சொல்ல மறந்த கதை. அழகி படம் பார்த்த ஹேங் ஓவரில் என் நண்பன் என்னை இழுத்துக் கொண்டு போனான். அழகியே என்னை பொருத்தவரையில் ஒரு குப்பை படம்தான். இளையராஜா இல்லாதிருந்தால் படம் பப்படமாகியிருக்கும். டைட்டில் போடும் போது தலைகீழ் விகிதங்கள் என்னும் நாவலை அடிப்படையாக கொண்டது என்று போட்டிருந்தது. முணுக் முணுக்கென்று அழுகும் சேரன் படத்தையே ஒவ்வாததாக செய்திருந்தார். படத்தை பார்த்து நொந்து வந்த பின் நாவலாசிரியர் மீது ஒரு எரிச்சலே இருந்தது. நாவலாசிரியர் யார் என்று தேடினால், நாஞ்சில்நாடன். பெரிதாக படிக்கும் ஆர்வம் வரவில்லை.
ஜெயமோகனின் தளத்தில் அவரை பற்றி ஒரு பெரிய கட்டுரை எழுதியிருந்தார். தாடகை மலையடிவாரத்தில். அவரை பற்றிய ஒரு பெரிய அறிமுகத்தை கொடுத்தது. அதன் பின் ஜெயமோகன் அவரை பற்றி பல இடங்களில் எழுதியிருந்தார். ஜெயமோகன் எழுத்துக்கள் மூலம் அவர் ஏதோ மிகவும் தெரிந்தவர் போல ஆகிவிட்டார். அவரின் முதல் நாவல் இப்புத்தகம்.