கி. ராஜநாரயணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கி. ராஜநாரயணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 டிசம்பர் 2021

வயது வந்தவர்களுக்கு மட்டும் - கி.ராஜநாராயணன்

 வயது வந்தவர்களுக்கு மட்டும் - கி.ராஜநாராயணன்

தலைப்பே சொல்லும் என்ன மாதிரியான புத்தகம் என்று. பின்னடித்து ரகசியமாய் தொங்கவிடும் புத்தகமல்ல. 

மெலிதான காமம் கலந்த கதைகள் பல படித்திருப்போம், காமத்தை அடிப்படையாக கொண்டும் கொஞ்சம் பலான புத்தகங்களுக்கு நெருங்கி வரக்கூடிய புத்தகங்களும் உண்டு, படிப்பவர்களை அதிர்ச்சியாக்கவே வலிய புகுத்திய கதைகளும் உண்டு. இவை அந்த மாதிரியல்ல.

கிராமத்து பக்கங்களில் சில வசவுகள், சில பழமொழிகளை ஆராய்ந்தால் அதன் பின்னால் ஏதாவது ஒரு விவகாரமான கதை இருக்கும். விக்கிரமாதித்யன் கதைகளில் பல கதைகள் ஆண் பெண் உறவை அடிப்படையாக கொண்டவை. கிராமப்பக்கம் இருக்கும் இது போன்ற கதைகளை தொகுத்து புத்தகமாக்கியிருக்கின்றார் கி.ரா.

ஆண் - பெண் உறவை மையமாக கொண்ட குட்டி குட்டி கதைகள். பச்சையான வார்த்தைகள் இல்லாமல், குறிப்பு மொழியில் சொல்லப்படும் கதைகள். கெட்ட வார்த்தை கதைகள் என்று அழைக்கின்றார்.

பல கதைகள் பெண்களை மையப்படுத்தியே இருக்கின்றது. கணவனை விட்டு வேறு ஆண்களுடன் தொடர்பு கொள்ளும் பெண்கள், கல்யாணம் கட்டியும் ஒன்றும் தெரியாத ஆண்கள் என்று. இது மாதிரியான கதைகளின் உண்மையான மூல கதை சொல்லி ஆணா, பெண்ணா என்பது சுவாரஸ்யமான கேள்வி. பெரும்பாலான கதைகள் நகைச்சுவை கதைகள்தான். கொஞ்சம் விரிவாக்கப்பட்ட அடல்ட் ஜோக்.

சில கதைகளை படிக்கும் போதே அதன் வேறு திரிபுகளை நாம் கேள்விப் பட்டிருக்கலாம் அல்லது ஏதாவது புராணங்களில் இருந்த கதையை கொஞ்சம் மாற்றி பரப்பியிருக்கலாம்.இவை பெரும்பாலும் வாய் மொழியாகவே வளர்ந்த கதைகள், ஒருவரிடம் இருந்து இன்னொருவரிடம் போகும் போது மாறுதலடைந்து செல்லும். கி.ராவே தாத்தா, அவர் யாரோ ஒரு தாத்தாவிடம் கேட்ட கதைகள் என்கின்றார். நாட்படு தேறல் போல. 

முன்னுரையில் ஏன் இந்த புத்தகத்தை தொகுத்தேன் என்று நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார். படிப்பவர்கள் பலரும் இதை வெளியில் சொல்ல மாட்டார்கள், ரகசியமாக வைத்து கொள்வார்கள் என்கின்றார். முன்பு இருக்கலாம். இது கேம் ஆஃப் த்ரோன்ஸ், நெட்ஃப்ளிக்ஸ் காலம். கிண்டிலில் தமிழ் புத்தகங்களை தேடினால், ஏராளமாக கண்ணில் படுகின்றது. அந்த குப்பைகளுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்றால், இதில் உள்ள ஒரிஜினாலிட்டி, பல ஆண்டுகாலம் புழங்கியதன் தரம். 

22 ஜூன் 2016

கோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநாராயணன்


கோபல்ல கிராமம் நாவலின் தொடர்ச்சி. 

ஒரு எழுத்தாளர், ஒரு கான்செப்ட் வெற்றி பெற்று விட்டால் உடனே அதை பயன்படுத்திக் கொள்வதில் விகடன் எப்போதும் முந்திக்கொள்ளும். ஆனால் அது பெரும்பாலும் முதல் முயற்சி பெற்ற வெற்றியை அடையாது. ஒரு செயற்கைத்தனம் வந்துவிடும். சுகா எழுதிய தொடர் ஒரு உதாரணம். கோபல்ல கிராமம் நாவலுக்கு அடுத்து எழுதப்பட்டது இது. முதல் நாவலில் இருந்த அந்த உயிரோட்டம் இதில் இல்லை என்பது என் கருத்து.

முதல் நாவலை ஒப்பிடாமல் இதை பற்றி மட்டும் பேசுவது என்பது முடியாது. 

முதல் பகுதி மட்டும் முந்தைய பகுதியின் தொடர்ச்சி போல இருக்கின்றது. இரண்டாம் பகுதி எங்கெங்கோ சுற்றி வருகின்றது. பம்பாயில் நடந்த மாலுமிகளின் கலவரம் எல்லாம் சுவாரஸ்யமாக இருந்தாலும் ஒட்ட மறுக்கின்றது.

முதல் பகுதியில் வரும் அந்தசில்லுவின் கதை சுவாரஸ்யம், உயிரோட்டமாக உள்ளது. அதில் வரும் காரியின் கதை போனஸ். வெட்டுக்கிளிகளின் அட்டகாசம் காவல்க்கோட்டத்திலும் வரும் ஒரு சம்பவம், நான் ஏதோ ஒரு இடத்தில் நடந்திருக்கும் என்று நினைத்தல், அது ஒரு தமிழகத்திம் பல இடங்களை பாதித்திருக்கின்றது போல. முதல் பகுதி முழுவதும் கோபல்ல மக்களின் வாழ்க்கை, குடும்பம் என்று போகின்றது.

இரண்டாம் பகுதி அவர்களின் சமூக வாழ்வை பெசுகின்றது. வெள்ளையன் கொண்டுவந்த புதியவிஷயங்களின் மக்களின் தயக்கம், தயங்கியவர்களே பின்னர் அதில் மூழ்கிய விந்தை, ஜாதி, வர்க்கம் பற்றிய மக்களின் புரிதல்களின் மாற்றம். 

சுதந்திரப்போராட்டத்தின் ஆரம்ப வீரர்களை பற்றிய கதைக் குறிப்புகளும் கிடைக்கின்றன. காந்தியடிகளை பற்றிய விமர்சனம், பாமர மக்களிடையே இருந்த அவரது பிம்பம்.

ஆனால் தீடிரென வரும் பம்பாய் மாலுமிகளின் போராட்டம் துண்டாக தெரிகின்றது. 


கோபல்ல கிராமத்தில் கிடைக்கும் ஒரு அனுபவம், கோபல்ல கிராமத்து மக்களிடம் கிடைக்கவில்லை என்பது உண்மை.

20 டிசம்பர் 2015

கோபல்ல கிராமம் - கி. ராஜநாராயணன்

சில புத்தகங்கள் ஒரே மூச்சில் படிக்க வைக்கும். புத்தகம் சிறியதாக இருக்கலாம், இல்லை புத்தகம் சுவாரஸ்யமாக இருக்கலாம். சில புத்தகங்கள் பெரிதாக இருந்தாலும் நம்மை கீழே வைக்க விடாது. சமீபத்தில் படித்த இரண்டு புத்தகங்களும் இரண்டு வகை. ஒன்று வெண்முகில் நகரம். வைக்க மனமின்றி, கிடைத்த நேரத்திலெல்லாம், இரவெல்லாம் படித்து மூன்றே நாட்களில் படிக்க வைத்தது. இரண்டாவது கோபல்ல கிராமம்.  சிறிய புத்தகம், ஒரே நாள் விடுமுறையில் படித்து விடலாம். சில மணி நேரங்களே போதும்.

புத்தகம் சிறியது என்பதால் மட்டுமல்ல, சுவரஸ்யத்தாலும்.

கி.ராஜநாரயணன் என்ற பெயர், விகடன் மூலமே பரிச்சியம். ஒன்றிரண்டு சிறு கதைகள் படித்த நினைவு. ஒரு கிராமத்து பெரியவரின் புகைப்படம். ஏற்கனவே படித்த எழுத்தாளர்களில் இருந்து புதிய எழுத்தாளர்களை படிக்கும் முயற்சியில் கி.ரா.

கரிசல் மண் எழுத்தாளர், கிராமத்து கதைகளை எழுதுபவர். அவரது புகழ் பெற்ற புத்தகம் கோபல்ல கிராமம். இக்கதையையே அவர் ஒரு ஆயிரம் பக்கத்திற்கு, ஆழி சூழ் உலகு, கொற்கை, காவல் கோட்டம் வகையில் எழுதியிருக்கலாம். ஆனால் சுருக்கமாக ஒரு நூறாண்டுகால வரலாற்றை காட்டியிருக்கின்றார்.