03 செப்டம்பர் 2021

பொன்னியின் செல்வன் - கல்கி

பொன்னியின் செல்வனைப்பற்றி யாரும் எழுதாத ஒன்றை எழுதிவிடுவது கடினம். பொன்னியின் செல்வனை வருடம் ஒருமுறையாவது படிப்பது வழக்கம். எப்போது படிப்பது என்பது மனநிலையை பொறுத்தது. ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றால் பொன்னியின் செல்வன் நினைவு வராமல் போகாது. இந்த முறை மணிரத்னம் எடுக்கும் பொன்னியின் செல்வன் திரைப்பட நடிகர்கள் பற்றி வெளிவந்த செய்திகள் மீண்டும் படிக்க வைத்தது. 

பொன்னியின் செல்வனை முதல்முதலில் படிக்கும் போது வயது பதினொன்று. ஏழாம் வகுப்பு, ட்யூஷன் முடித்து வரும் வழியில் நூலகம். பொன்னியின் செல்வன்,வீட்டிற்கு கொண்டுவந்து படித்தேனா இல்லை அங்கேயே படித்தேனா என்று நினைவில் இல்லை. கடைசி அத்தியாயத்தை எவனோ ஒரு பரதேசி கிழித்து வைத்திருந்தான். பிறகு பல ஆண்டுகள் படிக்க முடியாமல், பத்தோ, பதினொன்றோ படிக்கும் போது நண்பனின் உறவினர் ஒருவர் வீட்டில் இருந்தது என்று கேள்விப் பட்டு சென்று கேட்டேன். யாரிடமும் எதையும் இரவலாக கேட்டதில்லை. இரண்டே புத்தகங்கள் இது ஒன்று, தில்லானா மோகனாம்பாள் இன்னொன்று. பயங்கர பிகு. ஒவ்வொரு பாகமாகத்தான் கொடுப்பேன், ஒன்றை படித்து முடித்து தந்தால்தான் அடுத்த பகுதியை தருவேன். நல்லவேளை படித்த பகுதியில் பரிட்சை வைப்பேன் என்று சொல்லவில்லையே என்று சந்தோஷமாக இருந்தது. ஒரே வாரத்தில் படித்து முடித்தேன். சில புத்தகங்கள் படிக்கும் போது மனதில் ஒரு ஜிலுஜிலுப்பு உண்டாகும், அதில் ஒன்று பொன்னியின் செல்வன். மோகமுள் மற்றொன்று. 

கல்லூரி படிக்கும் போது தொடராக கல்கியில் வந்து கொண்டிருந்தது. எனக்காகவே என் மாமா வாங்கினார். அதிலும் பிரச்சினை இரண்டாம் பாகம் பாதி சென்றபிறகு வாங்க ஆரம்பித்தார். அவரே எனக்காக முதல் பாகம், கல்கியில் வந்த தொடரே பைண்ட் செய்யப்பட்டதை மதுரையில் வாங்கி தந்தார். உள்ளே ஒரே ஒரு அத்தியாயம் மட்டும் பத்மவாசனின் படங்கள் இல்லாமல், முதன் முதலாக தொடர் வெளிவந்த போது வரைந்த மணியத்தின் படங்களுடன். முதல் முறை கல்கியில் வந்த அத்தியாயத்தை எப்படியோ அதில் சேர்த்திருந்தனர். ஆழ்வார்க்கடியான் பழையாறை அரண்மனையில் இருக்கும் பகுதி. கல்லூரி முடிந்து சென்னை வந்த பின்னும் ஊருக்கு வரும் போது எல்லாம் அனைத்தையும் சேர்த்து வைத்து பைண்டிங் செய்த புத்தகம்தான் இன்றும் இருக்கின்றது. இரண்டாம் பாகம் அதே கல்கி பைண்டிங்க் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும். எங்காவது பழைய புத்தக கடையில் தேட வேண்டும். அந்த புத்தகத்தை எடுத்து படிக்கும் போதே ஒரு குஷி, அந்த பழைய பேப்பரின் வாசனை, படங்கள் என்று தனி உலகில் சில நாட்கள் திரிய முடியும். அவை அனைத்தும் பெங்களூரில் மாட்டிக் கொண்டதால், கிண்டிலில் தான் படிக்க முடிந்தது.