சீனாவில் வெளிவந்து விற்பனையில் சாதனை படைத்த நாவல். தமிழில் சி. மோகன் மொழிபெயர்த்துள்ளார்.
தலைப்பை பார்த்தவுடன் எவ்வித பிம்பமும் கிடைக்காத நாவல்கள் பல உண்டு. அதில் இதுவு ஒன்று. ஆங்கிலத்தில் Wolf Totem என்ற பெயரில் வெளிவந்த நாவல். Totem என்பதை குலமரபு என்று கூகுள் மொழி பெயர்க்கின்றது. ஓரளவிற்கு அது சரியாக வருகின்றது. நாவலின் உள்ளேயும் அதையே பயன்படுத்தியிருந்தால் இன்னும் எளிதாக இருந்திருக்கும். குலச்சின்னம் என்றால் ஏதோ ஒருவர் ஒரு பெரிய பதாகையை பிடித்து கொண்டு போவது போல தோன்றுகின்றது.
முதலில் சில செய்திகளைப் பார்க்கலாம்.
ஆஸ்திரேலியாவில் ஒட்டகங்களை கொல்ல முடிவு. ஒட்டகங்கள் அதிகமாக பெருகி, அங்கிர்ந்த நீர் நிலைகளை அனைத்தையும் காலி செய்வதால் அவற்றைக் கொல்ல முடிவு. ஒட்டகம் ஆஸ்திரேலியாவின் பூர்வீக விலங்கு அல்ல. வெளியிலிருந்து வந்தவை, இன்று அவை லட்ச்சக்கணக்கில் பெருகியுள்ளன, ரோகிங்கியாஸ் மாதிரி.
வயலில் இருக்கும் பாம்புகளை அனைத்தையும் கொன்றதால், எலிகளின் அதிகமாகி பயிர்கள் அழிவு.
சீனாவில் குருவிகளால் பயிர்களுக்கு சேதம் என்று மாவோ காலத்தில் அனைத்து குருவிகளும் கொல்லப்பட்டன, ஆனால் குருவிகள் பயிர்களை மட்டுமல்ல, அதில் இருக்கும் புழுக்களையும் சேர்த்து தின்கின்றன என்பதை அறிய கொஞ்சம் காலம் ஆனது, குருவிகளை விட குருவிகள் இல்லாததால் பிழைத்த பூச்சிகள் அழித்த பயிர்கள் அதிகம். பின்னால் குருவிகளை மார்க்சியத்தின் பெயரால் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்தது.
இவை அனைத்தும் இயல்பான இயற்கை சமநிலையை மனிதன் மாற்ற முயன்றதன் விளைவு. இயற்கை தன் சமநிலையை எப்போது பேணிக் கொண்டிருக்கும். நமது முன்னோர்கள் அதை தெளிவாகவே புரிந்து வைத்திருந்தனர். அந்த சமநிலையை குலைக்கும் எவையும் பின்னாளில் மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்குகின்றன. சீனாவின் மங்கோலியப் பகுதிகளில் நடந்த அப்படிப்பட்ட நிகழ்வுகளைப் பற்றி பேசுகின்றது இந்த நாவல்.