ஓரு குடும்பத்தின் ஐந்து தலைமுறையை சேர்ந்தவர்களை பற்றிய கதை. படிக்கும் போது முதலில் நினைவில் வந்தது அசோகமித்திரனின் யுந்தங்களுக்கிடையில் நாவலும், பாலகுமாரனின் அப்பம் வடை தயிர்சாதமும். பாலகுமாரனின் நாவல் ஒரு குடும்பத்தின் / சமூகத்தின் வெற்றியை பற்றியது, அசோகமித்திரனின் நாவல் முழுக்க முழுக்க குடும்பத்தின் மாறுதல்கள், அதன் விளைவுகள். இக்கதை குடும்பத்தில் அரசியல், சமூகத்தின் தாக்கத்தை பற்றி பேசும் நாவல். ஒரு குடும்பக்கதையாக ஆரம்பித்து ஒரு அரசியல் கதையாக முடிகின்றது.
பொன்னா என்னும் ஒரு பாட்டியின் இறுதி நாட்களில் ஆரம்பிக்கும் கதை, முன்னும் பின்னும் போகின்றது. பொன்னாதான் மையம். பொன்னாவின் தாத்தாவின் கதையில் ஆரம்பித்து, பொன்னாவின் எள்ளு பேத்தி பிறக்கும் வரை போகின்றது. மிகப்பெரிய நாவலாக போயிருக்க கூடிய அபாயம் இருந்தும், சுருக்கமாக தாவி தாவி செல்கின்றது.
கதை நேர்கோடாக செல்வதில்லை. முன்னும் பின்னும் நடக்கின்றது. பொன்னாவின் தாத்தா ஒரு ஜோசியர், அப்பா ஒரு சமையல்க்காரர், கணவன் ஒரு சாப்பாட்டு ராமன். குடும்பத்தின் ஒரு சாபக்கேடு, அகால, துரித மரணம். பொன்னாவின் பிள்ளைகள் நம்மாழ்வார், பட்சிராஜன், ஆண்டாள். நம்மாழ்வாரின் மனைவி ஒரு குழந்தையை பெற்று இறக்க, ஆழ்வார் எங்கோ போகின்றார். ஆண்டாளின் கணவன் கலியாணம் ஆன வேகத்தில் இறக்கின்றான். ஆண்டாளுக்கு துணை மதுரகவி; நம்மாழ்வாரின் மகன். அவனும் அகாலத்தில் இறக்க, அவனின் மகன் நம்பி, பட்சியின் மகன் திருமலையால் வளர்க்கப்படுகின்றான். நம்பி, திருமலையின் பிள்ளைகள் கண்ணன், ராதா, நம்பியின் மனைவி ரோசா, மகள் இந்து, கண்ணனின் காதலி உமா இவர்கள் கதையில் வரும் இறுதி தலைமுறையினர். நம்பி இறப்பதுடன் கதை முடிகின்றது.