வரலாற்று பாடம் என்பது எனக்கு எப்போதும் தலைவலியை தரும் ஒன்று. குறிப்பாக வருடங்கள். ஆறாம் வகுப்பிலோ, எட்டாம் வகுப்பிலோ, ஒரு பெரிய பகுதி. இந்திய வரலாற்றை முழுவதும் கரைத்து புகட்டும் ஆர்வத்தில் எவரோ தயாரித்தது. ஏகப்பட்ட வருடங்கள், காந்தி இர்வின் ஒப்பந்தம், மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம். தேர்வில் அப்படியே எழுதுவது என்பது, புத்தகத்தை வைத்துக் கொண்டு கூட சாத்தியமில்லாதது. என்னைப் பலரின் தூக்கத்தை கெடுத்த , பத்தாம் வகுப்பு வரை படித்த வரலாற்றில் ஒரு வரி கூட இல்லாத ஒன்றை பற்றி பேசுகின்றது இந்த புத்தகம்.
ராய் மாக்ஸம் என்னும் ஆங்கிலேயேர் எழுதிய THE GREAT HEDGE OF INDIA என்னும் நூலின் தமிழாக்கம். தமிழில் சிறில் அலெக்ஸ் மொழி பெயர்த்துள்ளார். இப்புத்தகம் வெளிவந்த பொழுதே ஜெயமோகன் இதைப் பற்றி சிறந்த அறிமுகத்தை தந்திருந்தார். ஆங்கிலத்தை விட தமிழில் படிப்பது எனக்கு சுலபமாக இருந்தது.
இணையத்தில் கண்டதையும் படிக்க ஆரம்பித்த புதிதில் தன் விஷயங்கள் புரியாமல் இருந்தன. முக்கியமானது பலருக்கு இருக்கும் இந்திய வெறுப்பு. அவர்களை பொறுத்த வரை இந்தியா எப்போதும் சிறப்பாக இருந்ததே இல்லை. ஆங்கிலேயர்கள் வந்த பின்னால் தான் இந்தியா பல துறைகளில் முன்னேறியது. எப்படி சிலரால் அந்தளவிற்கு முட்டாள்த்தனமாக யோசிக்க முடியும் என்பது ஆச்சர்யமாகவும், பின்னர் வேடிக்கையாகவும் இருந்தது.