பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10 செப்டம்பர் 2015

உப்புவேலி - ராய் மாக்ஸிம்

வரலாற்று பாடம் என்பது எனக்கு எப்போதும் தலைவலியை தரும் ஒன்று. குறிப்பாக வருடங்கள். ஆறாம் வகுப்பிலோ, எட்டாம் வகுப்பிலோ, ஒரு பெரிய பகுதி. இந்திய வரலாற்றை முழுவதும் கரைத்து புகட்டும் ஆர்வத்தில் எவரோ தயாரித்தது. ஏகப்பட்ட வருடங்கள், காந்தி இர்வின் ஒப்பந்தம், மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம். தேர்வில் அப்படியே எழுதுவது என்பது, புத்தகத்தை வைத்துக் கொண்டு கூட சாத்தியமில்லாதது. என்னைப் பலரின் தூக்கத்தை கெடுத்த , பத்தாம் வகுப்பு வரை  படித்த வரலாற்றில் ஒரு வரி கூட இல்லாத ஒன்றை பற்றி பேசுகின்றது இந்த புத்தகம்.

ராய் மாக்ஸம் என்னும் ஆங்கிலேயேர் எழுதிய THE GREAT HEDGE OF INDIA என்னும் நூலின் தமிழாக்கம். தமிழில் சிறில் அலெக்ஸ் மொழி பெயர்த்துள்ளார். இப்புத்தகம் வெளிவந்த பொழுதே ஜெயமோகன் இதைப் பற்றி சிறந்த அறிமுகத்தை தந்திருந்தார். ஆங்கிலத்தை விட தமிழில் படிப்பது எனக்கு சுலபமாக இருந்தது.

இணையத்தில் கண்டதையும் படிக்க ஆரம்பித்த புதிதில் தன் விஷயங்கள் புரியாமல் இருந்தன. முக்கியமானது பலருக்கு இருக்கும் இந்திய வெறுப்பு. அவர்களை பொறுத்த வரை இந்தியா எப்போதும் சிறப்பாக இருந்ததே இல்லை. ஆங்கிலேயர்கள் வந்த பின்னால் தான் இந்தியா பல துறைகளில் முன்னேறியது. எப்படி சிலரால் அந்தளவிற்கு முட்டாள்த்தனமாக யோசிக்க முடியும் என்பது ஆச்சர்யமாகவும், பின்னர் வேடிக்கையாகவும் இருந்தது.

09 மார்ச் 2013

உதயசூரியன் - தி. ஜானகிராமன்

உதயசூரியன் உதிக்கும் நாடு ஜப்பான். ஜப்பானுக்கு சென்ற ஜானகிராமனின் அனுபவங்கள்தான் உதயசூரியன். ஜப்பானுக்கும் நமது பாரதம் போல நீண்ட பாரம்பர்யம் உண்டு. அணுகுண்டு என்னும் பெரிய அடிக்கு பின் அவர்களின் முன்னேற்றம் அளப்பரியது. எலெக்ட்ரானிக்ஸ் துறையிலும், விவசாயத்திலும் அவர்களின் நவீன் உத்திகள் மற்றவர்களை விட ஒரு மேலானாதாகவே இருக்கின்றது.

ஜப்பானில் போய் வத்தல்குழம்பு சாப்பிட்ட கதை மட்டும் இல்லை. ஜப்பானைப் பற்றி பல செய்திகளை கூறுகின்றார். வெறுமனே கூறிக் கொண்டு சென்றால் டாக்குமென்டரி படம் பார்த்த மாதிரி இருக்கும். ஆனால் தி. ஜாவின் பண்பட்ட எழுத்தில் அது அழகான சிறுகதை போல அமைந்துவிட்டது. 

கட்டுரை ஏதோ பத்திரிக்கையில் தொடராக வந்துள்ளது போல, ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சின்ன அழகான முடிவுடன் அமைந்துள்ளது. ஜப்பானிற்கு சென்றாலும் அங்கும் நாம் காண்பது மனிதர்களைத்தான். அனைத்து மனிதற்களுக்கும் உள்ள உணர்ச்சிகள் அவர்களுக்கு உண்டு, ஆனால் ஜப்பான் என்னும் தேசம் அவர்களை எப்படி வடித்துள்ளது என்பதை காட்டுகின்றார். அதனுடன் ஜப்பானை பற்றியும் அதன் அழகையும் பழமையையும் நகைச்சுவையுடன் எழுதியுள்ளார்.

ஜப்பான் போக விமானத்தில் ஏறும் போது ஆரம்பிக்கின்றது. விமான பயம் என்பது பொதுவானது, அந்த பயத்துடம் ஆரம்பிக்கும் அவரது பயணம் அதே விமானத்தில் ஒரு அழகான சிறுகதைக்கான முடிவுடன் நிறைவடைகின்றது. 

22 ஜனவரி 2013

நடந்தாய் வாழி காவேரி - தி. ஜா, சிட்டி

எப்போதும் போல சுயபுராணத்துடன் ஆரம்பிக்கின்றேன். என்னிடம் எனக்கு தெரிந்த ஒரு நல்ல குணம், அடுத்தவரைப் பார்த்து பொறாமை படும் குணம் இல்லை, அவரிடம் உள்ளது நம்மிடம் இல்லையே என்று யோசித்ததில்லை, நமக்கு தேவையானது நம்மிடம் உள்ளது என்று திருப்தி படும் ஜாதி. ஆனால் இரண்டு விஷயங்களை கண்டால் மட்டும் ஒரு பொறாமை, அல்லது ஒரு வயித்தெரிச்சல் என்று கூட சொல்லலாம்.

ஒன்று காடு மலை என்று சுற்றித்திரிபவர்களையும், இசையை அதன் நுணுக்கத்துடன் அனுபவித்து ரசிப்பவர்களையும் கண்டால், என்னால் அது முடியவில்லை என்று  கண்டிப்பாக ஒரு பொறாமை ஏற்படும். டபுள் வயித்தெரிச்சல் இப்புத்தகத்தை படித்து. 

என் சொந்த ஊர் ஒரு காய்ந்த பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் என்றாலும், அது ஒரு மழை மறைவு பிரதேசம். எங்களூரிலிருந்து ஆறு கி.மீ சென்றால் முல்லையாறு, ஒரு முறைகூட அதில் குளிக்கும் பாக்கியம் கிடைத்தில்லை. ஊரிலிருந்த பத்தொன்பது வருடங்களும், வீடு, பள்ளி, புத்தகங்கள் (பாட புத்தகங்கள் அல்ல) என்றே இருந்துவிட்டேன். ஊரிலிருந்த மலையில் கூட ஏறியதில்லை. ஆனால் அனைத்தையும் செய்ய ஆசை உண்டு. அந்த ஆசை இப்புத்தகம் மூலம் நிறைவேறியது.

பயணங்களைப் பற்றி படித்தது என்றால் வெகு குறைவு. எஸ். ரா விகடனில் எழுதியது, அது எனக்கு போரடிக்க ஆரம்பித்து. ஒரு கிராமத்தில் ஆட்டு மந்தை கடந்து செல்வதை சிலாகித்து பத்து பக்கம் எழுதினால் எப்படி படிப்பது. அதன் பின் ஜெ.மோ எழுதும் பயணக்கட்டுரைகள், படிக்கும் போதும், படங்களை பார்க்கும் போதும் நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். இப்போது கூட அவரது குகைப்பயணத்தை படித்து காதில் புகைவருகின்றது. என்ன செய்ய? 

02 அக்டோபர் 2012

ஒற்றன் - அசோகமித்திரன்

18வது அட்சக்கோடு படித்ததும் அசோகமித்ரனின் நூல்களை வாங்க ஆரம்பித்தேன். பெரும்பாலானவர்கள் ஒற்றனைப் பற்றி சிலாகித்து கூறியிருந்தனர். ஒற்றன் என்ற தலைப்பு எதோ உளவாளியைப் பற்றிய் கதை என்று தோன்றவைக்கின்றது. படித்தபின் தான் தெரிந்தது இது வேறு வகை, அமெரிக்கா சென்று "டகரஜான்" ஆன அசோகமித்திரனின் பயணக்கதை என்று. அவர் இதை புனைகதை என்கின்றார். சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் போல இதுவும் நிஜமும் கற்பனையும் கலந்த கலவையாகத்தான் இருக்கும்.

அசோகமித்திரன் ஒரு எழுத்தாளர் சந்திப்பிற்கு அயோவா சிட்டிக்கு சென்று 7 மாதங்கள் தங்கியிருந்த அனுபவங்களை கதையாக்கி தந்துள்ளார். இது நாவல் எனப்படுகின்றது, இந்த வடிவத்தில் நான் படித்த முதல் நாவல் என்பதால் இது எப்படி நாவலகும் என்ற குழப்பம் இன்னும் உள்ளது. ஒவ்வொரு அந்தியாயமும் அதனளவில் முழுமையானது. தனியாக எடுத்தால் ஒரு சிறுகதையாகும், முதலிரண்டு அந்தியாயங்களைத் தவிர மற்ற பகுதிகளை வரிசை மாற்றினாலும் வடிவம் கெடாது.