காட்டை பற்றிய கனவு சிறிய வயது முதல் உண்டு. மலையடிவார கிராமம் என்றாலும், மலை மேல் ஏறியதில்லை. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார கிராமம், ஆனால் காடு என்று ஏதுமில்லை. சோம்பேறித்தனத்தாலும், இது போன்ற விஷயங்களுக்கான தகுந்த துணையில்லாததாலும், வீட்டில் உதை கிடைக்குமென்பதாலும் அந்த பக்கம் போனதில்லை. இருந்தும் காட்டை பற்றி பல கதைகள், சாகச கதைகள் எல்லாம் படித்து படித்து ஒரு மயக்கம் உண்டு.
சில சந்தர்ப்பங்களில் காட்டை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தும் ஏமாற்றம் தான். சுருளி அருவி பகுதி நல்ல அடர்ந்த காட்டு பகுதி. ஆனால் எங்கும் நுழைய முடியாத படி வனத்துறை கட்டுப்பாடு உண்டு. தப்பித்தவறி சென்றாலும் பாட்டில்கள் காலை கிழிக்கும் அபாயமுண்டு. குற்றாலம் பற்றி பெரிய கனவுடன் சென்ற எனக்கு, மெயினருவி தந்தது ஏமாற்றம். மரங்களுக்கு நடுவில் சத்தத்தை மட்டும் முதலில் காட்டி சுருளி அருவி தரும் அந்த தரிசனம் இதிலில்லை. மொட்டை பாறையில் கடைகளுக்கு நடுவிலிருக்கும் அருவி எனக்கு பிடிக்கவில்லை, ஒரு குரங்கு கூட இல்லாத அருவி என்ன அருவி.
பெங்களூருக்கு வந்த பின் அலுவலக நண்பர்கள் மலையேற்றத்திற்கு அழைத்தனர், ஆர்வத்துடன் சென்று காரிலிருந்து இறங்கி பார்த்தவனுக்கு அதிர்ச்சி. ஒரு பெரிய மொட்டை மலை. காட்டு ஆசை கொஞ்சம் பூர்த்தியானது கோவா சென்ற போது. யூத் ஹாஸ்டல் அசோசியேஷன் ஏற்பாடு செய்த மலையேற்றம், ஓரளவிற்கு காட்டு ஆசையை திருப்தி செய்தது. ஓரளவிற்கு அடர்ந்த காடு, எப்போதும் ஒரு பக்கத்தில் சிறிய ஓடை, குளிர்.