அலுக்காமல் பார்த்து ரசிக்க கூடிய விஷயங்கள் என்று சில உண்டு. குழந்தை. யானை. கடல். அதில் ஒன்றான யானையை பற்றிய கதை. யானை என்னும் ஒரு மிருகத்தை இத்தனை நெருக்கமாகவும், அதன் மனதை படிப்பவர்களும் உணரும் படி படைக்க முடியுமா என்ற பிரமிப்பு படித்து முடித்த பின்னும் போகவில்லை.
யானையை ரசிப்பது என்பது ஒரு குழந்தையை ரசிப்பது போலத்தான். யானையின் செய்கை எல்லாம் ஒரு கபடமற்ற குழந்தையின் செய்கை போலத்தான் தோன்றும். அவ்வளவு பெரிய உருவம் ஒரு சின்ன சங்கிலிக்கு கட்டுப்பட்டு அடங்கி இருப்பது என்பது ஒரு பார்வைக்குதான். அது நினைத்தால் அச்சங்கிலி தூள்தூளாகும். காட்டிலிருந்தாலும் நாட்டிலிருந்தாலும் யானை யானைதான். அது போனால் போகின்றது என்று மனிதனுக்கு கட்டுப் பட்டு இருக்கின்றது.
கேசவன் கஜராஜ கேசரி. திருவனந்தபுர மன்னரின் தோழன். அவனின் பாகன்களில் ஒருவன் பரமன். பரமன்தான் கதை சொல்லி. மொத்தம் ஐந்து அந்தியாயங்கள். தவறுதலாக குழியில் விழுந்த யானை அக்குழியிலியே பிரசவித்த குட்டி. குட்டி கொஞ்சம் வளர்ந்ததும் அரச கொட்டடிக்கு வருகின்றது. யானை வந்த வேளையில் நோய்வாய்ப்பட்ட தம்புரான் எழுந்து நடக்க, யானை அவரின் தோழனாகின்றது. வளர்ந்ததும் திருவெட்டாறு கோவிலிக்கு விடப்படும் கேசவன், தம்புரான் பட்டத்திற்கு வந்தது அதுவும் ஒரு பட்டத்து யானையாக மாறுகின்றது. கடைசியில் தம்புரான் மறைந்ததும், பட்டத்திலிருந்து கீழே இறங்கி வருகின்றது.
கதை என்று பெரிதாக ஒன்றுமில்லை என்றாலும் அது காட்டும் உலகம் வித்தியாசமானது. சாதரணர்கள் காண, கண்டிருக்க முடியாத உலகம். யானை, யானை வளர்ப்பு, யானைகளின் சுபாவம் என்று ஒரு சரடு. யானைகளுடனே வாழும் பாகன்களின் உலகம் என்று ஒரு சரடு.இரண்டிற்கும் ஊடே அதிகாரம் என்னும் ஒரு சரடு. இது அனைத்தும் பின்னி பிணைந்ததுதான் மத்தகம்.
மத்தகம் என்பது பாகன் அமரும் இடம். கேசவன் அம்மத்தகத்தில் யாரையும் அமர விடுவதில்லை. தம்புரானை மட்டுமே அவ்விடத்தில் அனுமதிக்கும். கதை உள்ளே பேசுவது அதிகாரத்தை பற்றி. தம்புரானின் தோழனாக இருக்கும் போது கம்பீரமாக ஒரு ராஜாவைப் போல இருக்கும் கேசவன், தம்புரான் இல்லை என்று தெரிந்ததும், அதிகார மாற்றத்தை உணர்ந்து சாதரண பாகனிடம் தன்னை ஒப்படைத்து கீழ்படிவதாக மாறுகின்றது. கஜகேசரியாக இருக்கும் வரை பாகனின் தவறுக்காக அவனை நெருங்க விடாத கேசவன், அவனை தன் மத்தகத்தில் ஏற்றி வைத்துக் கொள்கின்றது.
பாகன்களின் வாழ்க்கை. யானையின் காலடியில் வாழ்வது என்பது மரணத்துடன் இருப்பது போலத்தான். யானை கோபம் கொண்டால், ஒரு வினாடி போதும் பாகன் போய் சேர வேண்டியதுதான். பாகனின் சொல் பேச்சு கேட்கும் யானை எப்படி அவர்களை தாக்கும் என்பதற்கான் விடை இங்குள்ளது. பாகன்களின் பார்வையில் யானை, என்று அருமையாக காட்டியுள்ளார். கதை வெகுகாலத்திற்கு முன்பு நடக்கின்றது. பாகன்களின் பரிதாப நிலையை விட அவர்களின் மனைவிகளின் நிலை, எப்போது வேண்டுமானாலும் வாழ்க்கை பறி போகும் அபாயம், அதன் பின்னால் வாழ வேண்டிய கட்டாயம், அதற்காக அவர்கள் தரும் விலை.
முக்கியமானது யானையின் குணாதியங்கள். காட்டிற்கு ராஜா சிங்கம் என்கின்றார்கள். உண்மையான ராஜா யானைதான். சிங்கம் ஒரு சோம்பேறி வேறு. யானையின் கம்பீரம், பலம் அனைத்தையும் விட அப்பலத்தை தன் கட்டிற்குள் வைத்திருக்கும் மனம். காட்டில் வாழும் மிருகங்களில் அசாத்தியமான நினைவாற்றலுடனும், பலத்துடனும், புத்திசாலித்தனத்துடன் இருக்கும் ஒரே மிருகம் யானைதான். எல்லா யானையும் ராஜா இல்லை. அனைவரும் தலைவராக முடியாதல்லவா. கேசவன் அப்படிப்பட்ட தலைவன். கஜராஜன். கேசவன் அவனுக்கு முந்தைய கஜராஜனான நாரயணனை கண்டு பயந்தாலும் அதை சீண்டிபார்க்கின்றான். கேசவனை சீண்ட கடைசியில் கொச்சு கொம்பன் வருகின்றான்.
ஜெ.மோவிற்கு யானை என்றால் மிகவும் பிடிக்கும் போல. காடு நாவலில் வரும் கீறக்காதன், குட்டப்பன் யானையை பற்றி பேசும் விஷயங்கள். யானை டாக்டர். விஷ்ணுபுரத்தில் வரும் வீரன், பைரவன். ஊமைச் செந்நாயில் வரும் கொம்பன், மண் கதையில் வரும் இன்னொரு கொம்பன் என பல யானைகள். ஆனால் கதை முழுக்க வந்து கதையையே தன் மத்தகத்தில் கொண்டு செல்வது இந்த கேசவன் மட்டும் தான்.
ஜெயமோகனின் கதைகளில் என்னை அதிகம் கவர்வது இது போன்ற கதைகள்தான். காடு, மலை, தொன்மம் போன்ற விஷயங்களை இவரை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. ஒரு யானையுடன் ஒரு மணி நேரம் பயணம் செய்த உணர்வை தருகின்றது இக்கதை.
கதை ஜெ.மோ தளத்தில்