மழைப்பாடலின் அரசியல் விளையாட்டிற்கு பின் வரும் நாவல். மனித உணர்ச்சிகளும், அரசியலும் கலந்த நூல்.
இந்த நூலில் கதை சொல்ல ஒரு வித்தியாசமான முறையை எடுத்து கொண்டுள்ளார். இளநாகன் என்னும் பாணன், தென் தமிழகத்திலிருந்து அஸ்தினாபுரியை நோக்கி பயணிக்கின்றான். அவன் வழியே கதை சொல்லப்படுகின்றது. உண்மையான அஸ்தினாபுரியை விட பாணர்கள் உண்டாக்கிய அஸ்தினாபுரிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக காட்டுகின்றார். இள நாகனின் வழி அக்கால பாரத்தின் பகுதிகளை காட்டுகின்றார். மாறும் அரசுகள், உணவு பழக்கங்கள், கால நிலைகள், வணிகங்கள், கட்டிடக்கலை, வெவ்வேறு வழிபாட்டு முறைகள் என்று ஒரு பெரிய சித்திரத்தை தருகின்றார் ஆசிரியர். இளநாகனின் காலமும், மகாபாரத்தின் காலமும் வெவ்வேறு என்பதை சிறு சிறு குறிப்புகள் மூலம் தெளிவு படுத்துகின்றார்.
வெண்முரசில் வரும் பாத்திரங்களின் மாற்றமே மிகவும் கவனிக்கத்தக்கது. மனித மனங்களின் கோணல்களை மிக தெளிவாக காட்டுகின்றது. நூறு சதம் நல்லவன் நூறு சதம் கெட்டவன் என்று யாரும் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலை ஒருவனை மாற்ற முயலும், மனதில் உறுதியுள்ளவன் அதிலிருந்து தப்பிக்கலாம், இல்லை அதனுடன் சென்று ஓடலாம். துரியோதனன் பீமன் வரும் ஆரம்ப காட்சிகள் மெதுவாக மாறி இருவரும் மாறும் இடம், தர்க்க ரீதியாக விளக்கப்பட்டுள்ளது.