றனர். அதில் ஈடுபட்ட ஒவ்வொருவரையும் மொஸாட் தேடித்தேடி கொன்றது. அந்த கதையுடன் ஆரம்பமாகின்றது புத்தகம். பல பக்கங்களை அந்நிகழ்வே சாப்பிட்ட பின்னர் மெதுவாக மொஸாட்டின் சரித்திரத்திற்குள் வருகின்றது.

மொஸாட்டின் பல சாகசங்கள் பக்கங்களை நிரப்பியுள்ளதால் சுவாரஸ்யமான புத்தகமாகவே இருக்கின்றது. எங்கும் சுவாரஸ்யம் குன்றவில்லை. முக்கியமான ஒன்று சரித்திரத்தை சொல்கின்றேன் என்று ஒரு பக்கச்சார்புடன் எதுவும் எழுதப்படவில்லை. 

சொக்கன், கே.ஜி.பி என்று ரஷ்ய உளவுத்துறையை பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கின்றா. இதோடு ஒப்பிடுகையில் அது கொஞ்சம் வெண் பொங்கல், இளையராஜாவின் மெல்லிசை பாடல்கள் வகையறா. படித்தவுடன் தூக்கம் வந்துவிடும். இப்புத்தகம் உங்களை தூங்க விடாது, வேகமாக படிக்க வைக்கும். 

11 ஏப்ரல் 2017

ஒரு கதை


ஸ்ரீராம் ”எங்கள் ப்ளாக்” என்ற பெயரில் ஒரு சுவாரஸ்யமான தளத்தை நடத்தி வருகின்றார்.  அவர் நீங்கள் கதை எழுதுவீர்களா என்று கேட்டார், கதை என்று சிலவற்றை எழுதியிருந்தேன். அதில் ஒன்றை அவருக்கு அனுப்பி வைத்தேன். இன்று அவர் தளத்தில் அது வெளியாகியிருக்கின்றது. அதன் இணைப்பு.

முதலில் இருந்த படத்தை பார்த்து நானும் கொஞ்சம் குழம்பிவிட்டேன் :)

படித்தபின் கதையின் தலைப்பிற்கும் படித்ததற்கும் தொடர்பு இருப்பதாக நினைத்தால், தலைப்புதான் பதில்

http://engalblog.blogspot.com/2017/04/blog-post.html

Veerappan: Chasing the Brigand

பிரபலமன முகம். சும்மா ஒரு மூக்கையும் அதற்கு கீழே ஒரு பெரிய மீசையையும் வரைந்தால் போதும், அட இவரா என்று அடையாளம் கண்டுவிடலாம். பல திரைப்பட கருக்களுக்கு சொந்தக்காரர். வீரப்பன், சே வீரப்பர் என்று சொல்ல வேண்டும் என்று கருணாநிதி கூறியிருந்தார். பாவம், அன்பழகருக்கு கூட கிடைக்காத பெருமை வீரப்பருக்கு கிடைத்தது. இருக்கட்டும் நாம் வீரப்பன் என்றே அழைப்போம். நமக்கு ஓட்டு பிச்சை தேவையா என்ன?

சுமார் 169 மனிதர்கள், ஏராளமான யானைகள், கணக்கில்லாத சந்தன மரங்களை அழித்த வீரப்பன் வேட்டையைப் பற்றி, வீரப்பனை ஒருவழியாக சுட்டு கொன்ற படைக்கு தலைவராக இருந்த விஜயக்குமார் எழுதிய புத்தகம். தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்ட ஒரு புத்தகம். ஒரு சாகசநாவலுக்கு இணையாக இருக்கின்றது. என்ன, முடிவு நமக்கு ஏற்கனவே தெரிந்தது. அதேசமயம் இதில் வீரப்பன்தான் சாகச நாயகனாக இருக்கின்றான். எல்லா ஆட்டங்களையும் தொடர்ந்து ஜெயித்து கொண்டே வந்திருக்கும் ஒருவனாகத்தான் இருந்திருக்கின்றான். கண் பார்வை கோளாறு மட்டுமிருந்திராவிட்டால் இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம், ஆனாலும் இன்றைய டெக்னாலஜி சாத்தியங்களுக்கு தாக்கு பிடித்திக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

விஜயக்குமாரை அதிரடிப்படைக்கு பதவியேற்க ஜெயலலிதா சொல்வதில் ஆரம்பிக்கும் கதை, நிகழ்காலத்திற்கும் கடந்தகாலத்திற்குமாக போய் வருகின்றது. நல்ல யுக்தி. இறுதிப்பகுதிகள் செம பரபரப்பு.

06 ஏப்ரல் 2017

இந்தியப்பிரிவினை உதிரத்தால் ஒரு கோடு - மருதன்

இந்தியப்பிரிவினை பற்றி ஏராளமான புத்தகங்கள் வந்திருக்கின்றன். தமிழில் என் கண்ணில் பட்டது இது, இதற்கு முன் குஷ்வந்த் சிங் எழுதிய பாகிஸ்தானுக்கு போகும் ரயில், மொழிபெயர்ப்பை படித்து முழி பிதுங்கியதை நினைவில் கொண்டுவந்துவிட்டது இப்புத்தகம். வரலாற்றை எழுதுபவனின் அரசியல் அவன் எழுதும் வரலாற்றி கலக்கும், ஆனாலும் மிகவும் ஒரு பக்க சார்ப்பாக எழுதினால் அது வரலாறு அல்ல. இந்தியப்பிரிவினை பற்றிய வரலாற்றை எழுதும் போது தன்னுடைய அரசியலையும் கலந்து எழுதியிருக்கின்றார்.

நான் லீனியர் முறையில் வரலாற்றை எழுதும் யோசனையை அவருக்கு யார் தந்தது என்று தெரியவில்லை. அனுகூல சத்ரு. எங்கெங்கோ அலைகின்றது. படிப்பவர் மனதில் ஒரு ஆழ்ந்த பாதிப்பை உண்டாக்க கூடிய சம்பவம், பிரிவினை. ஒரு கொசு கடித்த உணர்வை கூட ஏற்படுத்தாத அளவில் எழுதப்பட்டுள்ளது. அனைத்தும் துண்டு துண்டாக இருக்கின்றது. பிரிவினையின் போது நடந்த துயரஙக்ளை பற்றி சும்மா இரண்டு மூன்று பக்கங்களில் அடித்துவிட்டு விட்டு போக எதற்கு ஒரு புத்தகம்.

படிக்க வேண்டியதில்லை என்று பரிந்துரைக்கின்றேன்

05 ஏப்ரல் 2017

வந்தார்கள் வென்றார்கள் - மதன்

சரித்திரம் எப்போதும் சுவாரஸ்யமானது, அதை முடிந்தவரை கடினமாக்குவது அதை எழுதும் ஆசிரியர்களின் திறமையில் இருக்கின்றது. நமது பாட நூல் ஆசிரியர்கள் அந்த வகையில் மிகவும் கை தேர்ந்தவர்கள். வினாத்தாள் தயாரிப்பவர்கள் சரித்திரத்தை மாணவர்கள் எண்களாக புரிந்து கொண்டால் போதும் என்றே நினைக்கின்றார்கள். வருடங்களை சரியாக எழுதினால் போதும்.  சரித்திரத்தை படு சுவாரஸ்யமாக எழுத முடியும் என்று தமிழ் தொடர்கதை ஆசிரியர்கள்தான் முதலில் கண்டு கொண்டார்கள். ஆனால் பிரச்சினை அதிலிருக்கும் சரித்திரம்தான். முழுக்க முழுக்க சரித்திரத்தில் நடந்த சம்பவங்களை சுவாரஸ்யமாக, கொஞ்சம் நடுநிலையோடு தர முடியும் என்று காட்டியது மதனின் இந்த தொடர்தான். இதன்  பின்னரே பல தொடர்கள் பல்வேறு இதழ்களில் வெளிவந்தன.

தைமூரின் படையெடுப்புடன் ஆரம்பித்து கடைசி மன்னர் நாடுகடத்தப்படுவது வரை அனைவரையும் பற்றி சுவாரஸ்யமாக எழுதியிருக்கின்றார். சில புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள வைக்கின்றது.  முகலாய சாம்ராஜ்ஜியத்திற்கு முன்பே இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சி இங்கு ஆரம்பித்துவிட்டது. அதற்கு காரணம் ஒரு காதல் என்பது சோகமான விஷயம். முகம்மது கோரியின் படையெடுப்பிற்கு பின்னரே இங்கு அவர்களின் ஆட்சி என்பது வலுவாக காலூன்றியிருக்கின்றது. பிருத்திவிராஜனின் மனைவி சம்யுக்தை, அவர்களின் காதலை ஏற்று கொள்ளாத சம்யுக்தையின் அப்பா, காலை வாரிவிட பிருத்திவிராஜன் தோல்வி அடைகின்றான். அதுவே இங்கு அன்னியர் காலூன்ற அனுமதித்திருக்கின்றது. ராஜபுத்திர மன்னர்களின் ஒற்றுமையில்லாத தன்மையின் விளைவு பல நூறு வருடங்களுக்கு அன்னிய ஆட்சி.

முகம்மது கோரிக்கு முன்பு வந்த கஜினியின் படையெடுப்பை விரிவாக பேசுகின்றது. தோல்வியடைந்தவனுக்கு உதாரணமாக சொல்லப்படும் கஜினியின் அனைத்து படையெடுப்புமே வெற்றி என்பதுதான் உண்மை என்கிறார். சோமநாதர் ஆலய உடைப்பு போன்ற சரித்திர சம்பவங்கள் இன்று மதவாத பேச்சாகிவிட்டது. 

ஏகப்பட்ட குட்டி குட்டி ரசமான தகவல்கள் புத்தகத்தை சிறப்பாக்குகின்றது. அடிமைகள் வம்சத்தில் ஒரு பெண் ஆட்சி புரிந்தது (ரஸியா) மிக ஆச்சர்யமானது. துக்ளக்கிற்கு ஒரு சூஃபி கொடுத்த சாபம், விடாமல் துரத்தப்பட்ட்ட ஹுமாயூனின் மசக்கை மனைவிக்கு பாலைவனத்தில் கிடைத்த மாதுளை, பாபர் தன்னுயிரை இறைவனிடம் தந்து மகனின் உயிரை காத்தது போன்றவையெல்லாம் நம் சரித்திரப்பாடங்கள் சொல்லிதருவதில்லை.

நடுநிலைமை என்ற பெயரில் வழக்கமாகச் செய்யப்படும் ஒற்றைப்படைத்தன்மை இதிலில்லை. முடிந்தவரை அனைத்து பக்கங்களையும் காட்டியுள்ளார். இஸ்லாமிய மன்னர்கள் கோவில்களை மட்டுமல்ல மசூதிகளையும் இடித்துள்ளனர் என்ற தகவலும் கிடைக்கின்றது. ஒரு வேளை ஷியா,ஸுன்னி பிரச்சினையோ என்னவோ. 

நல்ல புத்தகம். சுவாரஸ்யமான புத்தகம்.